Sunday, October 14, 2007

காலமகள் மடியில் கனவொன்று கண்டேன்

காலமகள் மடிதனிலே
கண்மூடிக் கொஞ்சம்
களைப்பாறும் போது
கண்டு வந்த கனவதன்
கதை கூறும் நேரம்

அந்தி மஞ்சள் மாலையில்
ஆடிவரும் தென்றலது
ஊஞ்சலாட்டும் மரக்கிளையில்
உட்கார்ந்த கிளியன்று
உருகுகின்ற நிலை கண்டேன்

காரணத்தை நானும் அப்போ
கனிவாக கிளியிடம் கேட்க
கண்நிறைந்த நீரோடு
கலங்கியந்த கிளியதுவும்
கதைபேசத் தொடங்கியதே

நேற்றுவரை நானும் கூட
நேசமிக்க குடும்பத்துடன்
பாசமாக வாழ்ந்திருந்தேன்
மோசமிக்க மனிதர்களின்
நாசமிகு காரியத்தால் .......

விம்மியது கிளி, பொங்கியது கண்ணீர்
சொட்டுகின்ற நீரகற்றி தொடர்ந்தது
இயற்கை தந்த வரமாக நிமிர்ந்ததொரு
இனியதொரு ஆலமரம் ... ஆமாம் எனது
இல்லறமும் அதில் தானே, நல்லறமாகியது

இருப்பதையெல்லாம் தனதாக்கி
இன்னும், இன்னும் வேண்டுமென
இதயத்தை கல்லாக்கிய மனிதன்
இயற்கை கொடுத்த கொடையை
இல்லையென்றாக்கினான் வாழ்வை

பச்சைக்கிளி உனக்கேன் இந்தப்
படுசோகம் வந்தது சொல் கிளியே !
பரமன் படைப்பினில்
படைத்தவை
பாரினில் அனைத்தும் சமனே
பகர்வாய் உன் துயரை ......

உன் இனத்தைச் சேர்ந்தவன் தான்
என் இனத்தை அழித்தான் கேளாய்
ஆலமரம் தன் வீட்டின் முன்னிருந்து
அழகைக் கெடுக்குது என்றே அவன்
அடியோடு அறுத்தான் அம்மரத்தை....

வாழ வழிதேடி வகையறியா வேளையில்
வதிய இடங் கொடுத்து ஆதரித்த
அன்பு ஆலமரம், அதில் தானே
அழகாய் நான் அமைத்த குடும்பம்
அன்பாய் வாழ்ந்திருந்தது

ஏன் மனிதா ? ஏனுங்கள் மனிதருக்கு
அளவற்ற ஆசைகள். இயற்கையின் வளத்தை
அழித்து, அழகு காணும் குறுகிய புத்திகள்
அறியமாட்டீரோ இவைதான் உங்கள்
அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை

விழுந்த மரத்தோடு மறைந்த சொந்தங்கள்
வதைக்கும் சோகங்கள் வழியும் நெஞ்சத்தில்
விதைத்த இன்பங்கள் புதைந்தே போயின
இன்றோடு நான் ஊமையாய் மாறினேன்
இனியொரு போதும் மனிதரே உம்மோடு பேசேன்

திடுக்கிட்டு விழித்தேன் ! என்னே பயங்கரம் !
எமைக்காக்கும் இயற்கையை நாமே அழிக்கின்றோம்
எத்தனை காலங்கள் எமையே ஏமாற்றுவோம்
என்னருமை மானிதர்காள் விழித்தெழுங்கள்
எப்போதும் காலமகள் மன்னிக்க மாட்டாள்.

மனமெங்கும் மகனாட

அன்பின் நெஞ்சங்களே எமது மகன் தனது நான்காவது ஆண்டு மருத்துவ பயிற்சிக்காகச் சமீபத்தில் வாஷிங்டன் சென்றுவிட்டான், இம்முறை அவனது பிறந்த தினத்தில்தான் நானும், அவன் அன்னையும் அவனைப் பிரிந்து இருந்த முதலாவது பிறந்ததினம். அப்போது மனதில் எழுந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சந்தர்ப்பம் அளித்தமைக்கு அன்பான வணக்கங்கள்

மனதிலொரு கவிதை
மைந்தனுனைத் தேடி

ஆசை மகனுன்னை
ஆகாயவிமானமது
அழைத்துச் சென்றெமக்கு
அளித்த தனிமை தந்த
அன்புத் தண்டனையால்
பாடும் கவிதையிது

தாலாட்டு உனக்கு
தாய்பாடும் பருவமல்ல
தந்தை மனிதிலின்று
தவழுகின்ற கானமிது

செல்வமகன் நீயும்
சென்றாய் அமேரிக்காவுக்கு
கல்வி வளம் அதனை
கட்டிக் காப்பதற்கு
வாரங்கள் எட்டேதான்
மகனே பிரிந்திருக்கும் காலமிது
பாழும் மனம் அதுவோ
பாவம் அழுகிறது

அன்னை வாயில்
உதிர்க்கும்
வார்த்தையெல்லாம்
அன்புமகன் உந்தன்
ஆசைக் கனவுகளே
உன்னைப்பிரிந்து வாடும்
உள்ளங்கள் இரண்டு
தனிமைக்கூட்டில் நாம்
தவிக்கும் பொழுதுகள்

பிறந்தநாள் வந்தது மகனே - நீ
பிறந்ததுமுதல் இந்நாள்வரை நாம்
பிரிந்து இருந்ததில்லை அறிவாய்
பாவம் அன்னையவள்
பதைத்து இருந்தநிலை
பார்த்து தந்தை இவன்
மறைந்து வருந்தும் கலை

உனைப்பிரிந்த துன்பம் தனை
உனைப்பெற்ற பெற்றோர் நாம்
தாங்கும் வகைசொல்வேன் கேளாய் ...

நாம் பெற்ற செல்வம்
நலமாகப் பயின்று
நானிலத்தில் தலைசிறந்த
நல்லதொரு மருத்துவனாகி
மக்களுக்கு சேவை செய்து
மனிதாபிமானம் மிக்க
மருத்துவன் இவன் என
மண்ணுலகம் போற்ற வேண்டும்

அன்று
அன்னை அவள் மனமும்
தந்தை என் மனமும்
விண்ணுலகம் வரை உயர்ந்து
விம்மிப்புடைத்து நிற்கும்
அந்நாள் வரை எமைக்காக்க
ஆண்டவன்
அருள் வேண்டும்

Tuesday, October 02, 2007

சத்தியம் ஈன்றெடுத்த சரித்திர நாயகன்

சத்தியத்தின் மைந்தனே
சரித்திரத்தின் நாயகனே
சாதனையின் பிறப்பிடமே
சுதந்திரத்தின் இருப்பிடமே

ஆயுதம் எடுக்காமலே நீ
அடக்குமுறையை எதிர்கொண்டாய்
அஹிம்சையின் ஆதாரமே
அமைதியினால் அகிலத்தை
ஆட்கொண்டவனே

அறிவினை வளர்த்துக் கொண்டாய்
அன்னைபூமியை மனதில் கொண்டாய்
ஆஸ்திகளை தூக்கியெறிந்து
என்அண்ணலே துன்பத்தைத் தாங்கிக்கொண்டாய்

பாரதமாதாவின் தவப்புதல்வன்
பாரினில் உரிமையைப்
பாதுகாக்கபணிவுகூட
ஆயுதம் எனக்காட்டியவன்
பணிந்தேன் உந்தன் பாதங்களை

துப்பாக்கியால் பேசியவர்களை
துல்லியமாய் மதித்து நீயும்
துணிந்து உன் தாய்நாட்டின்
தூய்மைதனைக் காத்தவனே

அன்பு, சத்தியம், துணிவு, கருணை
ஆயுதங்களாய்க் கொண்டு
அவனியில் உள்ளோர்க்கெல்லாம்
அண்ணல் காந்தி ஓர் மகாத்மாவானாய்

உந்தன் பாதையை தொடர்ந்தே
உள்ளத்துள் சத்திய சோதனை நடத்தியே
உண்மையான சுதந்திரத்தை நோக்கி
உருளட்டும் எமது பயணம் உலகில்

காந்தி ஜெயந்தி இது
காலத்தில் அழியா மனிதனின்
காவிய வாழ்வினைப் போற்றியே
கருணை நெஞ்சில் கொண்டே வாழ்வோம்

அன்புடன்
சக்தி

என்னைத் தேடும் எனது கவிதை

என்னைத் தேடும் எனது கவிதை

எனக்குள்ளே நானே
உருமாறிப் போனேனோ ?
எனைத் தேடும் கவிதைகள்
என்னோடு மோதும்

சிலகாலம் கண்ணீரில்
சிலகாலம் பன்னீரில்
எதிர்காலம் எந்நீரில்
எனை மூடும் மழைநீரில்

சிந்தித்த பொழுதெல்லாம்
சிறையான நிமிடங்கள்
விடைகாணும் பொழுதினிலே
உடைந்து போன வடிவங்கள்

தத்தளிக்கும் ஆழ்கடலோ
தடுமாறும் புதைசேறோ
விதைத்து விட்ட வினைகள்
விளைச்சல் காணும் வேளையிது

அடிபட்ட மனமெங்கும்
ஆழப்பதிந்த காயங்கள்
ஆறாத வடுக்களெல்லாம்
ஆறிப்போன உணர்ச்சிகளே

திசைமாறிப் பறந்த கிளி
திக்குத்தெரியாத காட்டினிலே
அண்ணாந்து பார்க்கும் வேடனுக்கு
அனைத்தும் ஒரு குறிதானே !

விளக்கமில்லா விசனங்கள்
விளைந்து வரும் நெஞ்சினிலே
எனைத்தேடும் கவிதைகள்
என்னோடு மோதுமம்மா

சக்தி சக்திதாசன்