Tuesday, January 02, 2024

எண்ணங்கள் ஆயிரம்

வருடம் முடியும் நாள்.ஆம் 2023 டிசம்பர் மாதம் 31ம் நாள்.

காலண்டரில் திகதியைக் கிழித்துப் போட்டேன்.

புதியதோர் கட்டையை காலண்டர் அட்டையில் மாட்டினேன்.

அக்கலண்டர் அட்டையை எனது வாழ்விற்கு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இலகுவாக அந்தக் காலண்டர் அட்டை டிசம்பர் 31ஜ இழந்து விட்டு புதிய வருடத்திற்கான கட்டையைத் தாங்கிக் கொண்டு கம்பீரமாகத் தொங்கியது.

ஆனால் நான் ?

அக்கலண்டர் தாளை இலகுவாகக் கிழித்து கடந்த வருடத்தைக் கலைத்து விட்டதைப் போல அந்த வருடம் கொடுத்த நிகழ்வுகளின் மகிழ்வுகளையும், இடர்களையும் இலகுவாகக் களைந்து விட முடிகிறதா ?

இல்லையே ! 

அதுதான் மனித வாழ்க்கை. 

எமது கைகளில் இல்லாத எம்மை மீறிய காரணிகளினால் எமக்கு நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தாக்கங்கள் உள்ளத்தில் பல வடுக்களை பல மகிழ்வான நினைவுகளை அழியாமல் தக்க வைத்து விடுகிறது.

அதற்காக அவற்றின் நினைவுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு மன அழுதத்தினுள் எம்மைப் பிணைத்துக் கொள்வது சரியான தீர்வாகுமா ?

மனிதன் போடும் கணக்கொன்று ஆனால் அவனுக்கும் மேலே அனைவர்க்கும் பொதுவான சக்தி ஒன்று அவன் போடும் கணக்குகளை மாற்றி வைத்து விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

20 வயதிலே நான் போக நினைத்ததாக நான் எண்ணி போட்ட பாதை வேறு இன்று 
57 வயதிலே நான் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை வேறு.

ஆனால் அந்தப் பாதை மாற்றம் கண்டிராவிடில் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் இம்மனமும் இன்றி இருந்திருக்க வாய்ப்பில்லை.

என் உயிரினும் மேலான என் அன்பு உள்ளங்களின் நேச உணர்வைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

ஆயிரமாயிரம் அன்புத் தம்பி தங்கைகளைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

நண்பர்களைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

அனைத்திற்கும் மேலாக என் இனிய அன்பான குடும்ப உறவுகளை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

எழுத்து என்னும் இந்த அரிய பணி, 
அன்பு கொண்டோர்களுடன் காகிதத்தில் பேசும் உயரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

மனிதராகப் பிறந்த னைவருக்கும் இருக்கும் பலவீனம் இடர்களை நினைத்து துன்பத்தில் ஆழ்வதே அன்றி அடைந்த நல்ல முன்னேற்றங்களைக் கண்டு மகிழ்வது அல்ல.

இழந்தைவைகளைக் கண்டு ஏங்குவதே அன்றி அவ்விழப்புக்கள் கொடுத்த அனுபங்களின் செழிப்பை எண்ணி மகிழ்வது அல்ல.

நான் எனது தமிழ்ப்பூங்கா எனும் இணைய இதழை ஆரம்பித்து விளையாட்டாக 

20 வருடங்கள் ஓடி விட்டன.

இந்த 20 வருட கால எழுத்துப் பயணத்தின் அனுபவத் திரட்டல்களாக ஒரு கதம்ப நூல் எனது பத்தாவது நூலாக மணிமேகலை பிரசுரத்தினால் வெளியிடப்படும் நிகழ்வு உள்ளத்தை நிறைக்கிறது.

இந்தப் இருபது வருஇட காலத்தில் ஒருவருடமாவது ஒரு இதழும் வெளிவராத ஒரு நிலை  2013 ஆண்டில் மாற்றம் கண்டது. 

ஆம் கடந்த வருடம் எதேதோ காரணங்களினால் பெப்பிரவரி மாதம் எழுத ஆரம்பித்த இதழ் இன்னும் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
.
எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் அனைவர்க்கும் பொதுவான அந்த இறை ஒரு காரணத்தை வைத்திருப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.

அதே பாணியில் தமிழ்ப்பூங்கா 2013ல்  ஒரு மாற்றத்தைக் கண்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது ஆனால் அது எனக்கு இப்போது புலப்படவில்லை என்பதுவே உண்மை.

ஆனால் அனைத்தையும் அசை போட்டுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஆங்கிலத்தில் " Back to basics “ 
என்று ஒரு பதம் இருக்கிறது. அதாவது ஆரம்ப இழையைத் திரும்பப் பற்றிக் கொள்வது.

அவ்வகையில் நானும் தமிழ்ப்பூங்காவை ஆரம்ப எளிய வடிவமைப்புக்குக் கொண்டு சென்று மீண்டும் இருமாதங்களுக்கொருமுறை ஒரு இதழ் எனும் வகையில் வெளிக்கொணர்வது என்று என்னுள் ஒரு தீர்வு எடுத்தேன்

இனி அது அந்த இறை எனும் பிரபஞ்சத்தின் கையில்

இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் !

என் அன்பு உள்ளங்களே !

தோல்வி என்று எதுவும் இல்லை.
நாம் ஒருவருமே தோற்பதற்காகப் பிறந்தவர்களும் அல்ல.

நாடகமேடையில் காட்சிகள் மாறுவது போல,பாத்திரங்கள் வேறு வடிவங்கள் எடுப்பது சகஜம்.

எமது நிலைப்பாடுகள் மாறலாம்,ஆனால் நாம் மாறுவதில்லை.

மாற்றங்களே வாழ்க்கை.

அதை உள்வாங்க்கிக் கொண்டு அதை எமது முன்னேர்றங்களுக்கு ஏதுவாக மாற்றி மைத்துக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்வதே அறிவுபூர்வமான செயல்.

நிதமும் ஆயிரம் மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு அகிலத்தில் நாம் அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு ஜீரணிப்போடு பயணத்தைத் தொடர்வதே எமது பணி.

தோல்விகள் என்று நாம் கருதும் ஒவ்வொன்றும் வெற்றியின் ஆரம்பப்படிகளே !

எம்மை நாமே அசை போட்டுக் கொண்டு இந்த வருடப் பயணத்தை மிகவும் நம்பிக்கையோடு ஆரம்பிப்போம் .

நம்பிக்கையே எமக்கு ஆதாரம்.

அந்த ஆதரத்தின் அடிப்படியில் நான் மீண்டும் உங்களுடன் பேசுவேன்.

 மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்

No comments: