Monday, October 09, 2006

இதற்கு பெயர்தான் காதலோ ...

தொட்டுவிடத் துடிக்கும் மனது
தொடர்ந்துவர தவிக்கும் கால்கள்
தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள்
தோணியாக மிதக்கும் எண்ணம் ..

பட்டுவிட நடுங்கும் விரல்கள்
படர்ந்தவுடன் உறையும் மேனி
பார்வையினால் தாக்கும் உணர்வு
பசியையே மறக்கும் இயல்பு

எட்டிவிட ஏங்கித் துடிக்கும்
கிட்டவர ஒதுங்கி நாணும்
ஏக்கத்திலே பொழுது கழியும்
எண்ணத்திலே கவிதை பொங்கும்

தட்டிவிட திரும்பத் தாவும்
தனிமையிலே உள்ளம் வேகும்
தன்னையே வெறுத்து ஒதுக்கும்
தழுவலிலே உணர்ச்சி கலக்கும்


இதுதான் காதலா ......
இதைத்தான் கன்னியவள்
இறுதிவரை காளையுடன்
இன்பமெனப் புரிந்தாளோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

நினைவுகளில் ஓர் சங்கீதம்

நிசப்தமான பொழுதினிலே
நீண்டதொரு மாலையிலே
நிம்மதியான ராகங்களோடு - என்
நினைவுகளில் சங்கீதம்

பாதங்களில் கொலுசோடு
பாவடைத் தாவணியில்
பாவையவள் பவனியையே
பார்த்த ஞாபகங்கள்

காதலென்னும் தென்றல்
வாலிபத்தின் சோலையிலே
வாசத்தோடு வீசிய பொழுது
வாடாமல் தூங்குது மனதில்

சிந்திக்கும் வயதல்ல அது
சிந்தையிலே தேனூறும்
சிங்கார வேளையிலே
சித்திரமாய் உறைந்தவள்

ஓடிவிட்ட காலங்கள்
ஓய்ந்து விட்ட வேளையில்
ஒருகண நிகழ்வுகளாய்
ஓவியமாக ஒய்யாரமாய்....

உருண்டோடும் ஜகத்தினில்
உள்ளோர்கள் மனங்களில்
உன்னதப் பொழுதொன்று
உறங்குவது உண்மையே

மூங்கிலின் துகள்களில்
விளையாடும் தென்றலோ
நினைவுகளில் தவழ்ந்திடும்
வாலிபத்து வர்ணங்கள் ?

உருவங்கள் மாறலாம்
உள்ளங்கள் முதிரலாம்
கடந்தகால நினைவுகள்
நிழலாக மறையுமோ ?

ஏதோ ஒரு ஓரத்தில்
எங்கோ ஒரு மூலையில்
இசைக்கும் ராகங்கள்
அவை நினைவின் சங்கீதங்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Saturday, September 23, 2006

தமிழின் மடியில்

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதையிது


முளைத்த உணர்ச்சி
முகிழ்த்தே வெடித்து
முழுதாய் இன்று
தமிழாய் விரிந்தது


களைத்த இதயம்
கனக்கும் போதினில்
கரும்பாய் இனிக்கும்
கன்னித் தமிழிது


துளைத்த அம்பு
துளிர்த்த வலியில்
துளிரும் பொழுதில்
துலங்கும் மொழியாய்


புளித்த பானம் கொடுக்கும்
போதையில் புதையும் மனிதர்
புரியார் இந்தத் தமிழின் போதை
புனித நதியாய் பாயும் கவிதை


விளித்த கருத்து இன்று
விழைந்ததெந்தன் நெஞ்சில்
விழுந்தேன் நான் தமிழன்னை
விரித்த அமுதச்சுழலில்


அன்புடன்
சக்தி சக்திதாசன்


21.09.2006

வண்ணப்பூவே புன்னகை சிந்து

வண்ண வண்ண பூச்சூடி
வந்த எந்தன் மங்கையவள்
வாசம் வீசும் முல்லையாக
வளர்ந்த அந்த அங்கையவள்

மின்னலென்னும் இடைகொண்டு
மிளிர்ந்து வரும் வான்வெள்ளியாய்
மிதந்து வரும் வெண்ணிலவு
மண்ணில் இன்று ஊர்வலமோ ?

சின்ன இதழ் விரித்து இன்று
சிந்துகின்ற புன்னகை கண்டு
சிந்தை நானும் பறிகொடுத்து
சித்தம் இழந்த பித்தனானேன்

எண்ண எண்ணத் தாமரை மலரும்
என்னைத் தன்னுள் மூடிய தோகை
என்று புவியில் நான் பிறந்தாலும்
எந்தன் இதயத் துடிப்பாய் அவளே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

தெரிந்தும்.. தெரியாமலும்

கண்களில் ஈரம் அவள்
கால்களில் தளர்ச்சி
காலங்கள் கொடுத்த
காயத்தின் சாட்சி....

தெரிந்தும் ...தெரியாமலும்
தெளிவடையா உள்ளம்
தெளித்த ஆசைத்துளிகள்
அதுவே அந்த சோகத்தின்
ஆரம்பம்...
முடிவு ..?

காதலெனும் உணர்வுக்கு
வறுமையின் ஸ்பரிசம்
புரியாது என்றே பாவையவள்
தெரிந்தும்... தெரியாமலும்.....

அன்பு மனதில் பூத்துவிட்டால்
அந்தஸ்து புதருக்குள் மறைந்து விடும்
அறியாமல் மாது மயக்கத்தினால்
தெரிந்தும்... தெரியாமலும்....

ஆடவன் மனதுக்குள் நுழைந்ததும்
அகிலமே தனக்குள்
அடக்கமென நினைத்ததால்
ஆரணங்கு அவள்
அடைக்கலமாய்...
தெரிந்தும்.. தெரியாமலும்.....

சினிமா பார்க்கையிலே பலர்
சிந்தும் கண்ணீர்தனைத் தூய்மையென
சின்னைப்பெண்ணவள் நம்பியதால்
சிலமணி நேரங்களே ......
தெரிந்தும்... தெரியாமலும்......

தெரிந்தும்.... தெரியாமலும்....
தோற்றத்தில் மயங்கி
மனட்சாட்சியை பணத்திடம் அடகுவைத்த
மனிதனிடம் தன்னை
அர்ப்பணித்ததால்
உண்டாகிய கோலத்தை
உலகம் தெரிந்து கொண்டதால்.....

தெரிந்தும்.... தெரியாமலும்
மருந்தைப் பருகிப்பெற்றோர்
மரணத்தைத் தழுவியதால்.....

தெரிந்தோ.... தெரியாமலோ... அவள்
தெருவினிலே வாழ்க்கைப்பயணத்தின்
வரைபடத்தை தொலைத்துவிட்டு
நிற்கையில்....

சமுதாயப் பெரிய மனிதனவன்
சந்தை மாடுபோல் மங்கையின்
சரித்திரத்தை மாற்றிய
மனிதனென்னும் மிருகத்திற்கு
மணவீட்டுச் சடங்கு செய்ய......

மந்தை ஆடுகளைப் போல
மனிதர்கள் எனும் பெயர் கொண்டோர்
மகிழ்ச்சியாய் ஊர்வலம் போகின்றார்...

இந்த உலகிலே..... நாம்....
தெரிந்தும்... தெரியாமலும்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

இயற்கையை மறந்த மனிதன்

இதயத்தை விற்று இவர்
இன்பத்தை வாங்குவார்
இயற்கையை அழித்து
இறைமையைப் போற்றுவார்

நாளையை இழக்க
இன்றைச் சிதைக்கும்
இந்த மனிதர் அறிவரோ
இயற்கையின் பெருமையை ?

பசுமை நிறைந்த சோலைகள்
பச்சையாடை தரித்த மரங்கள்
பட்டுக்கம்பளம் போன்ற புற்தரை
பத்துக்கோடிக்கு ஈடாமோ ?

எத்தனை அறிஞர் சொல்லியும்
அத்தனை உண்மையும் மறைத்து
தத்தமது செல்வத்தைப் பெருக்கிட
தன்னலச் சேற்றினுள் புதைந்தனர்

நானிலம் தன்னில் வளமாய்
நன்மைகள் பல பெற்றே
நல்வாழ்க்கையை அமைத்தவர்
நாளையை மறந்தது சோதனையே

தானாய்த் தருவது இயற்கை
என்றே
தேடித் தேடி இருப்ப்தைச் சுரண்டி
தேய்ந்து போகும் இயற்கையை
தொலைக்கும் காலத்தில் நுழைந்தனரே

இருக்கும் செல்வம் அனைத்தையும்
இயற்கையோடு ஒப்பிடுகையில்
இல்லை அதற்கு ஈடு என்று
இவர்களுக்கு புரியவில்லையே

விஞ்ஞானத்தில் கரைகண்டவராம்
விவேகத்தில் முதிர்ந்தவராம்
வளர்ச்சியில் தாமே முதல் உலகாம்
வரட்சி அவர்கள் ஞானத்திலே

அகிலத்தை ஆளும் சக்தியும்
அடக்கும் உலக சக்தியும்
அடைந்த அமேரிக்க தேசமே !
அழிவை உன்னால் அறியமுடியாதா?

மனிதர்களே உரக்கச் சொல்லுவேன்
மனதில் விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள்
மயக்கம் நீங்கித் தெளியாவிட்டால்
மறைந்து விடும் இவ்வுலகே

அன்புடன்

சக்தி சக்திதாசன்

21.09.2006

மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே ..

உன்னை இன்று மட்டும்
நினைக்கவில்லை
பாரதமாதாவின் மடியினில்
தவழ்ந்த
தமிழன்னையின்
மூத்த புதல்வனே !

மறந்தால்தானே நினைப்பதற்கு ....

தமிழ்மணக்கும் பாக்களிலே
தனைக் கலந்து தந்தவனே !
தாய் தந்த மொழியதற்கு
தரம் தந்த தூயவனே !

சொல்லும் தமிழே !
பாரதியுந்தன் செயலும் தமிழாய் !
அமைந்தோனே
செல்வம் தேடும் உலகினிலே
செழிப்பைக் கண்டாய் மொழியினிலே

சிரித்த சமூகத்தைப் பார்த்துச்
சிரித்த தமிழ்ச் சிங்கம் நீ
சீரிய அறிவெனும் கூரியவாளால்
சிந்தையை மறைத்த மடமையை
சிதைத்த செந்தணல் கவிஞன் நீ....

தாயின் கைகளில் விலங்கு கண்டு
தமிழாய்க் கொதித்து எழுந்தே நீ
தளைகள் அறுக்கப் புறப்படுவீர் என
தமிழ்மேல் ஆணையிட்டவன் நீயே

நிஜத்தைக் கலந்து கவிதையுடன்
நிதமும் படைத்தாய் பாவலனே
நீசர் பலரும் அலறி ஓட காவலனே !
நீறுபூத்த நெருப்பாய் தகித்தாய்

அன்றொருநாள் கூடினர் அவர்கள்
ஆகாயத்தில்
அவசரக்கூட்டம்.
தமிழின் மைந்தன் பாக்கள்
அவையினில் நிறைய
வரமே கேட்டனர்
அதனால் தானோ மகாகவியுன்னை
அகவை நாலுபத்தும் நிறையா நிலையில்
ஆண்டவன் ஆணையிட்டே
தன்னுடன் அழைத்தான் சொல்லி விடு

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழின் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

17.09.2006

Thursday, September 07, 2006

விடியும் பொழுதே !

விடியும் பொழுதே !
விரைந்து நீயும் வந்து
வளரும் காலையை
வலை போல விரித்திடு

கண்களை மூடியும்
கனவுகள் எட்டா
காரிருள் இரவின்
இருளைக் கலைத்திடு

வானமெங்கும் நீலம் பூசி
வெள்ளை மேகம் பவனியோடு
வையம் தன்னைச் சிலிர்த்து
வருவாய் நீயும் விரைந்திங்கு

காதல் நினைவுகள் தளிர்க்கும்
கனிந்த எழிலாள் வெண்ணிலா
கண்கள் மூடி நாணம் கொண்டு
காலையுன்னில் ஒளிந்து கொண்டாள்

நாளையுலகை ஆளப்போகும்
ம்பிக்கை நட்சத்திரங்களாம்
நமது குழந்தைகள் எழுந்து
நம்பிக்கையுடன் நடக்கும் பொழுது

பாரினைத் தழுவிய இரவு மகள்
பதறுவாள் ஆதவன் தேரினில்
பகல் மங்கை நீ பவனி வருகையில்
புலரும் உலகின் நாள் அப்போது

காலைப்பொழுது உன் வரவுக்காய்
த்திருந்தேன் நான் கண்விழித்தே
காக்க இனியும் வைக்காது நீயும்
காற்றிலேறி வந்து உலகை எழுப்பி விடு

அன்புடன்
சக்தி சக்திதாசன்

வழி கேட்டால் ...

வழி கேட்டால் ?
வார்த்தைகள் தடக்குமே !
வேதனை உறுத்துமே !

நடக்கத் தெரியாத
பாதையில்
நினைக்கத் தெரியாத வேளையில்
முடிக்க முடியாப் பயணங்களை
முயற்சித்த வழிப்போக்கன்

முடவனிடம்
ஒற்றையடிப்
பாதையில் நடக்கும்
வித்தை கேட்பதுண்டோ ?

விழியற்றவனிடம்
வண்ணங்களை
வர்ணிக்கும் வகை கேட்பதோ ?

அன்புடன்
சக்தி

Wednesday, September 06, 2006

வெண்முகிலே ... !

வெண்முகிலே உன்னோடு நான்பேச
வேண்டியின்று காத்திருக்கும் வேளையிலே
வேகமாக நீயும் வானிலோடி ஏகுமிடமறியாமல்
வேதனையில் எனை ஆழ்த்தும் வேளையிது

கண்ணிமைகள் மூடாமல் நினைவுகள் நெஞ்சிலே
கனக்கின்ற பொழுதொன்று என்னுடனே
கதையாக உன்னிடத்தில் சுமையிறக்கி வைத்து
களைப்பாற ஏனோ தவிக்கின்றேன் இப்பொழுது

வண்ணமயில் அழகு கொண்ட மங்கையவள்
வாடகைக்கு இதயத்தில் குடிவந்தாள்
வலிதானெ தந்தாள் பரிசாக இன்றெனக்கு
வஞ்சியென்றால் எனை வஞ்சிப்பதோ ?

எண்ணமெலாம் வர்ணம் தீட்டிக் காட்டியவள்
என் கனவுகளை கறுப்பு வெள்ளையாக்கிவிட்டாள்
ஏக்கமெனும் உணர்வுக்கு ஏந்திழையாள் விதையானாள்
ஏனிந்தக் காதல் எனை தீண்டியது கூறாயோ ?

புண்ணான நெஞ்சமதில் சுமக்கின்ற நினைவுகளே
புதிராக வாழ்வினிலே புதைந்து விட்ட மையலது
பொதுவாக ஒன்று கேட்பேன் வெண்ணிலவே பதிலிறுப்பாய்
பூவை என்பவரின் மறுபெயர் பூநாகம் சரிதானோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Friday, September 01, 2006

உனர்வின் துடிப்பில்

உணர்வின் துடிப்பில்

உள்ளத்தில்
உறைந்த காட்சிகளின்
உணர்வுத் துடிப்பில்
விளைந்த கவிதையிது

வேஷங்களின்
மோசங்களைக் கண்டு
வாசங்களைத் துறந்து
பாசங்களை மறந்ததினால்
முளைத்த பாடலிது

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது

இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியரு பிறப்பு
இறைவா !
அவசியந்தானா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Sunday, August 27, 2006

காதற்சோலையில் கனவெனும் தென்றல்

காதற் சோலையில் கனவெனும் தென்றல்

கண்களில் ஊஞ்சலாடும்
கனவுகள் பறந்து சென்று
காதற் சோலையிலே
கனிந்த தென்றலானதோ.

சின்னச் சின்ன பூக்களின்
சித்திரமான இதழ்களினால்
செவ்வண்ண இதழ்களை
செந்தாமரை சேர்த்தாயோ .....

அந்தி மஞ்சள் நிறம்
அலங்கரிக்கும் முகம்
வான்வெளி மின்னலது
வனிதையவள் புன்சிரிப்பு ......

மழைத்துளி மண்ணில்
மழையாகி மணக்கும்
இயற்கையதன் செழிப்பு
இளையவளின் வனப்பு ....

கொஞ்சமாய் நாணம்
கோலமிடும் வண்ணம்
கோதையவள் கீதம்
கொலுசுகளின் நாதம் ....

நீயில்லா நேற்று
நிலவில்லா வானம் - உன்
நினைவில்லா நெஞ்சம்
நீரில்லாத் தடாகம்

காதற் சோலையிலே
கனவெனும் தென்றலிலே
கலந்தவொரு சுகந்தமாய்
காற்றினிலே கீதமாய் ....

மங்கையுன் கனவுகள்
மூடிய விழிகளில்..
ஏனோ நெருங்கிய
போதெல்லாம் நீ
வெறும் நினைவுகள்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

என்னை மறந்து நான் கொஞ்சநேரம் !...

என்னை மறந்து நான் கொஞ்ச நேரம் !

உள்ளத்தின் ஓசைகள்
நினைவுகளின் வாசமாக
நெஞ்சத்து விம்மல்கள்
நேசத்தின் கோஷமாக
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......

காற்றிலேறி தவழ்ந்து
பச்சிலைகளோடு உரசிக்
காணும் மென்மையான
உணர்வுகளில் அமிழ்ந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் .....

கரைந்திடும் அந்தக்
கார்முகில் மேகமாக
கலைந்து சென்றே
பொட்டுப் பொட்டென
பொழியும் மழையாகி
கிளப்பும் அந்த
மண்வாசத்தை சுவாசித்துக்
கொண்டே
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம்......

மலையிலே பிரசவித்து
மண்மீது மெதுவாக
மழலைபோல தவழ்ந்து
வரும் நதிமீது
விழும் சருகாகி
நயமாக மிதந்தோடி
ஏழை பசிபோக்கும்
வயல்மீது பாயும்
நீராகி மண்ணோடு
கலந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Monday, August 14, 2006

தமிழ்! தமிழ்! தமிழ்!

துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது

பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது

தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது

எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது

முள்ளி ல்கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை

கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது

கள்ளி யவள் மீது கொண்ட
காதல் சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்

புள்ளி போல நான் மறைந்து
தொலைதூரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்

சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்


அன்புடன்
சக்தி சக்திதாசன்

நெஞ்சம் பொறுக்குதில்லையே !

தாய்மண்ணில் விளைந்த
தமிழ்த் தளிர்களே !
தீந்தமிழின் வருங்காலத்தலைவர்களே !
தமிழராய் ஈழத்தில்
தவழ்ந்தது அன்றித்
தவறென்ன செய்தீர் ?

ஜயகோ !
பாவிகள் இன்று

பறித்தனரே பரிதாபமாய் எம்மிளஞ்சிட்டுக்களின்
பவித்திரமான உயிர்களை ....

தாலாட்டிச் சீராட்டி
தாய், தந்தை கனவுகளைத்
தரணியில் வாழவைக்க
தங்கங்களே நீங்கள்
தாகத்தோடு காத்திருக்க ...

உரிமைகள் இல்லாவிட்டாலும்
உயர்த்துவோம் அறிவை என்று
ஊக்கமாய் அறிவுப்பசியைத் தணிக்க
முனைந்த என் பச்சைக்கிளிகளே....

உங்களையா அழித்தார்கள்
உன்மத்தம் கொண்ட வெறியர்கள் ?
வெடிகுண்டுச் சத்தங்களின் மத்தியிலும்
வெறுமையான வாழ்க்கையின்
வேதனைகளுக்கிடையிலும்
வீரமாக தாய்த்திருமண்னிலே
விளையாடிய எங்கள் செல்வங்களே !

இனத்துவேஷம் கொண்ட
ஈனத்துரோகிகள்
இன்றுமை இப்படி
இல்லையென்றாக்கினரோ ?
இதயம் கொதிக்கின்றதே ....
இரத்தம் வடிகின்றதே .....

தமிழன்னையின் கண்ணீர்
தரையில் ஆறாக ஒடுகின்றது
தளிர்களின் குருதி அம்மண்ணில்
புனலாய்ப் பாய்கின்றது
கலங்காதீர் வாரிசுகளே
உங்களின் கூட்டிலிருந்து
உயிர்ப்பறவைகள் பறந்தன....

அவை சுவாசிக்கும் காற்று
சுதந்திரக் காற்றே....
உங்கள் சமாதிகளில்
உயிர்கொள்ளும் மலர்கள்
உருவாக்கும் தோட்டம் - இனி
சுதந்திர பூமியிலேயே மலரும்
இது நிச்சயம் ....

கண்ணீருடன்
சக்தி சக்திதாசன்

நீயில்லாத நானில்லை

தட்டினால் தானேதீக்குச்சி பற்றும்
உன் பார்வை
தழுவினாலே என்னிதயம்
பற்றிக் கொள்கின்றதே !

வானத்து நிலவைக்
கண்ணுக்கு விருந்தாக்க
பகலுக்கு இரவென்னும்
கறுப்பாடை போர்த்த வேண்டும்
ஆனால் !
என் மனவானில்
தேயாத வெண்ணிலவாய்
பகலென்ன ! இரவென்ன !
பசுந்தளிராய் உன் வதனம்

நீரின்றிப் பயிர் வாடும்
நிலவின்றி இரவு மாயும் - உன்
நினைவின்றி நெஞ்சம் நோகும்
நானென்று ஒன்று இல்லை
நீயில்லாத ஞாலத்திலே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்

உறவுகள் !
விசித்திரமாகப் பிணைக்கும்
வித்தியாசமான
விலங்கு....

இல்லாமல் வாழமுடியாமல்
இருப்பவன் தவிப்பதும்
இதயத்தின் ஆழத்தில்
சொந்தங்களைப் புதைப்பதும்
உறவுகள் கொடுக்கும்
உன்னதத்தின் விளைவுகளே !

திருமணம் எனும் பந்ததத்தில்
திருப்தியான உறவுகள்
திருப்பங்களில் ஒடிவதும்
இதயங்கள் உடைவதும்....

அன்னை தந்தை
அன்பினால் கட்டுண்ட
வேளைகள் ,
வேலியாக உறவுகள்
தாண்டியதும்
வெளியாக புரியாத பொழுதுகள்
புறக்கணித்த உறவுகள் ...

ஒன்றாகப் பிறந்தவர்
ஒருதாயின் உதிரங்கள்
உறவறுக்கும் கத்தியாய்
உதவாத சொத்துக்கள்
பொருளுக்கு முன்னாலே
பொசுங்குமந்த உறவுகள்
பொல்லாத வேளைகள்
பொருந்தாத சொந்தங்கள் ....

கண்களினால் கண்டதும்
காதல் வயப்பட்டதும்
கற்றதந்த உறவுதான்
கட்டிவிடும் உயிர்களை !

கணநேரக் கலத்தலால்
கருத்தரித்த காதலது
கண்ணிமைக்கும் நேரத்துள்
கனவாகக் கலைந்திடும்
அதுகூட உறவுதான்
அதுவும் ஒரு பிணைப்புத்தான் ...

கட்டையிலே உடல்
கனலோடு கலக்குமட்டும்
கலந்திருக்கும் உறவொன்று
கருத்துரைப்பேன் கேளீரே..

நம்மை
நாமறிந்து
நானென்ற
நினைவகற்றி
உண்மைப் பொழுதொன்றில்
உணர்வுகளோடு ஒன்றிவாழுகின்ற
பொழுதொன்றேசாம்பலாக
மாறுமட்டும் கூடவரும்
உறவென்பேன்