Wednesday, January 24, 2024

தித்திக்கிறதே ! தோழா !

தித்திக்கிறதே ! தோழா !
இந்தக் காலைப்பொழுது
தித்திக்கிறதே !

எண்ணத்தின் சாரத்திலே
எண்ணிலா வண்ணங்கள் கொண்டே
கற்பனைத் தூரிகையால்
இயற்கை அன்னையின்
வனப்புத் தனை
கவிதை எனும் ஓவியமாய்
கவிஞனவன் தீட்டுகின்ற
பொன்னான காலையிது

இயற்கை அன்னையின்
மேனியை மூடிய
காரிருள் எனும் சேலையைத்
தன் புத்தொளிக் கதிர்களால்
வெண்மையாக்கி ஓர் தேரில்
கிழக்கிலிருந்து தொடங்கும்
ஆதவன் பவனியைப்
பறைசாற்றுமிந்தக் காலையிது

உலகத்தை உருட்டும் வல்லமை
உழைப்பவர் கரங்களில் மட்டுமே
உதிரத்தை வியர்வையாக்கி எமக்கு
உணவளிக்க உழைத்திட
விழித்திடும் எங்கள் விவசாயத்
தோழர்களை துயில் நீங்கி
துள்ளியெழுந்திட இசைபாடும்
மெல்லிய காலைப் பொழுதிது

இரவின் கருமையை
குளிர்ந்திட வைத்திட
உறைந்திடும் பஞ்சினைப் போன்ற
காலைப் பனியை மெதுயாய்
விரட்டிட முயலும் ஆதவன் கதிர்கள்
தெளித்திடும் ஒளியினைக் கண்டு
கழித்திட வைத்திடும் காலைப்பொழுது

சிந்தனைச் சக்கரத்தை
சுழற்றியொரு விசையோடு
விந்தைமிகு எண்ணச்சுழல்களில்
வட்டமிடும் கருத்துக் குவியல்களை
முந்தையொரு பொழுதுதினில்
சிந்த மறந்துவிட்ட பித்தனிவன்
பிந்தையிந்த வாழ்வதன் வாசலில்
பிதற்றிடும் வரிகள் தாமிவையோ

கண்களைத் திறந்து
கண்டிட்ட வேளை என்னெஞ்சினை
அள்ளிக் கொண்டதிந்த
காலைப் பொழுதினைக் கொண்டாடிட
சிதறிய தமிழ்ச்சொற்கள் எனும்
மலர் கொண்டு அர்ச்சிக்கிறேன்
தமிழன்னை பாதங்களை யானும்
தலைசாய்த்து வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

No comments: