Tuesday, November 28, 2023

காலமெல்லாம் நிலைத்திருக்கும்

எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது

பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று

கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்

செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை

இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று

நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை

உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப்  பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்

சக்தி சக்திதாசன்

விடிந்தபின்னும் தூங்குமிந்தவியப்புநிறை மானிடர்கள்

சொல்லாத சொற்களுள்
நில்லாத உண்மைகள்
வெல்லாத பொழுதுகள்
கல்லாத பாடங்கள்

முட்களால் கீறிய
முழுதான ஓவியம்
வரைதாள் நெஞ்சமோ
வலிக்கின்ற வேளை

சிரிக்கின்ற உதடுகளுள்
சிக்கிக்கொண்ட பொய்மை
பார்க்கின்ற விழிகளினால்
புரிந்திட முடியவில்லை

உறவென்றும் பிரிவென்றும்
உண்மையும் பொய்மையும்
உலகத்தின் நாடகங்கள்
உணரும்போது உரசுமே !

திரைவிழுந்த பின்னாலும்
திடுக்கிடும் காட்சிகள்
நடிகர்கள் முன்நிகழும்
நயமான நிதர்சனங்கள்

உள்ளத்தின் ஆழத்தில்
உணர்வெழுதும் கதைகள்
வாசிப்போர் இல்லாத
வாசிகசாலை நெஞ்சமதோ ?

கொஞ்சமாய்ச் சொல்கிறேன்
நெஞ்சத்தின் ஓலத்தை
பொழிகின்ற ஞானமழை
பொட்டல்வெளி நிலமொன்றில்

சிந்திக்கும் வேளையதில்
சிறகடிக்கும் எண்ணங்கள்
சிற்பியிடம் உளியுண்டு
சிலைவடிக்க கைகளில்லை

சொல்லிவிட மொழியுண்டு
கேட்பதற்குச் செவியுண்டா ?
உண்மையான விடுதலையை
உணர்ந்திருப்போர் யாருமுண்டா ?

ஊமையான விழிகளோடு
உண்மையெங்கே பேசுமின்று ?
விடிந்துவிட்ட இரவொன்றில்
விளக்காக இருளெதற்கு ?

விடிந்தபின்னும் தூங்குமிந்த
வியப்புநிறை மானிடர்கள்
துளிர்க்கின்ற கவிதைகளுள்
தூங்குமந்த உண்மைகளும்

சக்தி சக்திதாசன்

Sunday, November 26, 2023

அறிந்தவர் வாழ்வினில் ஆனந்தம்

என்னைத் தாக்கிய கணங்கள்
என்னுள் விளைத்த ஏக்கங்கள்
ஏதோ புரிவித்த வாழ்வின் யதார்த்தங்கள்
எதைதையோ காண்பித்த வடிவங்கள்
யாரோடு யாரை யாராக இணைத்திட்ட
யாருமறியாத வாழ்வின் வேதங்கள்
யாத்திட்ட வாழ்வின் சாத்திரங்கள்
நீயென்றும் நானென்றும் புலர்ந்திட்ட 
நீங்காத உலகத்தின் பாத்திரங்கள்
தாங்காமல் தகித்திடும் உணர்வுகள்
தனியாக உணர்த்திடும் உண்மைகள்
தந்திடும் விளக்கத்தின் விடியல்கள்

திறக்கபடாமல் மூடிய பக்கங்கள்
இதயத்துள் புதைந்திடும் விந்தைகள்
நிறைக்கபடாத  பாத்திரத்துள் நீரது
தளும்புவதைப் போலவே நினைவுகள்
சூடிய பாத்திரத்தின் தன்மையை
தேடிய வேளைகளின் தேடல்களுள்
விதைக்கப்பட்ட உணர்வுகளின் தளிர்கள்
விருட்சமென விளைந்திடும் வாழ்க்கை
துறந்திடும் உறவுகளின் யாத்திரை
பிறப்பினில் வருபவைகள் மாத்திரம்
வரைந்திடும் சித்திரத்தின் கோடுகள்
வளைந்திடும் போதிலும் வடிவங்கள்

வெள்ளமாய் எண்ணங்கள் பாய்ந்து
உள்ளத்தின் கதவுகளை உடைத்து
சொல்லிடத் துடித்திடும் பொழுதினில்
மெல்லென விழித்திடும் கனவுகள்
சொல்லெனத் தவித்திடும் புனைவுகள்
வில்லெனப் புறப்படும் கவிதைகள்
எனக்கென நான் வடிக்கும் போதினில்
எங்கெங்கோ நெஞ்சத்தில் உரசிடும்
குழந்தையாய்த் தவழ்கையில் தஞ்சம்
வாலிப வனப்பினில் கெஞ்சும் 
குடும்பத்தின் சுமைகளில் மிஞ்சும்
குவலயக் கடமைகளே விஞ்சும்

வாழ்வினில் பலதூரம் ஓடியோடி
தேடிக்கொண்ட வசதிகளின் வழி
வாழ்கின்ற வாழ்வினை நிலையென
எண்ணிக்கொண்டு வாழ்கின்ற வேளை
உலகமெனும் நாடக.மேடையில்
உடலென்னும் உடை களையும் வேளை
விழுகின்ற திரையினை உணர்ந்தால்
விளங்கிடும் வாழ்க்கையின் சூட்சுமம்
நேற்றென்றும் இன்றென்றும் நாளையும்
நாள்தோறும் நிகழ்ந்திடும் காட்சிகள்
ஆன்மாவே நிரந்தர நடிகர்கள்
அறிந்தவர் வாழ்வெல்லாம் ஆனந்தம்

சக்தி சக்திதாசன்