Sunday, December 24, 2023

கல்லறையில் மட்டும்

ஏறத்தாழ 49 வருடங்களுக்கு முன்னால் பதின்ம வயதுகளில் இருந்த‌ என் நண்பன் ஒருவன் தனக்குக் காதல் கடிதம் எழுதிய ஒரு பதின்ம வயதுப் பெண்ணுக்கு எழுதிய பதில் கடிதத்தின் தழுவலில் என் மன உணர்ச்சிகளைக் கொட்டிய போது உதிர்ந்ததிந்தக் கவிதை.

சம்பவம் உண்மை, வரிகள் மட்டும் கருத்டோடு முகிழ்த்த கற்பனை

கல்லறையில் வாழும் ......

========================

உன்
விழிகளின் அசைவிலே
என்
நினைவுகள் உன் நெஞ்சினில்
வாழ்வதை
நீ
சொல்லாமலே , நான்
புரிந்து கொண்டேன்

ஏக்கத்தின் ஆழம் தந்த‌
தாக்கத்தினால்
உன் விழிகள்
தூக்கத்தை மறந்ததை நான், உன்
பார்வைகளின் நீளம் தந்த‌
தாக்கத்தினால்
உணர்ந்து கொண்டேன்

கருமை பூத்த வட்ட‌ விழிகளின்
வாட்டத்தை
அவைகளின் இமைகள் பூக்க மறந்ததினால்
அஞ்சுகமே ! நான்
அறிந்து கொண்டேன்

என்னிதயத்திம் மையத்தில் ஓர்
துளையிட்டு அதனுள்
உன் நினைவுகளை புதைத்துக் கொண்டேன்
பூத்திடும் எண்ணங்கள் யாவிலும் உன்
பூமுகம் தோன்றிட வேண்டும் என்பதனால்

சேர்ந்திட ஏங்கிடும் போதிலும்
சேந்திழையாளே  கூடிட‌ முடியவில்லை
காரணம் கேட்காதே ஏனெனில் நான்
காருண்யம் நிறைந்தவன்
கனிகை உந்தன் இதயத்தைன் தேன்கூட்டினைக்
கலைத்திடும் தைரியம் எனக்கில்லை

வாய்க்கொரு வகை வகை ருசியாய்
பசியாற்றிடும் கூட்டத்தின் மத்தியில்
பிறந்தவன் இல்லையடி நான்
மற்றவர் புசித்திட விழிகளில்
மாற்றிட  முடியாத வகை கண்ணீர்
ஊற்றிடும் ஏழையின் தோட்டத்தில்
சேற்றில் முளைத்த் தாமரை நான்
செந்தாமரை உன்னை அடைந்திட முடியாத‌
சோற்றுக்கு அல்லாடும் வறியவனேதானடி

கட்டாயத்தாலியின் உறவால்
கலந்திட்ட ஊடல்களின் கலப்பில்
உதிர்ந்து விழுந்தவொரு துரதிர்ஷ்டக் கட்டை நான்
உறவை முறித்துக் கொண்டு
உல்லாச வாழ்க்கையை நோக்கி பறந்த‌
உதவாத தந்தையின் பெயரை என் பெயரின் முன்னால்
போடடுவாழும் ஒரு முட்டாள்
கோபுரத்திலே வாழும் குமாரியின் மனதில்
ஊஞ்சல் கட்டி ஆட நினைக்கலமா?

எனக்காகத் தன்னைத் தேய்த்து
என் நினைவொன்றே தன் உயிராய்க் கொண்டு
எண்ணங்களை மட்டும் தாங்கிக் கொண்டு
என்றுமே வற்றாத கண்ணீருடன் வாழும் என்
உத்தமத்தாயின் கண்ணிரைத் துடைக்கும்
உயர்ந்த லட்சியத்தில் எஈயும் என் கூட‌
நீயும் சேர்ந்தே
உதைப்பட்டுப் போக வேண்டாம்

அதனாலே உன் எண்ணங்களை
நம் கண்கள் கலந்ததினால்
முகிழ்த்த காதல் செடியின்
மலர்களைப் பறித்து
கல்லறைக்குள் புதைத்து விட்டு
உனக்காக ஒரு மாடிவீட்டு
மாப்பிள்லையைத் தேடிக் கொள்

ஏனேன்றால் ....... கண்ணே
இவ்வுலகில் ஆசைகள் மட்டும் போதாது
ஆசைகளை வாழவைக்க
பேராசை மிக்க மனிதர்களின்
பணக்கற்றைகளும் தேவை

ஏழைகளின் காதல் .........
என்றுமே ..........
கல்லறையில்  மட்டுமே வாழும் ......

சக்தி சக்திதாசன்

No comments: