Monday, June 01, 2026

காதலென்பது .....

காதலென்பது .....
உணர முடியாத
உணர்ச்சிகளின் சேர்க்கை
ஒதுங்க முடியாத
இதயத்தின் ஓரங்களில்
ஒட்டிக் கொள்வதே !

​காதலென்பது......
ஒலியில்லா
ஓசைகளினால் மெதுவாய்
விழிகளின் வழியால்
பேசிடும் ஓர்
முதுமொழியாகும்

​காதலென்பது......
செல்ல முடியா
தூரங்களுக்கு
சொல்ல முடியா வகையினால்
கண்களை மூடிக் கொண்டே
பயணிக்கும் பயணமாகும் !

​காதலென்பது .....
கணநேர விழி மாற்றத்தினால்
இதயங்களை இடம் மாற்றிக்
கொள்ளும் ஒரு கூடு விட்டு
கூடு தாவும் வித்தையன்றோ !

​காதலென்பது.....
உணர்ச்சிகளின் பிரவாகம்
கரைதாண்டி ஓடும்
ஆசைவெள்ளமதின்
அழகான ஊர்வலம் !

​காதலென்பது .....
கண்களுக்குள் உள்ளவரை
கற்கண்டாய் இனித்திருக்கும்
காணாத பொழுதெல்லாம்
கசந்திடும் பாகற்காயைப் போல்

​காதலென்பதை.... 
அனுபவித்து சுவைத்திட்டால்
அடுத்தொரு பிறவிவரை
தொடர்ந்திட ஆசை பிறந்திடும்

சக்தி சக்திதாசன்