Thursday, September 28, 2023

கவிதைதேடும் கவிஞனிவன்

அன்றிலொன்று ஆனந்தமாய்
ஆடுகின்ற மாலையிது
நெஞ்சிலொரு ராகமது
நெகிழ்த்துகின்ற கானமிது

புற்தரையில் வந்திறங்கிய
புறாவிரண்டின் குதூகலிப்பு
சிறகை விரித்தவைகள்
சிலிர்க்கின்ற அருங்காட்சி

மகரந்த்க் கவர்ச்சியினால்
மலருக்குமலர் தாவும்
வண்ணத்திப் பூச்சிகளின்
வர்ணமிகு வடிவங்கள்

வண்டுகளின் ரீங்காரம்
வனப்புமிகு தோட்டத்தில்
தேனருந்திய மயக்கத்தில்
தெம்மாங்கு இசைத்திடுமே 

மஞ்சளாடை  போர்த்துவிட்ட
மாலைநேர வானத்திலே
அவசரமாய் ஓய்வெடுக்க
ஆதவனின் விரைவோட்டம்

பெளர்ணமியாய் ஜொலித்திட
பயணப்படும் நிலவுமகள்
தோரணங்களாய்த் தாரகைகள்
தொங்குகின்ற இரவூர்வலம்

காதலென்னும் கவிதையினைக்
காதோரம்  கிசுகிசுக்கும்
கனவுலகக்  காந்தர்வர்
கதைபேசிடும் பொழுதேகும்

இமையெனும் திரையினை
இழுத்து மூடியொரு
கனவென்னும் தேரேறி
கவிதைதேடும் கவிஞனிவன்

சக்தி சக்திதாசன்

Thursday, September 21, 2023

இளையோரே வாருங்கள்

சித்தத்தின் உணர்வுகளில் 
ஏனோ.சத்தமாய் 
ஒரு சங்கீதம்
சிந்திக்கத் தெரிந்திருந்தும் 
ஏனோ சந்திக்க மறுக்கிறது 
உண்மைகளை

மாற்றம் என்பது 
உலகில் என்றும்
மனித வாழ்வின் தத்துவம்
ஏற்றம், தேடித்தான் 
யாவரும் எதிர்காலம் 
நோக்கி நடக்கின்றார்

முகிழ்க்கின்ற லட்சியங்களைச் 
சுமந்து முதுகெலும்பை 
வளைத்து உழைக்கின்ற‌
முத்தான தோழர் 
பலர் இன்னும்
முழுதாகக் காணவில்லை 
முன்னேற்றம்

வித்தாக கொள்கைகள் 
பலவற்றை விதைத்திங்கே முளைத்திருக்கும் விதமான 
அரசியல் வேஷங்கள்
விளங்காமல் தவிக்கின்றார்  
பாவம் விடிவில்லா மனிதர் நடைபாதையில்

பசித்திருக்கும் உயிர்கள் 
ஒருவேளை புசித்திருக்க 
வழி தெரியா பொழுதில்
வளர்ந்திருக்கும் பொருளாதாரம் 
எங்கே? வசதியான 
வீட்டில் பதுங்கியதோ ?

நாளைய சமுதாயம் 
சம உரிமையோடு
நடைபோட வேண்டும் 
என்றால் நாடவேண்டியது 
நல்ல பல உள்ளங்கள்
நலம் நிறைந்த மக்கள் 
நலன் திட்டங்கள்

போன காலம் 
போகட்டும் விட்டிடுவோம்
புதிய யுகம் படைக்க  
மக்கள் தளபதிகள்
புகவேண்டும் அரசியல் களத்தில்
புரிய வேண்டும் 
புதுமைகள் பல‌
புரட்சி மிக்க கொள்கைகள் 
கொண்டே புரிந்திட வேண்டும் 
எம் இளம் நெஞ்சங்கள்

சீரிய அறிவுடனே 
தெளிந்த சிந்தை 
கொண்டு சிறப்பான 
அமைதி முறையில் நீங்கள்
சீரான சமுதாயம் 
வளர்த்திட முடியும்
சிந்தியுங்கள் வளரும் 
இளம் உள்ளங்களே

நாமெல்லாம் ஒரே குலம் 
நமக்கில்லை பிரிவு
வன்முறைகள் வேண்டாமே ! 
இகத்தில் வளர்த்திடுவோம் 
ஒரே அன்பு மதம்
வளர்ந்து வரும் 
சந்ததியே விழித்திடுவாய் !

நமக்கும் மேலே ஒரு 
சக்தி உண்டென்போம்
நம் அனைவருக்கும் அது பொதுவென்போம்
மற்றவரின் நம்பிக்கைகளை புண்படுத்தாமல்
மகிழ்வாக பூமியிலே 
வாழ்ந்திடுவோம்

வாருங்கள் இள நெஞ்சங்களே !
வயோதிபத்தின் வாசலில் நான்
வளமிக்க எதிர்காலம் 
உங்கள் கைகளில்
வளர்த்திடுவீர் தாய்மொழியை ! 
தாய் நாட்டை !

சக்தி சக்திதாசன்

Wednesday, September 20, 2023

மாமனிதன் கர்ணன்

அகிலத்தின்
அழிக்க முடியா
காவியமாய்
ஞாலத்தில்
ஞாயிறு போல் ஒளிரும்
ஆதவனாய்
தவழ்ந்திடும் இதிகாசம்
மாபெரும் மகாபாரதம்

அக்காவியம்
கற்பிக்கும்
பாடங்கள் ஆயிரம்
அதிலே
அனுபவிக்கும்
அனுமானங்கள் ஆயிரம்

பாரதம் எமக்காய்
புகட்டிடும்
பல வாழ்வியல் கருத்துக்கள்
புரிந்திட்டால்
இனித்திடும் வாழ்க்கையே !

பார்த்திட்ட
பாத்திரங்கள் யாவிலும்
துலங்கிடும்
ஒன்றாய்
உணர்வினில்
உறைந்திடும் உருவகமாய்
உயர்ந்திட்டவன்
கர்ணன் எனும் மாமனிதன்

பிறந்திட்ட
வழியும் அறியாமல்
சிறந்திட்ட
திறமையும் ஒளிராமல்
மறைந்திட்ட
குடத்தினுள் விளக்காய்
விளங்கிட்ட
தேரோட்டி மகனாய்

வில்லுக்கோர்
விஜயனாய் சிறந்திட்ட
அர்ஜுனன் போலவே
வில்லேற்றும்
திறன் படைத்தவன்
விலக்கப்பட்டு
தவித்திட்டான் குலம் எனும்
மாயை திரை மறைத்ததினால்

தோள் தட்டி
அணைத்திட்ட துரியோதனன்
சுயநலம் கொண்டே
அணைத்திட்ட போதிலும்
செஞ்சோற்றுக் கடன் அடைக்க
நெஞ்சில் தர்மத்தின்
வழி அடைத்தான் கர்ணன்
வலியுடனே !

காலமெலாம்
சூது புத்திரன் என்றே
பழிக்கப்பட்ட பெரும்
வலியுடன் வாழ்ந்தவன்
குந்தியின் புதல்வன்
தருமனின்
தமையன் என்றறிந்தும்
தன் கடன் தீர்க்க
தம்பியர் மீது
அம்பெய்தும்
செயல் தூக்கி நின்றிட்ட
போது அவன் மாமனிதனே !

கணங்களுடன்
காலம் பரிசாகத் தந்த
ரணங்களுடன்
வாழ்ந்து மடிந்த தேரோட்டி மகன்
கர்ணனின் கண்ணீர்
கற்பிப்பது ஓர் நல்ல பாடமே !

மகாபாரதம் என்பது
கட்டுக் கதை என்போரும்
சரித்திர நிகழ்வு என்போரும்
தர்க்கத்தில் இன்றுவரை
எது எப்படி ஆயினும்
தோலை நீக்கி அழகாய்ச்
சுளையைப் பார்த்தால்
கர்ணனின் கண்ணீர்
காட்டுவது நல்வழியே !

சக்தி சக்திதாசன்

Friday, September 01, 2023

கேட்டதைக் கொடுப்பவனே !

நான் கேட்டா
எனைப் பெற்றார்
என் பெற்றோர் ?

எனைக் கேட்டா
என் மைந்தனானான்
என் மகன் ?

யார் கேட்டு இங்கு
யாரைப் பெற்றார் ?

என்றொரு கேள்வி
எழுந்ததோர் கேள்வி
அன்றொரு காலம்

ஆன்மாவின் திட்டம்
அதற்கொரு தேவையென்று
விடையீந்த ஆன்மீகம்

காற்றோடு விழும் விதை
மரமாகும் நிலம் போல
எங்கோ ? என்றோ ? எப்போ ?

காற்றோடு
ஒரு செய்தி
காதோடு
கேட்டதுண்டு

நீற்றாக
கரையுமட்டும்
மகிழ்வோடு
வாழ்கவென்றே !

ஓர்நாள் மட்டும்
வாழ்ந்து வீழும்
மலர்கள் சொல்வதை
மனதோடு
கொண்டிடுவோம்

இப்போது ஒரு பொழுது
தப்பாமல் கண் முன்னே !
எப்போதும் ஏன் 
தெரிவதில்லை ?

முப்பொழுதும் மனதில்
முடிந்தை எண்ணிக் 
கவலை வரப்போவதை 
எண்ணி வீண் அச்சமும்

கேட்டதைக் கொடுக்கிறது
சூழ்ந்திடும் பிரபஞ்சம்
வேண்டுபவை எம்மறை ?
நேர்மறையா ? எதிர்மறையா ?

உள்ளத்தில் ஓர்வழி
என்றுமே நேர்வழி
மகிழ்வின் தனிவழி
மனதுள் பெருவெளி

தனக்குள் பயணத்தை
தானாய் தொடங்கிட்டால்
கண்டிடும் பொழுதொன்றே
நிலையெனப் புரிந்திடும்

சக்தி சக்திதாசன்