Monday, June 08, 2026
சில நிமிடங்கள் !. . .
Sunday, June 07, 2026
காலங்கள் ஓடுது
Friday, June 05, 2026
புதுவழிகளைச் சமைத்திட உழைத்திடுவீர் !
புதுவழிகளைச் சமைத்திட உழைத்திடுவீர் !
மேற்கே விழுந்த ஆதவன்
அதோ ......
கிழக்கே மீண்டும் வலுவாய்
எழுந்திட்டான் பாராய் !
இருளைத் துரத்தி
இகத்தினில் ஒளியைப் பரப்பி
பொழுது விடிந்து விட்டதே ...
தோழா .. நீயும்
தோளை நிமிர்த்து
நாளைய உலகின் வழிகளைத்
தேடிப் பாவம் எங்கள்
தேகம் இழைத்த சோதரர்கள்
பாதைகள் தோறும்
ஓடிடும் காட்சியைக் கண்டாயா?
காலம் எமக்காய் ஒருபோதும்
காத்துக் கிடப்பதில்லை தோழா !
முயற்சி எனும் சக்கரத்தை
முழுப்பலத்துடன் நாமேதான்
உருட்டிட வேண்டும் மறக்காதே !
தேவைகள் என்றும் தீர்வதில்லை
ஆசைகள் என்றும் மடிவதில்லை
ஓசைகள் இதயத்தில் எப்போதும்
ஒய்வதில்லை ... இதனைப்
புரிந்து கொண்டால் ..... தோழா,
நியாயம் எனும் வரம்புக்குள்
தேவைகளைத் தேக்கி
அளவு எனும் பெட்டிக்குள்
ஆசைகளைப் பூட்டி
ஓசைகள் அனைத்தையும் நம்
சங்கீதங்களாய் மாற்றும்
சாத்திரத்தை உன்னால்
சாதித்திட முடியும் நம்பு !
உனக்கென மட்டும் இந்த
உலகம் இயங்கிடவில்லை
நீ நடக்கும் போது பாதையில்
வலுவாக அடிகளைப் பதித்து
வளரும் தலைமுறைக்கோர்
வளமான பாதையை வகுத்து விடு
இருப்பதையெல்லாம் இழந்து
இருப்புக்கு வழியின்றித் தவிக்கும்
இல்லாத தோழனவன்
தவிக்கின்றான்
உன் .......
உழைப்பினால் மலர்ந்த மலர்களின்
சுகந்தத்தை சுவாசிக்க வழி
செய்திடுவாய்
தோழனே .......
உன்னால் முடியும்
தோற்காத ஞானத்தில்
தமிழன்னை உன்னைத்
தோய்த்து எடுத்துள்ளாள் அறிவேன்
நான் ....
பொழுது விடிந்து விட்டது
பொய்கை புதுப்பிரவாகத்துடன்
பொங்கிப் பாய்கிறது
நாளைய உலகத்தின் உண்மை
நாயகர் நீங்கள்
தோழர் ! தோழியரே !
தம்பி ! தங்கையரே !
எழுந்து நில்லுங்கள் இந்த
எழில்மிகு உலகம் உங்களுக்கு
அறைகூவல் விடுகின்றது
இருப்பவர் கொஞ்சம்
இரக்கத்தை ஈந்திட்டு
இல்லாதவர் தம்மை
இருப்பவர் ஆக்கிட
இகத்தினில் புதுவழிகளைச்
சமைத்திட உழைத்திடுவீர்!
விழுந்தோம் என்று சோராதே
விதைத்தோம் என்று துணிந்து நில்
வியர்வை சிந்தும் கரங்களினால்
விண்ணைத் தொடுவது கடினமில்லை!
விடியலின் கதவு திறந்திருக்க
முடங்கிக் கிடப்பது ஏனோ தோழா?
சமத்துவப் பாதை சமைத்திடவே
சங்கமம் ஆவோம் ஒருமித்தே,
சாதி மத பேதச் சுவர்களையெல்லாம்
சரித்திரம் காணத் தகர்த்திடுவோம்!
மனித நேயத் தாரகையே
மண்ணில் ஒளிர வழிகாட்டு!
புதியதோர் உலகம் மலரட்டும்
புன்னகை எங்கும் நிறையட்டும்,
துயரம் துடைக்கும் நற்சிந்தனை
தோழா உன்னில் பிறக்கட்டும்!
புயலாய் எழுந்து நீ நடந்தால்
பூமி உனக்கு வழி கொடுக்கும்!
சக்தி சக்திதாசன்
