Wednesday, June 10, 2026

சிந்திக்க மறந்தாயா ? தோழா !

சிந்திக்க மறந்தாயா ? தோழா !
சிதைவுற்ற நானிலத்தின்
நலிவுற்ற மக்கள் நிலையை
உள்ளத்தின் உணர்வுகள் உறங்கிடலாமோ ?
உயிர்களின் வலிகளை மறந்திடலாமோ ?
சிந்திக்க மறந்தாயா ? தோழா !

நீரூற்றிப் பயிர் செய்யும்
தோழனவன் பாவம்
கண் நீரூற்றி வாழ்கின்றான்
ஏர் கொண்டு உழுதிடும்
சமுதாயச் சேவகன் வாழ்வோடு
போர் செய்து ஜீவிக்கின்றான்
சிந்திக்க மறந்தாயா தோழா !

நாள்தோறும் தொழிற்சாலையில் 
இயந்திரங்களோடு இயந்திரமாக
இயங்கிடும் உழைப்பாளித் தோழன்
உருக்குலைந்து வாழும் நிலை
மறந்தாயா என்னருமைத் தோழா !

எப்போது விழிப்பாய் நண்பனே !
இனியோர் பாரதியோ அன்றிப்
பாரதிதாசனோ தோன்றி உன்
உணர்வுகளைத் தட்டி எழுப்பினால்
உன் விழிகளைத் திறப்பாயா ?
இனியேனும் உண்மையை உணர்வாயா ?

காலங்கள் மாறிவிட்டது நாமும்
காலத்தோடு மாறவேண்டும் என்பார்
யதார்த்தம் அதுதான் என்றாலும்
காலமாற்றத்தின் பெயரால்
சமுதாயச் சீர்கேட்டை, சமனற்ற
விளையாட்டுத் திடலை மறைக்க
முயன்றிடும் அதிகார வர்க்கத்தின்
முறையற்ற அரசியலை நீயும்
முழித்துப் பார்க்க வேண்டாமா ?

உள்ளவர் இழக்கவேண்டும்
என்பதல்ல வாதம், இல்லாதவர்
உயர என்னவழி என்று சிந்திப்பதே
நானிலம் செழிக்க உழைக்கும்
நல்லவர் வாழ்வினை உயர்த்தவழி
சுயம் என்று ஒன்றை நீ உணர்ந்தால்
சுதந்திரம் என்பதன் பொருள் புரியும்

வயிற்றில் பசியோடு பள்ளிக்குச் செல்லும்
வாலிபன் கனவுகள் வாடுகின்றன
புத்தகச் சுமையினும் வறுமைச் சுமை கொண்டு
புல்லரித்து நிற்கும் அந்த உள்ளம்
அறியாமையை யாரேனும் போக்கிடாவிடில்
அடுத்த தலைமுறையும் அழிந்திடாதோ
சிந்திக்க மறந்தாயா தோழா !

ஊதியமின்றி உழைத்த கரங்களால்
உலகை வளர்த்தவர் ஓரம் தள்ளப்படுகின்றனர்
சந்தையில் பொருளுக்கு விலை நிர்ணயிப்பவன்
சாப்பிடும் உணவுக்கு விலை தெரியாதவன்
உழைப்பின் மதிப்பை யாரேனும் கேட்கையில்
உடைந்து நிற்கின்றது நீதியின் தராசு
விழிப்படைய வேண்டாமா தோழா !

ஆற்றோர வாழ்விலும் தாகம் தணியாமல்
அலையும் விவசாயி நிலை அறிவாயா
நிலமகள் கண்ணீரை நிலமே குடிக்கையில்
நெஞ்சம் கலங்காத நீ மண்ணா கல்லா
பயிரை விற்று கடனை அடைப்பவன்
பரிதாபமாய் பறந்திடும் உயிர்களை
மறந்துவிட்டாயா என்றும் தோழா !

கோயில் கோபுரங்கள் உயர்கின்றன இன்று
கோடிகள் செலவழிக்கும் கொண்டாட்டங்கள் வளர்கின்றன
ஆனால் அடிமட்ட மனிதன் வீட்டில்
அகல் விளக்கேற்ற அரிசியில்லை என்று
வாழ்வின் முரண்பாடை வரிந்துகட்டி
வழிமாற்றிட உனக்கு வலிமையுண்டு தோழா
எழுந்து நில் இனியாவது தோழா

தூங்கிக் கொண்டே நடக்காதே தோழா !
கனவிலேயே வாழ்வு கழிந்து விடும்
நாளைய உலகின் புத்தொளிக்கு சக்தி
தோழா உன் கரங்களில் உண்டு
சிந்தனையைத் தட்டிவிடு உடனே
செயற்திறனை முடுக்கிவிடு
தோழா உன்னால் முடியும்.

சக்தி சக்திதாசன்