Tuesday, August 29, 2023

கவிதைச் சிறகெடுத்து

கவிதைச் சிறகெடுத்து
கற்பனை வானத்திலே
கண்ணிமை திறந்ததும்
காலையில் ஓர்பயணம்

நினைவுப் பாதையிலே
நடந்திடும் உள்ளமதில்
நடமிடும் தமிழாடிடும்
நர்த்தனக் களியாட்டம்

கனவுகள் இனித்திடுமே
மனமது விழித்திடுமே
புனைவுகள் கவிந்திடுமே
நினைவுகள் கனத்திடுமே

உள்ளத்தின் மையத்திலே
உதித்திடும் கருத்துக்கள்
உறுத்திடும் விரல்களை
உருண்டிடும் வரிகளாய் !

விழுந்திடும் வேளையெலாம்
எழுந்திடும் மனமிருந்தால்
கழிந்திடும் பொழுதுகளெல்லாம்
பொழிந்திடும் வெற்றிகளே !

தடைகள் அனைத்தையுமே
படிகளாய்ப் பார்த்திட்டால்
விடைபெறும் சோகங்கள்
அடைவதெல்லாம் ஆனந்தம்

அன்புடை சோதர,சோதரியரே !
அறிவுடன் செயற்பட்டால்
அகிலத்தில் உமைவென்றிட
ஆருண்டு கூறிடுவீர் ?

கைகளை இணைத்திங்கு
காண்பதெல்லாம் மனிதமென்று
ஒன்றெனும் மனம்கொள்வீர்
ஓரினம் ஓர்வழி என்றிடுவீர்

நாளைகளின் நாயகரே !
நம்பிக்கையுடன் எழுவீர்
நானிலச்செழிப்பு உம்கையில்
நெஞ்சிலதைக் கொண்டிடுவீர்

சக்தி சக்திதாசன்

Sunday, August 27, 2023

உணர்வுகளில் உரசலில்லை

நீலவான முன்றலிலே
முழுநிலவின் வெளிச்சத்தில்
மின்னுகின்ற தோரணங்கள்
கண்சிமிட்டிக் கதை கூறும்

மூடுகின்ற விழிகளுக்குள்
முழுவர்ணக் கனவுகளாய்
முப்பரிணாம காட்சிகளாய்
முடிச்சவிழ்க்கும் நினைவுகள்

உள்ளமெங்கும் வெள்ளமாக
உள்ளதெல்லாம் கற்பனையே
உருவமில்லா உணர்வுகள்
உருட்டுகின்ற உரசல்கள்

சுட்டெரிக்கும் கதிர்களோடு
சூரியனின் சுற்றுப்பயணம்
விட்டகழும் பனிப்புகார்கள்
விரைந்தோடும் காலைகள்

புதியதோர் விடியலிது
புதியதொரு பயணமிது
பிறக்குமொரு புத்துணர்ச்சி
புதுமுயற்சி புதுத்துணிவு

எம்விடியல் எம்கையில்
எதுக்கிங்கே ஏக்கங்கள் ?
விழுவதெல்லாம் எழுவதற்கே
விளைந்ததெல்லாம் அனுபவமே !

விதைத்தவைகள் நன்மையெனில்
அறுப்பதுமே நன்மைகள்தான்
கதைகளுக்கு முடிவுண்டு
காலத்திற்கோ எல்லையில்லை

விழிப்புணர்வு கொண்டிட்டால்
விடியல்கள் வெளிச்சமே !
உள்ளத்திலே கள்ளமில்லை
உணர்வுகளில் உரசலில்லை

சக்தி சக்திதாசன்

நாடகத்தில் நடிகர்கள்

கடந்துபோன காலங்கள்
நிகழ்ந்துபோன நிகழ்வுகள்
முடிந்துபோன கதைகள்
முதிர்ந்துபோன ஞாபகங்கள்

முடிவில்லாத கதைகளாக
முற்றுப்பெறாத எச்சங்கள்
விளக்கமுடியா விதிகளாக
விந்தைமிகு சாத்திரங்கள்

திறந்திருக்கும் கதவுக்குள்
திறக்கமுடியா புத்தகங்கள்
படிக்கமுடியா தொலைவிலே
பயனுள்ள தத்துவங்கள்

தேவையற்ற தேடல்களைத்
தேடிவரும் உறவுகளும்
தேடிச்செல்லும் வேளையிலே
தீர்ந்துபோகும் தேவைகளும்

நிலையில்லா வாழ்க்கை
நித்தியமும் ஓதுகின்றார்
சத்தியத்தின் வாயிலிலே
சரித்திரத்தை மறைக்கின்றார்

தொலைத்த வாசலொன்று
தனக்குள்ளே உள்ளதென்று
தெரியாமல் தவிக்கின்றார்
தெரிந்தவர்கள் சிரிக்கின்றார்

காவோலை விழுமென்று
காத்திருக்கும் குருத்தோலை
புயலுக்குத் தெரியுமா
பறிக்கும்போது எதுவென்று ?

இக்கணத்தில் வாழ்வதொன்றே
எக்கணமும் அறிவுடமை
நாடகம்தான் உலகென்றால்
நாமதிலே நடிகர்களே !

சக்தி சக்திதாசன்