புதியதோர் ராகத்திலே
புலர்ந்ததோர் காலையிலே
புனைந்ததோர் பாடலிலே
புரிந்ததோர் இன்பநிலை
விடிந்ததிந்தப் பொழுதினில்
வியந்ததொரு உணர்வெடுத்து
வரைகின்றேன் கவிதையை
வரிகளிங்கு விழுகுதம்மா
இல்லையென்ற நினைவெதற்கு
இருக்கவெண்டும் இப்போது
இருக்கின்றவை இருக்குதென்று
இனிமைக்குள் மூழ்கிடுவோம்
உருளுகின்ற பூமிப்பந்து
உருட்டுகின்ற வாழ்விதனுள்
உள்ளதெல்லாம் புதுமையன்றோ
உதிர்க்கின்ற உண்மையிது
நிசப்தத்தின் நெஞ்சினிலே
நிழலாடும் நினைவுகளே
நிமிடங்கள் நெய்திடும் போது
நிலைத்ததோர் சுகமிதே
காற்றோடும் கனவுகளும்
காணாத ஓர் பாதையிலும்
காதலெனும் ஒளியொன்றால்
காலங்கள் கலந்திடுமே
துளித்துளியாய் விழும் நினைவில்
தூய்மையான மொழியொன்றில்
தோன்றுகின்ற உணர்வெல்லாம்
தூபமாய் மணந்திடுமே
மறைந்ததெல்லாம் மறையாதே
மனதினிலே இசையாதே
மலர்ந்திடும் ஓர் உணர்வினிலே
மாயங்கள் கரைந்திடுமே
பரந்திடும் வானமெல்லாம்
பாடுகின்ற ராகமெல்லாம்
பார்க்கின்ற கண்களெல்லாம்
பாசத்தின் மொழியன்றோ
அழிந்ததில்லை உயிரினிலே
அழகான ஓர் உணர்விலே
அர்த்தமென்னும் ஒளியினிலே
ஆழ்ந்திடுவோம் நாமெல்லாம்
