எண்ணமெனும் ஓடையில்
ஓடுகின்ற வெள்ளமாய்
ஓசையோடு பாய்கின்ற
ஓராயிரம் கருத்துகள்
வீசிவிட்ட விதைகளென
விளைந்திடும் கவிதைகள்
விதவிதமாய் வடித்திடினும்
விழிப்பதில்லை மானுடமே
துள்ளியெழும் உணர்வுகள்
துருத்துகின்ற உண்மைகள்
வருத்துகின்ற கணங்களை
வரிகளுக்குள் புதைத்திடும்
மருத்துவத்தின் விந்தைகள்
மந்திரமாய் திகைப்பூட்டும்
மனசுக்குள் இருளோடு
மரணிக்கும் விடியல்கள்
மனிதராகப் பிறந்தவர்கள்
மனிதராய் வாழ்வதுண்டோ ?
மனதத்தின் மகிமைதனை
மனிதனால் கொள்வதுண்டோ ?
வேடிக்கையான வாழ்க்கைதான்
வாடிக்கையாய் காண்கிறோம்
ஓடிப்போகும் வாழ்க்கைக்குள்
கோடிகளால் இலாபமென்ன ?
சொல்லாத சொற்களினுள்
சொருகிக் கொள்ளும்
அர்த்தங்களை தேடுமொரு
அர்த்தமில்லாத தேடல்களாய்
ஓடிவிடும் வாழ்க்கையோரு
ஓயாத பெருந்தொடராய்
காயாத கண்ணீரோடு
கழிக்கின்றார் வாழ்க்கையினை
நிற்காமல் சுழன்றிடுமிந்த
நிட்காமியமோ பூமிப்பந்து
சுழலுவதே அறியாமல்
சுழல்கின்றோம் நித்தியமும்
இன்றெமது என்றென்னும்
இழக்கமுடியா உடமைகள்
நாளையெனும் பொழுதினில்
நகர்வதிங்கு யார்கையில் ?
வட்டமான குழியினுள்ளே
சதுரங்களை புதைத்திட
சதிராடும் சூட்சுமங்கள்
சரித்திரமாய் புத்தகத்தில்
நானென்றும் நீயென்றும்
நாமென்றும் வேற்றுமைகள்
நிலைக்காத உடலதனை
நிலைக்குமெனும் நப்பாசை
இருப்பதெல்லாம் தமக்கென்று
இருக்கின்ற கூட்டமொன்று
இல்லாதோர் இருப்பதொன்றே
இயற்கையென்னும் கூட்டமொன்று
முடிவில்லா போராட்டங்கள்
முதலில்லா வியாபாரங்கள்
முற்றுப்பெறா கதைகளாக
கற்றுக்கொண்ட பாடங்கள்
ஓயாத ஊற்றெனவே
ஓங்காரிக்கும் உள்ளமிது
ஓலமிடும் வேளையாக
ஓதுகின்ற கவிதைகள்
செவிடர்களின் காதுகளினுள்
செல்லாத சங்கொலியாய்
சலிக்காமல் ஊதுகிறேன்
சத்தமில்லா யுத்தங்களே !
சக்தி சக்திதாசன்
