Sunday, December 24, 2023

கல்லறையில் மட்டும்

ஏறத்தாழ 49 வருடங்களுக்கு முன்னால் பதின்ம வயதுகளில் இருந்த‌ என் நண்பன் ஒருவன் தனக்குக் காதல் கடிதம் எழுதிய ஒரு பதின்ம வயதுப் பெண்ணுக்கு எழுதிய பதில் கடிதத்தின் தழுவலில் என் மன உணர்ச்சிகளைக் கொட்டிய போது உதிர்ந்ததிந்தக் கவிதை.

சம்பவம் உண்மை, வரிகள் மட்டும் கருத்டோடு முகிழ்த்த கற்பனை

கல்லறையில் வாழும் ......

========================

உன்
விழிகளின் அசைவிலே
என்
நினைவுகள் உன் நெஞ்சினில்
வாழ்வதை
நீ
சொல்லாமலே , நான்
புரிந்து கொண்டேன்

ஏக்கத்தின் ஆழம் தந்த‌
தாக்கத்தினால்
உன் விழிகள்
தூக்கத்தை மறந்ததை நான், உன்
பார்வைகளின் நீளம் தந்த‌
தாக்கத்தினால்
உணர்ந்து கொண்டேன்

கருமை பூத்த வட்ட‌ விழிகளின்
வாட்டத்தை
அவைகளின் இமைகள் பூக்க மறந்ததினால்
அஞ்சுகமே ! நான்
அறிந்து கொண்டேன்

என்னிதயத்திம் மையத்தில் ஓர்
துளையிட்டு அதனுள்
உன் நினைவுகளை புதைத்துக் கொண்டேன்
பூத்திடும் எண்ணங்கள் யாவிலும் உன்
பூமுகம் தோன்றிட வேண்டும் என்பதனால்

சேர்ந்திட ஏங்கிடும் போதிலும்
சேந்திழையாளே  கூடிட‌ முடியவில்லை
காரணம் கேட்காதே ஏனெனில் நான்
காருண்யம் நிறைந்தவன்
கனிகை உந்தன் இதயத்தைன் தேன்கூட்டினைக்
கலைத்திடும் தைரியம் எனக்கில்லை

வாய்க்கொரு வகை வகை ருசியாய்
பசியாற்றிடும் கூட்டத்தின் மத்தியில்
பிறந்தவன் இல்லையடி நான்
மற்றவர் புசித்திட விழிகளில்
மாற்றிட  முடியாத வகை கண்ணீர்
ஊற்றிடும் ஏழையின் தோட்டத்தில்
சேற்றில் முளைத்த் தாமரை நான்
செந்தாமரை உன்னை அடைந்திட முடியாத‌
சோற்றுக்கு அல்லாடும் வறியவனேதானடி

கட்டாயத்தாலியின் உறவால்
கலந்திட்ட ஊடல்களின் கலப்பில்
உதிர்ந்து விழுந்தவொரு துரதிர்ஷ்டக் கட்டை நான்
உறவை முறித்துக் கொண்டு
உல்லாச வாழ்க்கையை நோக்கி பறந்த‌
உதவாத தந்தையின் பெயரை என் பெயரின் முன்னால்
போடடுவாழும் ஒரு முட்டாள்
கோபுரத்திலே வாழும் குமாரியின் மனதில்
ஊஞ்சல் கட்டி ஆட நினைக்கலமா?

எனக்காகத் தன்னைத் தேய்த்து
என் நினைவொன்றே தன் உயிராய்க் கொண்டு
எண்ணங்களை மட்டும் தாங்கிக் கொண்டு
என்றுமே வற்றாத கண்ணீருடன் வாழும் என்
உத்தமத்தாயின் கண்ணிரைத் துடைக்கும்
உயர்ந்த லட்சியத்தில் எஈயும் என் கூட‌
நீயும் சேர்ந்தே
உதைப்பட்டுப் போக வேண்டாம்

அதனாலே உன் எண்ணங்களை
நம் கண்கள் கலந்ததினால்
முகிழ்த்த காதல் செடியின்
மலர்களைப் பறித்து
கல்லறைக்குள் புதைத்து விட்டு
உனக்காக ஒரு மாடிவீட்டு
மாப்பிள்லையைத் தேடிக் கொள்

ஏனேன்றால் ....... கண்ணே
இவ்வுலகில் ஆசைகள் மட்டும் போதாது
ஆசைகளை வாழவைக்க
பேராசை மிக்க மனிதர்களின்
பணக்கற்றைகளும் தேவை

ஏழைகளின் காதல் .........
என்றுமே ..........
கல்லறையில்  மட்டுமே வாழும் ......

சக்தி சக்திதாசன்

Saturday, December 16, 2023

எமக்கான எம் கடமை

தெரியாத பாதை ஒன்றில்
தெரிகின்ற பயணமிது
புரியாத விளக்கமொன்றில்
புரிந்திட்ட புதையலிது
விடியாத இரவொன்றில்
விடிந்திட்ட வாழ்க்கையிது
புலராத பொழுதொன்றில்
புலர்ந்திட்ட உணமையிது
முடியாத கதையொன்றின்
முடிந்து விட்ட வினையிது
கேட்காத ஒலியொன்றின்
கேட்கின்ற நாதமிது
உருள்கின்ற உலகமதில்
உருட்டுகின்ற பகடையிது

நேற்றென்னும் புத்தகத்தில்
இன்றுணர்ந்த பாடங்கள்
நாளைய அனுபவங்களாய்
சேர்க்கின்ற அத்தியாயங்கள்
நிறைகின்ற செல்வமெல்லாம்
கரைகின்ற பொழுதொன்றில்
சுரக்கின்ற வெள்ளமாய்
இறைக்கின்ற உள்ளுணர்வுகள்
பூக்கின்ற மலர்களாய்
புண்ணிய பாவங்களென
செய்திட்ட செயல்களிலே
சேராமல் சேர்ந்திருக்கும்
நிலவோடும் பாதைதனில்
நீங்காத கனவுகளாய்
கண்ணோடு காட்சிகள்
காண்பவை கவிதைகளாய்

எனைமூடும் மேகங்களாய்
என்னுள்ளே எண்ணங்களாய்
எப்போதும் தவழ்ந்திருக்கும்
எதுவரையும் கூடவருமோ ?
நினைவுகளில் நீந்துகின்ற
நிமிடங்களுள் கலந்திருக்கும்
புனைவுகளில் வரிகளாய்
புனைந்திடும் கவிதைகளில்
கவிஞனெனும் போர்வைக்குள்
மனிதனிவன் உறக்கமிது
விழித்துக் கொள்ளும்
வேளைகளின் வெளிச்சமித
சொல்லச் சொல்லவேயென்றும்
மெல்லெனவே இனித்திருக்கும்

வாழ்வென்னும் பாதையிலே
வளைவுகளும் நெளிவுகளும்
சுழன்றடிக்கும் புயலாக
சூழ்ந்திருக்கும் நிகழ்வுகளும்
பயணமதன் பாதையிலே
பார்ப்பதெல்லாம்  அதிசயங்கள்
மீட்டிவிடும் ராகங்களாய்
மூண்டெழுந்திடும் உணர்வுகள்
யார்யாரோ வருகின்றார்
எதையெதையோ புகட்டுகின்றார்
கேட்பதெல்லாம் புரிந்துவிட்டால்
கிடைப்பதெல்லாம் ஞானமன்றோ !
நமக்கான நாமியற்றும்
நம்கடமை நம்மையறிவதே !

சக்தி சக்திதாசன்

Thursday, December 07, 2023

சில இரவுகள் சில நிலவுகள்

சில இரவுகள்   சில நிலவுகள்
வானமெனும் தேரெறி
பவனி வந்திடும் வெண்ணிலவு
சுரக்கப் பண்ணு ம் உணர்வுகள்
சுவையுறவே கலந்திடும்

பூரணமாய் ஓரிரவும்
பூஜ்ஜியமாய் ஓரிரவும்
விளக்கிடும் வாழ்வினை
விந்தைதான் எண்ணினால்

தேய்ந்திடும் பொழுதிலும் - பின்
வளர்ந்திடும் வேளையிலும்
வலம் வரும் பாதையில்
விளக்கிடும் நிகழ்வுகள்

கண்களில் காதலைத் தேக்கி
கலங்கிடும் கனிகையை நோக்கி
துலங்கிடும் நிலவொளி தாக்கி
விளம்பிடும் துயர்தனை நீக்கி

உறவுகள் தந்திடும் உறவு
உராய்ந்திடும் உணர்வின் துடிப்பு
ஊர்ந்திடும் நிலவினில் தெறிப்பு
உறக்கத்தில் கனவாய் வெடிப்பு

கிண்ண‌த்தில் குழைத்திடும் சோறு
அன்னத்தை  ஊட்டிடும் பேறு
அன்னையும் குழந்தையும் பாரு
அதற்கும் நிலவுதான் தேறு

நிலவின் பயணம் அதற்கு
நிழல்கள் இல்லை பாரு
நிலவின் காட்சிகள் நூறு
சாட்சியாய் கேட்போர் யாரு

நிலவினைத் தேடிடும் மனிதன்
நிம்மதி தொலைத்தது நிலவு
அமைதியாய்த் தவழ்ந்தது அன்று
அழித்திட்ட மானிடம் இன்று

உண்மையைச் சொல்வது பூரணை
பொய்மையாய்க் கரைவது அமாவாசை
இடையில் வளர்வதும் தேய்வதும்
இதுதான் வாழ்க்கையின் தத்துவம்

கண்களை மூடி நானும் தேடி
கண்டது நிஜமாய் வேறு
சில இரவுகள் சில நிலவுகள்
சில உணர்வுகள் சில கனவுகள்

சக்தி சக்திதாசன்