Saturday, February 17, 2024

ஏனிந்த மெளனம் தோழா ?

ஏனிந்த மெளனம் தோழா ?
காலத்தின் வழி வந்த வறுமையின்
காயத்தின் வடுக்களைக் கண்டு
வாடிப்போய் விட்டாயா ?
நிழல்களின் கோலத்தை
நிஜமென நம்பிடும் உலகத்தின்
விசித்திர நடப்பினை நீயும்
விளங்கிட முடியாமல் கலங்குகிறாயா ?

உலகத்தின் நாயகன் அவனே
உண்மையின் ஆதிமூலம் 
அவன் தந்த பரிசான
இயற்கையை தமக்கென கூறிட்டு
இரக்கத்தை மறந்து வாழும்
இதயமற்ற மனிதரின் செயல்கள்
தீட்டுதோ உனது வறுமைக் கோலத்தை

உலகம் சுழல்கிறது என் தோழா 
இன்றைய உலகு வேறு அதே போல்
நாளைய உலகும் வேறு 
எது இங்கே நிஜம் கூறு ?
எவரறிவார் அவர்தம் முடிவை ?
அவரவர் உடல்களுக்குள்
ஆன்மாவின் இருப்பை அறியாமல்
ஆணவச் சுழலில் அவசரமாய் ஏன் ?

விழியென்னும் தீபத்தில் நீயும்
ஒளியெனும் கனலை ஏற்று
இருளொடு கலந்த பொழுதை
இல்லாமல் ஆக்கும் செயலாற்று
விதைத்திடு நற்பல விதைகளை
வளர்த்திடு நற்பண்புகளை
செழித்திடும் நாளைய உலகம்
செதுக்கிடும் சிற்பியாய் மாறிடு

நீ, நான் எனும் நிலை மாற்றி
நாம் எனும் உறவை விதைத்திடு
நளைய உலகம் உனக்காவே விடியும்
நம்பிடு தோழா ! நாளையின் நாயகன்
நானிலம் உன்னைப் போற்றி
நாளைய சரித்திரத்தில் ஓர்
நட்சத்திரமாய் உயர்ந்தே பார்க்கும்

உருளும் இந்தப் பூமிப்பந்தினுள்
இருளும் ஒளியும் இருந்திடல் போல
இன்பமும்,துன்பமும் காணாய்
இயற்கையின் விதியை உணர்வாய்
முயன்றால் மட்டுமே தோழனே !
மூடிய கதவுகள் திறக்கும்
காட்சியைக் கண்டிட வேண்டுமெனில்
கண்களைத் திறந்திட வேண்டும்

உண்மையை தெரிந்தால் மட்டுமே
உள்ளத்தில் அமைதி தோன்றும்
உனக்கெனவும் எனக்கெனவும்
உள்ளதைப் பிரித்திடும் மனிதர்
உன்வழி நேர்வழியாய்ச் சென்றால்
உலகில் உனக்கு வெற்றியே
ஆன்மீக அறிவினை தெரிந்து
ஆற்றுவாய் பலசெயல் இன்று
அமைதியின் தரிப்பிடம் உலகென
அனுதினம் புதுவிதி இயற்று


சக்தி சக்திதாசன்