Sunday, December 24, 2023

கல்லறையில் மட்டும்

ஏறத்தாழ 49 வருடங்களுக்கு முன்னால் பதின்ம வயதுகளில் இருந்த‌ என் நண்பன் ஒருவன் தனக்குக் காதல் கடிதம் எழுதிய ஒரு பதின்ம வயதுப் பெண்ணுக்கு எழுதிய பதில் கடிதத்தின் தழுவலில் என் மன உணர்ச்சிகளைக் கொட்டிய போது உதிர்ந்ததிந்தக் கவிதை.

சம்பவம் உண்மை, வரிகள் மட்டும் கருத்டோடு முகிழ்த்த கற்பனை

கல்லறையில் வாழும் ......

========================

உன்
விழிகளின் அசைவிலே
என்
நினைவுகள் உன் நெஞ்சினில்
வாழ்வதை
நீ
சொல்லாமலே , நான்
புரிந்து கொண்டேன்

ஏக்கத்தின் ஆழம் தந்த‌
தாக்கத்தினால்
உன் விழிகள்
தூக்கத்தை மறந்ததை நான், உன்
பார்வைகளின் நீளம் தந்த‌
தாக்கத்தினால்
உணர்ந்து கொண்டேன்

கருமை பூத்த வட்ட‌ விழிகளின்
வாட்டத்தை
அவைகளின் இமைகள் பூக்க மறந்ததினால்
அஞ்சுகமே ! நான்
அறிந்து கொண்டேன்

என்னிதயத்திம் மையத்தில் ஓர்
துளையிட்டு அதனுள்
உன் நினைவுகளை புதைத்துக் கொண்டேன்
பூத்திடும் எண்ணங்கள் யாவிலும் உன்
பூமுகம் தோன்றிட வேண்டும் என்பதனால்

சேர்ந்திட ஏங்கிடும் போதிலும்
சேந்திழையாளே  கூடிட‌ முடியவில்லை
காரணம் கேட்காதே ஏனெனில் நான்
காருண்யம் நிறைந்தவன்
கனிகை உந்தன் இதயத்தைன் தேன்கூட்டினைக்
கலைத்திடும் தைரியம் எனக்கில்லை

வாய்க்கொரு வகை வகை ருசியாய்
பசியாற்றிடும் கூட்டத்தின் மத்தியில்
பிறந்தவன் இல்லையடி நான்
மற்றவர் புசித்திட விழிகளில்
மாற்றிட  முடியாத வகை கண்ணீர்
ஊற்றிடும் ஏழையின் தோட்டத்தில்
சேற்றில் முளைத்த் தாமரை நான்
செந்தாமரை உன்னை அடைந்திட முடியாத‌
சோற்றுக்கு அல்லாடும் வறியவனேதானடி

கட்டாயத்தாலியின் உறவால்
கலந்திட்ட ஊடல்களின் கலப்பில்
உதிர்ந்து விழுந்தவொரு துரதிர்ஷ்டக் கட்டை நான்
உறவை முறித்துக் கொண்டு
உல்லாச வாழ்க்கையை நோக்கி பறந்த‌
உதவாத தந்தையின் பெயரை என் பெயரின் முன்னால்
போடடுவாழும் ஒரு முட்டாள்
கோபுரத்திலே வாழும் குமாரியின் மனதில்
ஊஞ்சல் கட்டி ஆட நினைக்கலமா?

எனக்காகத் தன்னைத் தேய்த்து
என் நினைவொன்றே தன் உயிராய்க் கொண்டு
எண்ணங்களை மட்டும் தாங்கிக் கொண்டு
என்றுமே வற்றாத கண்ணீருடன் வாழும் என்
உத்தமத்தாயின் கண்ணிரைத் துடைக்கும்
உயர்ந்த லட்சியத்தில் எஈயும் என் கூட‌
நீயும் சேர்ந்தே
உதைப்பட்டுப் போக வேண்டாம்

அதனாலே உன் எண்ணங்களை
நம் கண்கள் கலந்ததினால்
முகிழ்த்த காதல் செடியின்
மலர்களைப் பறித்து
கல்லறைக்குள் புதைத்து விட்டு
உனக்காக ஒரு மாடிவீட்டு
மாப்பிள்லையைத் தேடிக் கொள்

ஏனேன்றால் ....... கண்ணே
இவ்வுலகில் ஆசைகள் மட்டும் போதாது
ஆசைகளை வாழவைக்க
பேராசை மிக்க மனிதர்களின்
பணக்கற்றைகளும் தேவை

ஏழைகளின் காதல் .........
என்றுமே ..........
கல்லறையில்  மட்டுமே வாழும் ......

சக்தி சக்திதாசன்

Saturday, December 16, 2023

எமக்கான எம் கடமை

தெரியாத பாதை ஒன்றில்
தெரிகின்ற பயணமிது
புரியாத விளக்கமொன்றில்
புரிந்திட்ட புதையலிது
விடியாத இரவொன்றில்
விடிந்திட்ட வாழ்க்கையிது
புலராத பொழுதொன்றில்
புலர்ந்திட்ட உணமையிது
முடியாத கதையொன்றின்
முடிந்து விட்ட வினையிது
கேட்காத ஒலியொன்றின்
கேட்கின்ற நாதமிது
உருள்கின்ற உலகமதில்
உருட்டுகின்ற பகடையிது

நேற்றென்னும் புத்தகத்தில்
இன்றுணர்ந்த பாடங்கள்
நாளைய அனுபவங்களாய்
சேர்க்கின்ற அத்தியாயங்கள்
நிறைகின்ற செல்வமெல்லாம்
கரைகின்ற பொழுதொன்றில்
சுரக்கின்ற வெள்ளமாய்
இறைக்கின்ற உள்ளுணர்வுகள்
பூக்கின்ற மலர்களாய்
புண்ணிய பாவங்களென
செய்திட்ட செயல்களிலே
சேராமல் சேர்ந்திருக்கும்
நிலவோடும் பாதைதனில்
நீங்காத கனவுகளாய்
கண்ணோடு காட்சிகள்
காண்பவை கவிதைகளாய்

எனைமூடும் மேகங்களாய்
என்னுள்ளே எண்ணங்களாய்
எப்போதும் தவழ்ந்திருக்கும்
எதுவரையும் கூடவருமோ ?
நினைவுகளில் நீந்துகின்ற
நிமிடங்களுள் கலந்திருக்கும்
புனைவுகளில் வரிகளாய்
புனைந்திடும் கவிதைகளில்
கவிஞனெனும் போர்வைக்குள்
மனிதனிவன் உறக்கமிது
விழித்துக் கொள்ளும்
வேளைகளின் வெளிச்சமித
சொல்லச் சொல்லவேயென்றும்
மெல்லெனவே இனித்திருக்கும்

வாழ்வென்னும் பாதையிலே
வளைவுகளும் நெளிவுகளும்
சுழன்றடிக்கும் புயலாக
சூழ்ந்திருக்கும் நிகழ்வுகளும்
பயணமதன் பாதையிலே
பார்ப்பதெல்லாம்  அதிசயங்கள்
மீட்டிவிடும் ராகங்களாய்
மூண்டெழுந்திடும் உணர்வுகள்
யார்யாரோ வருகின்றார்
எதையெதையோ புகட்டுகின்றார்
கேட்பதெல்லாம் புரிந்துவிட்டால்
கிடைப்பதெல்லாம் ஞானமன்றோ !
நமக்கான நாமியற்றும்
நம்கடமை நம்மையறிவதே !

சக்தி சக்திதாசன்

Thursday, December 07, 2023

சில இரவுகள் சில நிலவுகள்

சில இரவுகள்   சில நிலவுகள்
வானமெனும் தேரெறி
பவனி வந்திடும் வெண்ணிலவு
சுரக்கப் பண்ணு ம் உணர்வுகள்
சுவையுறவே கலந்திடும்

பூரணமாய் ஓரிரவும்
பூஜ்ஜியமாய் ஓரிரவும்
விளக்கிடும் வாழ்வினை
விந்தைதான் எண்ணினால்

தேய்ந்திடும் பொழுதிலும் - பின்
வளர்ந்திடும் வேளையிலும்
வலம் வரும் பாதையில்
விளக்கிடும் நிகழ்வுகள்

கண்களில் காதலைத் தேக்கி
கலங்கிடும் கனிகையை நோக்கி
துலங்கிடும் நிலவொளி தாக்கி
விளம்பிடும் துயர்தனை நீக்கி

உறவுகள் தந்திடும் உறவு
உராய்ந்திடும் உணர்வின் துடிப்பு
ஊர்ந்திடும் நிலவினில் தெறிப்பு
உறக்கத்தில் கனவாய் வெடிப்பு

கிண்ண‌த்தில் குழைத்திடும் சோறு
அன்னத்தை  ஊட்டிடும் பேறு
அன்னையும் குழந்தையும் பாரு
அதற்கும் நிலவுதான் தேறு

நிலவின் பயணம் அதற்கு
நிழல்கள் இல்லை பாரு
நிலவின் காட்சிகள் நூறு
சாட்சியாய் கேட்போர் யாரு

நிலவினைத் தேடிடும் மனிதன்
நிம்மதி தொலைத்தது நிலவு
அமைதியாய்த் தவழ்ந்தது அன்று
அழித்திட்ட மானிடம் இன்று

உண்மையைச் சொல்வது பூரணை
பொய்மையாய்க் கரைவது அமாவாசை
இடையில் வளர்வதும் தேய்வதும்
இதுதான் வாழ்க்கையின் தத்துவம்

கண்களை மூடி நானும் தேடி
கண்டது நிஜமாய் வேறு
சில இரவுகள் சில நிலவுகள்
சில உணர்வுகள் சில கனவுகள்

சக்தி சக்திதாசன்

Tuesday, November 28, 2023

காலமெல்லாம் நிலைத்திருக்கும்

எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது

பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று

கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்

செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை

இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று

நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை

உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப்  பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்

சக்தி சக்திதாசன்

விடிந்தபின்னும் தூங்குமிந்தவியப்புநிறை மானிடர்கள்

சொல்லாத சொற்களுள்
நில்லாத உண்மைகள்
வெல்லாத பொழுதுகள்
கல்லாத பாடங்கள்

முட்களால் கீறிய
முழுதான ஓவியம்
வரைதாள் நெஞ்சமோ
வலிக்கின்ற வேளை

சிரிக்கின்ற உதடுகளுள்
சிக்கிக்கொண்ட பொய்மை
பார்க்கின்ற விழிகளினால்
புரிந்திட முடியவில்லை

உறவென்றும் பிரிவென்றும்
உண்மையும் பொய்மையும்
உலகத்தின் நாடகங்கள்
உணரும்போது உரசுமே !

திரைவிழுந்த பின்னாலும்
திடுக்கிடும் காட்சிகள்
நடிகர்கள் முன்நிகழும்
நயமான நிதர்சனங்கள்

உள்ளத்தின் ஆழத்தில்
உணர்வெழுதும் கதைகள்
வாசிப்போர் இல்லாத
வாசிகசாலை நெஞ்சமதோ ?

கொஞ்சமாய்ச் சொல்கிறேன்
நெஞ்சத்தின் ஓலத்தை
பொழிகின்ற ஞானமழை
பொட்டல்வெளி நிலமொன்றில்

சிந்திக்கும் வேளையதில்
சிறகடிக்கும் எண்ணங்கள்
சிற்பியிடம் உளியுண்டு
சிலைவடிக்க கைகளில்லை

சொல்லிவிட மொழியுண்டு
கேட்பதற்குச் செவியுண்டா ?
உண்மையான விடுதலையை
உணர்ந்திருப்போர் யாருமுண்டா ?

ஊமையான விழிகளோடு
உண்மையெங்கே பேசுமின்று ?
விடிந்துவிட்ட இரவொன்றில்
விளக்காக இருளெதற்கு ?

விடிந்தபின்னும் தூங்குமிந்த
வியப்புநிறை மானிடர்கள்
துளிர்க்கின்ற கவிதைகளுள்
தூங்குமந்த உண்மைகளும்

சக்தி சக்திதாசன்

Sunday, November 26, 2023

அறிந்தவர் வாழ்வினில் ஆனந்தம்

என்னைத் தாக்கிய கணங்கள்
என்னுள் விளைத்த ஏக்கங்கள்
ஏதோ புரிவித்த வாழ்வின் யதார்த்தங்கள்
எதைதையோ காண்பித்த வடிவங்கள்
யாரோடு யாரை யாராக இணைத்திட்ட
யாருமறியாத வாழ்வின் வேதங்கள்
யாத்திட்ட வாழ்வின் சாத்திரங்கள்
நீயென்றும் நானென்றும் புலர்ந்திட்ட 
நீங்காத உலகத்தின் பாத்திரங்கள்
தாங்காமல் தகித்திடும் உணர்வுகள்
தனியாக உணர்த்திடும் உண்மைகள்
தந்திடும் விளக்கத்தின் விடியல்கள்

திறக்கபடாமல் மூடிய பக்கங்கள்
இதயத்துள் புதைந்திடும் விந்தைகள்
நிறைக்கபடாத  பாத்திரத்துள் நீரது
தளும்புவதைப் போலவே நினைவுகள்
சூடிய பாத்திரத்தின் தன்மையை
தேடிய வேளைகளின் தேடல்களுள்
விதைக்கப்பட்ட உணர்வுகளின் தளிர்கள்
விருட்சமென விளைந்திடும் வாழ்க்கை
துறந்திடும் உறவுகளின் யாத்திரை
பிறப்பினில் வருபவைகள் மாத்திரம்
வரைந்திடும் சித்திரத்தின் கோடுகள்
வளைந்திடும் போதிலும் வடிவங்கள்

வெள்ளமாய் எண்ணங்கள் பாய்ந்து
உள்ளத்தின் கதவுகளை உடைத்து
சொல்லிடத் துடித்திடும் பொழுதினில்
மெல்லென விழித்திடும் கனவுகள்
சொல்லெனத் தவித்திடும் புனைவுகள்
வில்லெனப் புறப்படும் கவிதைகள்
எனக்கென நான் வடிக்கும் போதினில்
எங்கெங்கோ நெஞ்சத்தில் உரசிடும்
குழந்தையாய்த் தவழ்கையில் தஞ்சம்
வாலிப வனப்பினில் கெஞ்சும் 
குடும்பத்தின் சுமைகளில் மிஞ்சும்
குவலயக் கடமைகளே விஞ்சும்

வாழ்வினில் பலதூரம் ஓடியோடி
தேடிக்கொண்ட வசதிகளின் வழி
வாழ்கின்ற வாழ்வினை நிலையென
எண்ணிக்கொண்டு வாழ்கின்ற வேளை
உலகமெனும் நாடக.மேடையில்
உடலென்னும் உடை களையும் வேளை
விழுகின்ற திரையினை உணர்ந்தால்
விளங்கிடும் வாழ்க்கையின் சூட்சுமம்
நேற்றென்றும் இன்றென்றும் நாளையும்
நாள்தோறும் நிகழ்ந்திடும் காட்சிகள்
ஆன்மாவே நிரந்தர நடிகர்கள்
அறிந்தவர் வாழ்வெல்லாம் ஆனந்தம்

சக்தி சக்திதாசன்

Tuesday, October 17, 2023

இன்று அக்டோபர் 17ம் தேதி எனது எழுத்துகளுக்கு.மானசீகக் குருவாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 42 வது நினைவுதினம்.
இதை அவரது நினைவுதின வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிமாலை சாத்துகின்றேன்.

கனவுகளில் காற்றாக
நினைவுகளில் நின்றாடும்
புனைவுகளின் மன்னனே !
புவியுலகின் கவிமைந்தா !

சிறுகூடல் பட்டியிலே
சிற்றூற்றாய் ஊற்றெடுத்து
சிலையாகி வாழுகின்றாய்
சிங்காரச் சென்னையிலே

காற்றோடு கலந்தாயோ !
கானங்களின் மன்னவனே !
கவியரசன் நீதானென்று
கலையுலகம் போற்றுதய்யா

கலங்காதிரு மனமேயென்று
காட்டாற்று வெள்ளெமொன்று
கண்ணே , கலைமானேயென்று
கண்மூடிக் காய்ந்ததய்யா !

தமிழன்னைத் தாலாட்டில்
தமிழ்கற்ற புலவனய்யா
தமிழர்தம் நெஞ்சங்களில்
தனியிடத்தில் வாழ்கின்றாய்

உடல்நீக்கி ஆன்மாவாய்
உலாச்சென்ற கண்ணதாசா !
உன்னினைவு வாரத்தில்
உதிர்க்கின்றேன் முதற்கவிதை

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

கவியரசர் கண்ணதாசன் நினைவுவாரம் நாள் ஒன்று

இன்று அக்டோபர் 17ம் தேதி எனது எழுத்துகளுக்கு.மானசீகக் குருவாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 42 வது நினைவுதினம்.
இதை அவரது நினைவுதின வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிமாலை சாத்துகின்றேன்.

கனவுகளில் காற்றாக
நினைவுகளில் நின்றாடும்
புனைவுகளின் மன்னனே !
புவியுலகின் கவிமைந்தா !

சிறுகூடல் பட்டியிலே
சிற்றூற்றாய் ஊற்றெடுத்து
சிலையாகி வாழுகின்றாய்
சிங்காரச் சென்னையிலே

காற்றோடு கலந்தாயோ !
கானங்களின் மன்னவனே !
கவியரசன் நீதானென்று
கலையுலகம் போற்றுதய்யா

கலங்காதிரு மனமேயென்று
காட்டாற்று வெள்ளெமொன்று
கண்ணே , கலைமானேயென்று
கண்மூடிக் காய்ந்ததய்யா !

தமிழன்னைத் தாலாட்டில்
தமிழ்கற்ற புலவனய்யா
தமிழர்தம் நெஞ்சங்களில்
தனியிடத்தில் வாழ்கின்றாய்

உடல்நீக்கி ஆன்மாவாய்
உலாச்சென்ற கண்ணதாசா !
உன்னினைவு வாரத்தில்
உதிர்க்கின்றேன் முதற்கவிதை

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Tuesday, October 03, 2023

தலைமுறை செழித்து வாழட்டுமே !

தித்திக்கும் சிந்தையெலாம் நிறையும்
தீபமாய் ஒளிரும் என் தாய்மொழி
தந்திட்ட இன்பமெல்லாம் மீட்டிட இத்
தரணியிலே ஒரு வீணையில்லை

முத்திக்கும் தன் புகழை முரசறைந்து
முத்தமிழாய் எம் வாழ்வில் தவழ்ந்திடும்
செம்மொழியாம் நாம் கண்ட தமிழ்மொழி
செப்பிடுவேன் உயிர்மூச்சு உள்ளவரை

வித்தகு கவிஞர்களைத் தந்த தமிழ் புவியில்
வியத்தகு வகையில் மலர்ந்திட்ட மொழி
எவ்வகை சொன்னாலும் தன்னுள் சுவையை
ஏந்திடும் தேன்துளி வெள்ளமாம் இத்தமிழ்

மெத்தகு மேதைகளாய் பல கற்றிட வேண்டுமென
மேவிட இல்லை விதிகளை என் தமிழ்
போற்றிடும் நெஞ்சங்களில் எழும் துளிகளை
சாற்றிட்டால் போதுமென போதித்த மொழி

எத்தகை இலக்கிய ஆய்வும் செய்தவன் இல்லை
எந்தனின் தமிழின் ஆழம் சொற்பமே
கவிகளில் கோலோச்சிய குருவாய் வரித்தேன்
 கவியரசன் கண்ணதாசன் தனையே

 நித்தமும் நெஞ்சில் தமிழன்னையின் பாதங்களில்
நற்சிரம் தாழ்த்தி நானும் தொழுதே
சொற்வை கொஞ்சம் கூட்டி கவிகளைச்
செய்திடும் செயலே என் சேவை

செப்பிடும் வரிகளில் சிற்சில உண்மைகள்
சேர்த்திட்டே கவிகளை யாத்து
அன்புடன் இணைந்திடும் மனங்களின் முன்
அளிக்கின்றேன் எந்தன் காணிக்கையாய்

இத்தரை மீதினில் என்னுயிர் நிலைத்திடும்
இனிதொரு காலங்கள் மட்டும் அன்னைத்
தமிழின் வழி அவள் புகழ் பரப்பிடும் போது 
தலைமுறை செழித்திட வேண்டுகிறேன்

சக்தி சக்திதாசன்

Monday, October 02, 2023

காதல் பொழுதொன்று கவிதை வரிகளில்

கற்பனையில் விரிந்த ஒரு காதல் பொழுதினை கவிதை வரிகளாக்கிக் கணனியிலே தவழ விட்ட வேளையிது.


விரிந்த உன்  உதடுகளில்
மலர்ந்த புன்னகைக்குள்
புதைந்து போன இதயத்தினுள்
புலர்ந்ததொரு காதலன்றோ !

மலை தழுவும் மேகம் கண்டு
மனமெங்கும் மையல் கொண்டு
முகம் தேடி ஓடி வந்தேன்
மேகமென ஏன் கலைந்தாய் ?

சுரக்குமெந்தன் உணர்வுகளை
ஓடுகின்ற ஓடையாக்கி
கனவு எனும் கப்பல் செய்து
காதல் வழி செல்ல விட்டேன்

உனைக் காணா வேளைகளில்
எனைத் தொலைத்துத் தேடுகிறேன்
கணப் பொழுது கண்டு விட்டால்
கண் நிறைத்து மூடுகிறேன்

விழி வீசும் பார்வைக் கணை
நெஞ்சமதைத் துளைத்துச் சென்று
கல்லில் பதித்த சித்திரமாய்
உன் வதனம் வரைந்ததடி !

சக்தி சக்திதாசன்

Thursday, September 28, 2023

கவிதைதேடும் கவிஞனிவன்

அன்றிலொன்று ஆனந்தமாய்
ஆடுகின்ற மாலையிது
நெஞ்சிலொரு ராகமது
நெகிழ்த்துகின்ற கானமிது

புற்தரையில் வந்திறங்கிய
புறாவிரண்டின் குதூகலிப்பு
சிறகை விரித்தவைகள்
சிலிர்க்கின்ற அருங்காட்சி

மகரந்த்க் கவர்ச்சியினால்
மலருக்குமலர் தாவும்
வண்ணத்திப் பூச்சிகளின்
வர்ணமிகு வடிவங்கள்

வண்டுகளின் ரீங்காரம்
வனப்புமிகு தோட்டத்தில்
தேனருந்திய மயக்கத்தில்
தெம்மாங்கு இசைத்திடுமே 

மஞ்சளாடை  போர்த்துவிட்ட
மாலைநேர வானத்திலே
அவசரமாய் ஓய்வெடுக்க
ஆதவனின் விரைவோட்டம்

பெளர்ணமியாய் ஜொலித்திட
பயணப்படும் நிலவுமகள்
தோரணங்களாய்த் தாரகைகள்
தொங்குகின்ற இரவூர்வலம்

காதலென்னும் கவிதையினைக்
காதோரம்  கிசுகிசுக்கும்
கனவுலகக்  காந்தர்வர்
கதைபேசிடும் பொழுதேகும்

இமையெனும் திரையினை
இழுத்து மூடியொரு
கனவென்னும் தேரேறி
கவிதைதேடும் கவிஞனிவன்

சக்தி சக்திதாசன்

Thursday, September 21, 2023

இளையோரே வாருங்கள்

சித்தத்தின் உணர்வுகளில் 
ஏனோ.சத்தமாய் 
ஒரு சங்கீதம்
சிந்திக்கத் தெரிந்திருந்தும் 
ஏனோ சந்திக்க மறுக்கிறது 
உண்மைகளை

மாற்றம் என்பது 
உலகில் என்றும்
மனித வாழ்வின் தத்துவம்
ஏற்றம், தேடித்தான் 
யாவரும் எதிர்காலம் 
நோக்கி நடக்கின்றார்

முகிழ்க்கின்ற லட்சியங்களைச் 
சுமந்து முதுகெலும்பை 
வளைத்து உழைக்கின்ற‌
முத்தான தோழர் 
பலர் இன்னும்
முழுதாகக் காணவில்லை 
முன்னேற்றம்

வித்தாக கொள்கைகள் 
பலவற்றை விதைத்திங்கே முளைத்திருக்கும் விதமான 
அரசியல் வேஷங்கள்
விளங்காமல் தவிக்கின்றார்  
பாவம் விடிவில்லா மனிதர் நடைபாதையில்

பசித்திருக்கும் உயிர்கள் 
ஒருவேளை புசித்திருக்க 
வழி தெரியா பொழுதில்
வளர்ந்திருக்கும் பொருளாதாரம் 
எங்கே? வசதியான 
வீட்டில் பதுங்கியதோ ?

நாளைய சமுதாயம் 
சம உரிமையோடு
நடைபோட வேண்டும் 
என்றால் நாடவேண்டியது 
நல்ல பல உள்ளங்கள்
நலம் நிறைந்த மக்கள் 
நலன் திட்டங்கள்

போன காலம் 
போகட்டும் விட்டிடுவோம்
புதிய யுகம் படைக்க  
மக்கள் தளபதிகள்
புகவேண்டும் அரசியல் களத்தில்
புரிய வேண்டும் 
புதுமைகள் பல‌
புரட்சி மிக்க கொள்கைகள் 
கொண்டே புரிந்திட வேண்டும் 
எம் இளம் நெஞ்சங்கள்

சீரிய அறிவுடனே 
தெளிந்த சிந்தை 
கொண்டு சிறப்பான 
அமைதி முறையில் நீங்கள்
சீரான சமுதாயம் 
வளர்த்திட முடியும்
சிந்தியுங்கள் வளரும் 
இளம் உள்ளங்களே

நாமெல்லாம் ஒரே குலம் 
நமக்கில்லை பிரிவு
வன்முறைகள் வேண்டாமே ! 
இகத்தில் வளர்த்திடுவோம் 
ஒரே அன்பு மதம்
வளர்ந்து வரும் 
சந்ததியே விழித்திடுவாய் !

நமக்கும் மேலே ஒரு 
சக்தி உண்டென்போம்
நம் அனைவருக்கும் அது பொதுவென்போம்
மற்றவரின் நம்பிக்கைகளை புண்படுத்தாமல்
மகிழ்வாக பூமியிலே 
வாழ்ந்திடுவோம்

வாருங்கள் இள நெஞ்சங்களே !
வயோதிபத்தின் வாசலில் நான்
வளமிக்க எதிர்காலம் 
உங்கள் கைகளில்
வளர்த்திடுவீர் தாய்மொழியை ! 
தாய் நாட்டை !

சக்தி சக்திதாசன்

Wednesday, September 20, 2023

மாமனிதன் கர்ணன்

அகிலத்தின்
அழிக்க முடியா
காவியமாய்
ஞாலத்தில்
ஞாயிறு போல் ஒளிரும்
ஆதவனாய்
தவழ்ந்திடும் இதிகாசம்
மாபெரும் மகாபாரதம்

அக்காவியம்
கற்பிக்கும்
பாடங்கள் ஆயிரம்
அதிலே
அனுபவிக்கும்
அனுமானங்கள் ஆயிரம்

பாரதம் எமக்காய்
புகட்டிடும்
பல வாழ்வியல் கருத்துக்கள்
புரிந்திட்டால்
இனித்திடும் வாழ்க்கையே !

பார்த்திட்ட
பாத்திரங்கள் யாவிலும்
துலங்கிடும்
ஒன்றாய்
உணர்வினில்
உறைந்திடும் உருவகமாய்
உயர்ந்திட்டவன்
கர்ணன் எனும் மாமனிதன்

பிறந்திட்ட
வழியும் அறியாமல்
சிறந்திட்ட
திறமையும் ஒளிராமல்
மறைந்திட்ட
குடத்தினுள் விளக்காய்
விளங்கிட்ட
தேரோட்டி மகனாய்

வில்லுக்கோர்
விஜயனாய் சிறந்திட்ட
அர்ஜுனன் போலவே
வில்லேற்றும்
திறன் படைத்தவன்
விலக்கப்பட்டு
தவித்திட்டான் குலம் எனும்
மாயை திரை மறைத்ததினால்

தோள் தட்டி
அணைத்திட்ட துரியோதனன்
சுயநலம் கொண்டே
அணைத்திட்ட போதிலும்
செஞ்சோற்றுக் கடன் அடைக்க
நெஞ்சில் தர்மத்தின்
வழி அடைத்தான் கர்ணன்
வலியுடனே !

காலமெலாம்
சூது புத்திரன் என்றே
பழிக்கப்பட்ட பெரும்
வலியுடன் வாழ்ந்தவன்
குந்தியின் புதல்வன்
தருமனின்
தமையன் என்றறிந்தும்
தன் கடன் தீர்க்க
தம்பியர் மீது
அம்பெய்தும்
செயல் தூக்கி நின்றிட்ட
போது அவன் மாமனிதனே !

கணங்களுடன்
காலம் பரிசாகத் தந்த
ரணங்களுடன்
வாழ்ந்து மடிந்த தேரோட்டி மகன்
கர்ணனின் கண்ணீர்
கற்பிப்பது ஓர் நல்ல பாடமே !

மகாபாரதம் என்பது
கட்டுக் கதை என்போரும்
சரித்திர நிகழ்வு என்போரும்
தர்க்கத்தில் இன்றுவரை
எது எப்படி ஆயினும்
தோலை நீக்கி அழகாய்ச்
சுளையைப் பார்த்தால்
கர்ணனின் கண்ணீர்
காட்டுவது நல்வழியே !

சக்தி சக்திதாசன்

Friday, September 01, 2023

கேட்டதைக் கொடுப்பவனே !

நான் கேட்டா
எனைப் பெற்றார்
என் பெற்றோர் ?

எனைக் கேட்டா
என் மைந்தனானான்
என் மகன் ?

யார் கேட்டு இங்கு
யாரைப் பெற்றார் ?

என்றொரு கேள்வி
எழுந்ததோர் கேள்வி
அன்றொரு காலம்

ஆன்மாவின் திட்டம்
அதற்கொரு தேவையென்று
விடையீந்த ஆன்மீகம்

காற்றோடு விழும் விதை
மரமாகும் நிலம் போல
எங்கோ ? என்றோ ? எப்போ ?

காற்றோடு
ஒரு செய்தி
காதோடு
கேட்டதுண்டு

நீற்றாக
கரையுமட்டும்
மகிழ்வோடு
வாழ்கவென்றே !

ஓர்நாள் மட்டும்
வாழ்ந்து வீழும்
மலர்கள் சொல்வதை
மனதோடு
கொண்டிடுவோம்

இப்போது ஒரு பொழுது
தப்பாமல் கண் முன்னே !
எப்போதும் ஏன் 
தெரிவதில்லை ?

முப்பொழுதும் மனதில்
முடிந்தை எண்ணிக் 
கவலை வரப்போவதை 
எண்ணி வீண் அச்சமும்

கேட்டதைக் கொடுக்கிறது
சூழ்ந்திடும் பிரபஞ்சம்
வேண்டுபவை எம்மறை ?
நேர்மறையா ? எதிர்மறையா ?

உள்ளத்தில் ஓர்வழி
என்றுமே நேர்வழி
மகிழ்வின் தனிவழி
மனதுள் பெருவெளி

தனக்குள் பயணத்தை
தானாய் தொடங்கிட்டால்
கண்டிடும் பொழுதொன்றே
நிலையெனப் புரிந்திடும்

சக்தி சக்திதாசன்

Tuesday, August 29, 2023

கவிதைச் சிறகெடுத்து

கவிதைச் சிறகெடுத்து
கற்பனை வானத்திலே
கண்ணிமை திறந்ததும்
காலையில் ஓர்பயணம்

நினைவுப் பாதையிலே
நடந்திடும் உள்ளமதில்
நடமிடும் தமிழாடிடும்
நர்த்தனக் களியாட்டம்

கனவுகள் இனித்திடுமே
மனமது விழித்திடுமே
புனைவுகள் கவிந்திடுமே
நினைவுகள் கனத்திடுமே

உள்ளத்தின் மையத்திலே
உதித்திடும் கருத்துக்கள்
உறுத்திடும் விரல்களை
உருண்டிடும் வரிகளாய் !

விழுந்திடும் வேளையெலாம்
எழுந்திடும் மனமிருந்தால்
கழிந்திடும் பொழுதுகளெல்லாம்
பொழிந்திடும் வெற்றிகளே !

தடைகள் அனைத்தையுமே
படிகளாய்ப் பார்த்திட்டால்
விடைபெறும் சோகங்கள்
அடைவதெல்லாம் ஆனந்தம்

அன்புடை சோதர,சோதரியரே !
அறிவுடன் செயற்பட்டால்
அகிலத்தில் உமைவென்றிட
ஆருண்டு கூறிடுவீர் ?

கைகளை இணைத்திங்கு
காண்பதெல்லாம் மனிதமென்று
ஒன்றெனும் மனம்கொள்வீர்
ஓரினம் ஓர்வழி என்றிடுவீர்

நாளைகளின் நாயகரே !
நம்பிக்கையுடன் எழுவீர்
நானிலச்செழிப்பு உம்கையில்
நெஞ்சிலதைக் கொண்டிடுவீர்

சக்தி சக்திதாசன்

Sunday, August 27, 2023

உணர்வுகளில் உரசலில்லை

நீலவான முன்றலிலே
முழுநிலவின் வெளிச்சத்தில்
மின்னுகின்ற தோரணங்கள்
கண்சிமிட்டிக் கதை கூறும்

மூடுகின்ற விழிகளுக்குள்
முழுவர்ணக் கனவுகளாய்
முப்பரிணாம காட்சிகளாய்
முடிச்சவிழ்க்கும் நினைவுகள்

உள்ளமெங்கும் வெள்ளமாக
உள்ளதெல்லாம் கற்பனையே
உருவமில்லா உணர்வுகள்
உருட்டுகின்ற உரசல்கள்

சுட்டெரிக்கும் கதிர்களோடு
சூரியனின் சுற்றுப்பயணம்
விட்டகழும் பனிப்புகார்கள்
விரைந்தோடும் காலைகள்

புதியதோர் விடியலிது
புதியதொரு பயணமிது
பிறக்குமொரு புத்துணர்ச்சி
புதுமுயற்சி புதுத்துணிவு

எம்விடியல் எம்கையில்
எதுக்கிங்கே ஏக்கங்கள் ?
விழுவதெல்லாம் எழுவதற்கே
விளைந்ததெல்லாம் அனுபவமே !

விதைத்தவைகள் நன்மையெனில்
அறுப்பதுமே நன்மைகள்தான்
கதைகளுக்கு முடிவுண்டு
காலத்திற்கோ எல்லையில்லை

விழிப்புணர்வு கொண்டிட்டால்
விடியல்கள் வெளிச்சமே !
உள்ளத்திலே கள்ளமில்லை
உணர்வுகளில் உரசலில்லை

சக்தி சக்திதாசன்

நாடகத்தில் நடிகர்கள்

கடந்துபோன காலங்கள்
நிகழ்ந்துபோன நிகழ்வுகள்
முடிந்துபோன கதைகள்
முதிர்ந்துபோன ஞாபகங்கள்

முடிவில்லாத கதைகளாக
முற்றுப்பெறாத எச்சங்கள்
விளக்கமுடியா விதிகளாக
விந்தைமிகு சாத்திரங்கள்

திறந்திருக்கும் கதவுக்குள்
திறக்கமுடியா புத்தகங்கள்
படிக்கமுடியா தொலைவிலே
பயனுள்ள தத்துவங்கள்

தேவையற்ற தேடல்களைத்
தேடிவரும் உறவுகளும்
தேடிச்செல்லும் வேளையிலே
தீர்ந்துபோகும் தேவைகளும்

நிலையில்லா வாழ்க்கை
நித்தியமும் ஓதுகின்றார்
சத்தியத்தின் வாயிலிலே
சரித்திரத்தை மறைக்கின்றார்

தொலைத்த வாசலொன்று
தனக்குள்ளே உள்ளதென்று
தெரியாமல் தவிக்கின்றார்
தெரிந்தவர்கள் சிரிக்கின்றார்

காவோலை விழுமென்று
காத்திருக்கும் குருத்தோலை
புயலுக்குத் தெரியுமா
பறிக்கும்போது எதுவென்று ?

இக்கணத்தில் வாழ்வதொன்றே
எக்கணமும் அறிவுடமை
நாடகம்தான் உலகென்றால்
நாமதிலே நடிகர்களே !

சக்தி சக்திதாசன்

Sunday, July 23, 2023

என்னுள்ளக் காதலியாய் என்னுள்ளே தமிழென்றே !

சிரிக்காதே !
சிவந்த அதரங்களில்
சிந்தும் புன்னகையில்
சித்தம் சிதறுதே !

நடக்காதே !
நெளிந்திடும் இடையது
உடைந்திடும் கொடியென
வருந்திடும் நெஞ்சமே !

வளைக்காதே !
வளைந்திடும் கைகளில்
வளையல்கள் குலுங்கினால்
கிளர்ந்திடும் உணர்வுகள் !

பேசாதே !
வீணையின் நாதமென
பொழிந்திடும் குரலிசை
மயக்கிடும். இதயத்தை

நொறுக்காதே !
பார்வையைக் கனலாக்கி
தீயினைம் கணையாக்கி
உள்ளத்தைப் பொசுக்காதே !

தூங்காதே !
விழிகள் தூங்காதே
கனவெனும் தேரினில்
கன்னிநீ வராவிட்டால் !

பிரியாதே !
உயிரெனைப் பிரியாதே 
உயிராக நீயென்னுள்
உணர்வோடு கலந்திட்டால் !

எழுதாதே !
தமிழென்னும் மொழியில்
உள்ளமெனும் தாளினிலே
காதெலெனும் கவிதையினை

புரியாதே !
எவருக்குமே புரியாதே !
என்னுள்ளக் காதலியாய்
என்னுள்ளே தமிழென்றே !

சக்தி சக்திதாசன்