Monday, April 22, 2024

ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்

சிந்தனை எனும் தேரேறி
எந்தனில் கொஞ்சம் பயணித்தேன்
முந்தனை யான் வாழ்ந்த முறை
நிந்தனை என்பதை நானறிந்தேன்

அப்பனும், அம்மையும் இணைந்து
அவனியில் என்னை விழுத்தினர்
எப்பயனடைய எவ்வழி செல்வது
அப்பயனறியாமல் தான்  வாழ்ந்தேன்

மெய்ப்பொருள் வாழ்வில் புரியாமல்
பொய்ப்பொருள் தேடி வாழ்ந்த காலம்
சித்தருள் உறைந்த உண்மைகள் காணா
பித்தருள் ஒருவனாய் இருந்தது புரிந்தது

முப்பொருள் தேடியோடி நானும்
முத்தமிழ்ச் சுவையுள் அமிழ்ந்திட்டேன்
எப்பொருள் யார்வாய் கேட்பினும்
மெய்பொருள் காண்பது அறிவென்றுணர்ந்தேன்

என்னுளொளிர்ந்த "நான்" என்னும் விளக்கு
எண்ணெய் இன்றி எரிவது கண்டேன்
எப்படி அதனை அணைப்பது என்று
என்னுள் இன்னும் கேள்விகள் மூளும்

உள்ளத்தில் இருக்கும் உண்மைகளை
உருக்கிக் கவிதையாய் வார்த்திடத் 
உணர்வுகள் என்னை மனிதனாக்கும்
உ றுதிகொண்டேன் மன‌திலின்றே

என்னுள் இருக்கும் என்னை
எரித்திடத் தேவையை உணர்ந்தேன்
என்னைப் பார்த்துச் சிரித்தது
எரிக்கும் எண்ணையாய் தியானமே !

கண்ணை மூடிக் காத்றிலேறி
எண்ணந் துறந்து எல்லாமிழந்து
எனக்குள் ஆழத்தில் தேடுவது
ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்


சக்தி சக்திதாசன்

Saturday, March 30, 2024

தியானம் எனுமொரு சிறப்பு



உரு.ண்டோடும் 
உலகே !
அவசரமாய் எங்கே நீ
ஆவலாய் ஓடுகிறாய் ?

சுழன்றோடும் உன்னுள்
எத்தனை
சுவாரஸ்யங்கள் . . . 
இருக்கென்ற மமதையில்
இரக்கத்தைத் தொலைத்து
விடிந்த பின்னும்
இருளினுள் புதைந்து போன 
மானிடர்கள் . . . 

இல்லை, இல்லை என்றே
இரைந்து கொண்டு 
இருப்பதையும் தொலைத்து
அலைந்திடும் கூட்டம் . . . 

போதாது . . . போதாது என்றே
போதை கொண்டு ஆசையில்
வாழ்வெல்லாம் தேடிக்கொண்டே
அலைந்திடும் ஒரு கூட்டம் 

உள்ளத்தில் இருளையும்
உணர்வினில் சுயநலத்தையும்
ஆடையாய் அணிந்து கொண்டு 
அருள் தேடி ஆலயத்தினுள்
ஆண்டவனை வேண்டும்
அதிசயமான ஒரு கூட்டம்

கிடைத்ததைப் பிரித்து 
பசித்தவர் புசித்திட தரும்
அன்பினைக் கொண்டே வாழும்
அற்புதப் பிறவிகளாய் ஒரு கூட்டம்

இத்தனை கண்டு அதனை
இதயத்தில் கொண்டு மெதுவாய்
உருண்டிடும் உலகே உன்னுள்
உருள்வது தெரியாமலே நாமும்
உழன்று கொண்டே செல்கின்றோம்

உள்ளத்துள் எம்முள் கொஞ்சம்
ஆழமாய் நுழைந்தங்கே
உறைந்திருக்கும் ஆன்மாவின்
குரலை கேட்டிடும் வழியைத்
தொலைத்து விட்டு நாமும் ஏனோ
காலத்தையும் கண்டதையும்
காரணமாய்ச் சொல்லிக்கொண்டே
உலகத்தோடு உருள்கின்றோம்

எதையுமே துறக்காமல் வாழ்வில்
எதையுமே இழக்காமல் எம்முள்
எம்மைத் தேட சில மணித்துளிகள்
எமக்காய்ச் செலவிடத் துணிந்தால்
கிடைத்திடும் அமைதி சுலபமாய்
உறைந்திடும் அமைதி உள்ளத்துள்
இதற்கென ஒரு திறப்பு அதுதான்
தியானம் எனுமொரு சிறப்பு

சக்தி சக்திதாசன்

Saturday, February 17, 2024

ஏனிந்த மெளனம் தோழா ?

ஏனிந்த மெளனம் தோழா ?
காலத்தின் வழி வந்த வறுமையின்
காயத்தின் வடுக்களைக் கண்டு
வாடிப்போய் விட்டாயா ?
நிழல்களின் கோலத்தை
நிஜமென நம்பிடும் உலகத்தின்
விசித்திர நடப்பினை நீயும்
விளங்கிட முடியாமல் கலங்குகிறாயா ?

உலகத்தின் நாயகன் அவனே
உண்மையின் ஆதிமூலம் 
அவன் தந்த பரிசான
இயற்கையை தமக்கென கூறிட்டு
இரக்கத்தை மறந்து வாழும்
இதயமற்ற மனிதரின் செயல்கள்
தீட்டுதோ உனது வறுமைக் கோலத்தை

உலகம் சுழல்கிறது என் தோழா 
இன்றைய உலகு வேறு அதே போல்
நாளைய உலகும் வேறு 
எது இங்கே நிஜம் கூறு ?
எவரறிவார் அவர்தம் முடிவை ?
அவரவர் உடல்களுக்குள்
ஆன்மாவின் இருப்பை அறியாமல்
ஆணவச் சுழலில் அவசரமாய் ஏன் ?

விழியென்னும் தீபத்தில் நீயும்
ஒளியெனும் கனலை ஏற்று
இருளொடு கலந்த பொழுதை
இல்லாமல் ஆக்கும் செயலாற்று
விதைத்திடு நற்பல விதைகளை
வளர்த்திடு நற்பண்புகளை
செழித்திடும் நாளைய உலகம்
செதுக்கிடும் சிற்பியாய் மாறிடு

நீ, நான் எனும் நிலை மாற்றி
நாம் எனும் உறவை விதைத்திடு
நளைய உலகம் உனக்காவே விடியும்
நம்பிடு தோழா ! நாளையின் நாயகன்
நானிலம் உன்னைப் போற்றி
நாளைய சரித்திரத்தில் ஓர்
நட்சத்திரமாய் உயர்ந்தே பார்க்கும்

உருளும் இந்தப் பூமிப்பந்தினுள்
இருளும் ஒளியும் இருந்திடல் போல
இன்பமும்,துன்பமும் காணாய்
இயற்கையின் விதியை உணர்வாய்
முயன்றால் மட்டுமே தோழனே !
மூடிய கதவுகள் திறக்கும்
காட்சியைக் கண்டிட வேண்டுமெனில்
கண்களைத் திறந்திட வேண்டும்

உண்மையை தெரிந்தால் மட்டுமே
உள்ளத்தில் அமைதி தோன்றும்
உனக்கெனவும் எனக்கெனவும்
உள்ளதைப் பிரித்திடும் மனிதர்
உன்வழி நேர்வழியாய்ச் சென்றால்
உலகில் உனக்கு வெற்றியே
ஆன்மீக அறிவினை தெரிந்து
ஆற்றுவாய் பலசெயல் இன்று
அமைதியின் தரிப்பிடம் உலகென
அனுதினம் புதுவிதி இயற்று


சக்தி சக்திதாசன்

Wednesday, January 24, 2024

தித்திக்கிறதே ! தோழா !

தித்திக்கிறதே ! தோழா !
இந்தக் காலைப்பொழுது
தித்திக்கிறதே !

எண்ணத்தின் சாரத்திலே
எண்ணிலா வண்ணங்கள் கொண்டே
கற்பனைத் தூரிகையால்
இயற்கை அன்னையின்
வனப்புத் தனை
கவிதை எனும் ஓவியமாய்
கவிஞனவன் தீட்டுகின்ற
பொன்னான காலையிது

இயற்கை அன்னையின்
மேனியை மூடிய
காரிருள் எனும் சேலையைத்
தன் புத்தொளிக் கதிர்களால்
வெண்மையாக்கி ஓர் தேரில்
கிழக்கிலிருந்து தொடங்கும்
ஆதவன் பவனியைப்
பறைசாற்றுமிந்தக் காலையிது

உலகத்தை உருட்டும் வல்லமை
உழைப்பவர் கரங்களில் மட்டுமே
உதிரத்தை வியர்வையாக்கி எமக்கு
உணவளிக்க உழைத்திட
விழித்திடும் எங்கள் விவசாயத்
தோழர்களை துயில் நீங்கி
துள்ளியெழுந்திட இசைபாடும்
மெல்லிய காலைப் பொழுதிது

இரவின் கருமையை
குளிர்ந்திட வைத்திட
உறைந்திடும் பஞ்சினைப் போன்ற
காலைப் பனியை மெதுயாய்
விரட்டிட முயலும் ஆதவன் கதிர்கள்
தெளித்திடும் ஒளியினைக் கண்டு
கழித்திட வைத்திடும் காலைப்பொழுது

சிந்தனைச் சக்கரத்தை
சுழற்றியொரு விசையோடு
விந்தைமிகு எண்ணச்சுழல்களில்
வட்டமிடும் கருத்துக் குவியல்களை
முந்தையொரு பொழுதுதினில்
சிந்த மறந்துவிட்ட பித்தனிவன்
பிந்தையிந்த வாழ்வதன் வாசலில்
பிதற்றிடும் வரிகள் தாமிவையோ

கண்களைத் திறந்து
கண்டிட்ட வேளை என்னெஞ்சினை
அள்ளிக் கொண்டதிந்த
காலைப் பொழுதினைக் கொண்டாடிட
சிதறிய தமிழ்ச்சொற்கள் எனும்
மலர் கொண்டு அர்ச்சிக்கிறேன்
தமிழன்னை பாதங்களை யானும்
தலைசாய்த்து வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Saturday, January 20, 2024

வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

உள்ளமெனும் ஆழிக் கரையினில்
உணர்வலைகளின் நுரைகள் பொங்க‌
மனமெனும் ஆலயத்தினுள் 
மங்காமல் நேசதீபம் ஒளிவீசும்

தொடர்ந்து வந்த தடைகளால்
உடைந்து போன இதயங்கள்
நிமிர்ந்து மீண்டும் நடந்ததினால்
ஒருங்கு சேர்ந்து இயங்கிடுதே !

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றியதால்
எஞ்சியது பெரும் வெறுமைகளே
வெறுமைகளுக்குள் தேடியதும்
வெளியானது முழு அமைதியே !

வாழ்க்கையெனும் நாடகத்தில்
வழிமாறி வரும் காட்சிகள்
விளையாடிடும் காலங்கள்
வினையாக்கிடும் வேகங்கள்

தேன் பேச வழியிருந்தும் ஏனோ
வீண் பேசிடும் நாவினால்
புண்ணாக்கிய நெஞ்சங்கள் தானே
தன்நோக்கிய விவேகங்கள்

எது வந்து போகினும் புவியில்
புது வசந்தங்கள் வேண்டினின்
முது மொழி தந்த வழிதனில்
அது கண்டிட வென்றிடீர்

காலம் தானாய் ஓடிடும் தோழர்
காண்பீர் துணிவுடன் நாளைகள்
ஞாலம் தனில் எம் ஜனனங்கள்
நாமாய் வேண்டியோ நடந்தது ?

ஒன்றே நெஞ்சில் கொண்டே நடந்தால்
நன்றே வாழ்வில் என்றும் நடக்கும்
இன்றே மனதில் நன்றே கொள்வீர்
வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

சக்தி சக்திதாசன்

Tuesday, January 16, 2024

சிந்தனை பூத்தது

சிந்தனை பூத்தது
எந்தனை மனதில்
விந்தை புரிந்திடும்
முந்தை நினைவுகள்

காலையில் மலர்வது
கவிதைகள் ஆயிடுமோ ?
மாலையில் மலர்பவை
மயக்கத்தின் நிகழ்வோ ?

நிற்பவை காண்பதும்
நடப்பவை தோற்றமும்
நற்றமிழ் வடிவினில்
நல்லினிய கவிதைகளோ?

எத்தகை உயர்வும்
அத்தகை தாழ்வும்
வித்தக வடிவினில்
விதைப்பது கவிதையோ ?

முத்தமிழ்ச் சுவையை
முழுதாய் உணர்ந்திடும்
என்மன உணர்வினில்
எழுவதென் கவிதைகளோ?

எந்தையும் தாயும்
முந்தையோர் வாழ்வில்
சிந்தையில் விதைத்தவை
சிந்திடும் கவிதைகளோ ?

விண்ணில் தவழும்
என்னில் உணர்வுகள்
அன்னைத் தமிழில்
பின்னிடும் கவிதைகள்

வேண்டும் , வேண்டும்
மீண்டும்  , மீண்டும்
மண்ணில் பிறந்தால்
மனதினில் தமிழெனக்கு

சக்தி சக்திதாசன்

Friday, January 12, 2024

வாழ்விலில்லை இன்பதுன்பம்

காலையின் இதழ்களை
காலம் விரித்தது.
கதிரவன் பயணம்
கதிர்களாய் மலர்ந்தது

இயற்கையின் அதிசயம்
இதயத்தை நிறைத்தது
இன்பத்தின் ஊற்றாய்
இறைப்பது ஆனந்தம்

கிளைகளில் பறவைகள்
செடிகளில் மலர்கள்
தவழ்ந்திடும் தென்றல்
தழுவிடும் மழைத்துளி

பிரபஞ்சம் வகுத்திட்ட
பிறழாத நியதிகள்
புரிந்திட்ட பேர்களுக்கு
புலர்ந்திடும் ஞானமே !

எமக்குள்ளே நாமறியா
எத்தனையோ புதுமைகள்
எப்படித்தான் அறிந்திடலாம்?
எப்பாதை சென்றிடலாம் ?

விழிப்புணர்வு கோண்டே
வினாடிகளை ரசித்திட்டால்
வியப்பான அனுபவங்கள்
விரிந்திடுமே தாமரையாய்

இலவசமாய் கைவசத்தில்
இருக்கிறது நமக்கெல்லாம்
இளமையான இதயத்தின்
இனிமையான ரகசியமே

சுவாசத்தை குருவாக
சுவீகரித்துக் கொண்டு
சுகமாகக் கண்மூடி
சுபமாகத் தியானிப்போம்

மெளனத்தின் மொழியொன்று
மெல்லினிய அனுபவத்தை
மெத்தெனவே பரிசளிக்கும்
முழஅர்த்தம் புரிந்திடுமே !

வேண்டிவந்த வாழ்விதுவெனும்
வேதமிகு தத்துவத்தை
விளங்கிக்கொண்ட பின்னாலே
வாழ்விலில்லை இன்பதுன்பம்

சக்தி சக்திதாசன்