Friday, August 22, 2025

அதிசய உலகம் . . . ஏக்கத்தின் அதிர்ச்சி . ..

சின்னச்சிற்பி
சிதறித் தெறிக்கும்
மழைத்துளி
கண்ணப் பறிக்கும்
முத்தாக .. . .

அதிசயித்தேன் . . . .

வர்ணங்கள் பல
வண்ணச் சிறகுகள்
மெல்லப் பறக்கும்
வண்ணத்திப் பூச்சி . . .

அதிசயித்தேன்

சேற்றினில்
செந்தமாரையாய் முகிழ்த்திடும்
கதிரவனின் காதலியாய்
மலரும் 
மலர் கண்டேன்

அதிசயித்தேன்

அம்மா என்றே
அன்பொழுக
அழைத்து ஓடிடும்
பசுக் கன்றினைப்
பார்த்து வியப்பில் . . .

அதிசயித்தேன் . . 

வானமகள்
அந்திமாலையிலே
பொன்னிற ஆடை போர்த்தும்
அழகினைக் கண்டேன்

அதிசயித்தேன். . . .

மலையோடு
உறவாடியந்த முகில்
கொண்ட காதலினால்
பிறந்த ஊற்று
நதியாகி ஓடக் கண்டேன்

அதிசயித்தேன். . ..

பலகோடிச் செலவில்
பகட்டான மாளிகை
பல களிப்பாட்டங்கள்
மிதமிஞ்சி ஊசிப்போய்
வீசும் உணவுக் குவியல் . . .

அதிசயித்தேன் . . .

ஓலைக் குடிசைகள்
ஓவென்று கதறும்
பச்சிளங் குழந்தைகள்
பசியோடு வாடும்
பலநூறு பேர்கள்

ஐய்யய்யோ . . . .

அதிர்ந்தே போனேன். . . .


சக்தி சக்திதாசன்

Friday, July 04, 2025

வீழ்வதில் வெறுப்பு இல்லை, நிற்கிறேன் நெஞ்சுடன்,  
வெற்றியின் வழி தெரியுமே, ஒளிக்குது ஆசையின் உந்துடன்.  
துன்பங்கள் கறுப்பு கொண்டதும், தைரியம் வெள்ளை நினைவுடன்,  
தொடர்கிறேன் பயணத்தை, உயிரின் சத்தமுடன்.

கனவுகள் ஒளி சிதற, நிஜங்கள் நிழலாய்க் நிற்றாலும்,  
கனிவுடன் காலம் போகும், நம்பிக்கை நிலவாக வாழ்கின்றாலும்.  
மனதின் வாசல் திறந்ததும், மாற்றங்கள் வார்த்தை பேச,  
மாற்றம் எங்கு என்றேன், உன்னதம் உள்ளத்தே பேச.

சோர்வுகள் வந்தால் என்ன, சோதனையாய் சில நேரம்,  
சுற்றிலும் நிழல் இருந்தாலும், உள்ளே வெற்றி வீரம்.  
துயரம் துயர் என்றில்லை, துணிவின் ஓசை கேட்டால்,  
தூங்கி எழும் ஒவ்வொரு நாள், திரும்பிப் போய் வென்றால் நான்

பயப்பாடு தோற்றமல்ல, வாழ்வின் ஒரு நிலையிலே,  
பயணம் தான் முக்கியம், நின்றுவிடல் தவறென்பேன்
பிணையாத மனதோடு, பிறப்பதையே நேசித்து,  
படிப்படியாகப் போனாலும், பதிலளிக்க தெரிந்து.
இளமை வணங்க வேண்டாம், எழுச்சி தாழ்ந்துவிடாது,  
இன்றைய பயிற்சி நாளை, உன்னையே உயர்த்தும் நேரம்.  
வீழ்வதெல்லாம் தவம், நின்றதெல்லாம் வழி,  
வெற்றி யாரும் தரமாட்டார்கள் – நீங்கள் ஈட்டி கொள்வதே எழு!

சக்தி சக்திதாசன்

Thursday, June 19, 2025

இயற்கையைக் காப்போம்

மரம்தான் நிழலாக வளர்ந்தது,
மனிதன் அதன் கீழ் தவழ்ந்தான்.
பசுமையும் பசிக்காத புனிதமாம்,
இயற்கையின் சமநிலை வலிமைதான்.

பறவைகள் பாட்டுடன் மலர்களில் நாட்டம்,
வானம் தரும் மேகத்தின் காட்டம்.
ஒவ்வொன்றும் ஒத்துழைக்கும் இசைபோல்,
அக்கூட்டமைப்பு காத்தல் கடமையாம்.

ஆறுகள் ஓடும் ஆதாரமாய்த்,
தந்தையின் அருள் போல் அணுகும்.
அதை கட்டி அடக்கினால் குமுறும்,
உயிர்களுக்கு பிணியாகும் சுமைதான்.

வனங்களை வெட்டும் வெறியர்களே,
வேர் அறுத்தால் உயிரும் உறங்கும்.
பறிப்பதைவிட பழுத்ததை காத்தல்,
பசுமை உலகின் உண்மை உயர்வு.

நம் காலடி ஒவ்வொன்றும் சுவடாகும்,
நாளையோர் பாதை வலிமையாகும்.
இயற்கை சமநிலை காக்கின்றோம் என்றால்,
வாழ்வும் வண்ணமும் தொடரும் என்றும்.

இயற்கையைக் காத்திடத் தோழா
இதயத்தில் எண்ணத்தைக் கொண்டு
இனியேனும் வாழ்ந்தோம் என்றால்
இனிவரும் சந்ததியெமை வாழ்த்திடும்

சக்தி சக்திதாசன்


`
வழுதி நாடன் வனம் தழைக்கும்,  
நிலம் வளர் சூழ்ச்சி மக்களாலே.  
அறம் நிலை செய்கையில்,  
குழி மண்ணும் பூமியும் மேன்மை கொள்கின்றன.  
இது தமிழர் உறுதி.

அத்தைமகன் அன்போடு வழி காட்ட,  
பரிசில் இல்லா உறவு பெரிது.  
உயிரின் தாய்மூலம் பேணும் செயல்கள்,  
 கூடு கொண்ட வாழ்வில் கண்ணியத்தையே.  
இதுவே நம் உறவு நெறி.

தூய்மை செல்வம், தூண் தாங்கும் ஊர்,  
சான்றோர் வாக்கு சீரிய பாணி.  
ஓங்கும் அறவியல், ஒழுக்கம் சிறந்த வாழ்வு,  
ஏமாறாத சிந்தை உருவாக்கும்.  
 மக்கட்கென வேண்டிய மார்க்கம் இது.

உழவன் தோட்டத்தில் நாற்றுக் கிழமை,  
ஈரமெய்தி நெற்கதிர் பாடும்.  
வையம் பெறும் செல்வம், வானம் காக்கும்,  
வெண்குடை நீழல் விரியும் நாடு.  
தொழில்நெறி தொன்மையின் சாட்சி.

பாலை வாடா நெஞ்சு படைத்து,  
ஒன்றி வாழும் ஊர்சிறப்பும்.  
எண்ணமொன்று மொழியொன்று எனப் பேணித்,  
கடவுள் தரும் வளம் பெருகும்.  
ஒன்றுபாடே மக்கடென்று கூறலாம்.

சக்தி சக்திதாசன்
`

Wednesday, June 18, 2025

என் அறுபதுகளின் மத்தியில்

என் அறுபதுகளின் அமைதியில்  
மெதுவாய் வந்து சாய்கிறது 
நினைவின் நிழல்  
மண்ணின் வாசனையும்,  
தமிழின் மெளனமும் கூட,  
என் மொழியாய், 
என் மூச்சாய் இருந்தன.  

பால்குடத்தின் ஓரங்களில்  
சிரிப்புகள் பூத்திருந்தன –  
நட்புகள் வெறும் 
பெயர்களல்ல,  
நரம்புகளாக நான் 
அனுபவித்த வாத்தியங்கள்!  

திருக்குறளின் சத்தம் 
கேட்கும் வரை  
நான் என் அம்மாவின் 
மொழியில் வளர்ந்தேன்.  
அந்த நதி எனது நெஞ்சில் 
ஓடிக் கொண்டே இருக்கிறது,  
வேர் அறுக்க முடியாத பாச நதி.  

இப்போது, 
வானத்தின் உச்சியில் நின்று  
கீழே நோக்கும்போது,  
அவளும் (தமிழும்), 
அவனும் (மண்ணும்),  
என்றும் என் உள்ளத்தில் 
வாழ்கின்றனர்.

நினைவுகளின் வேர்களாய்
புலம்பெயர்ந்த மண்ணில்
அனுபவக் கிளைகளாய் இன்று
ஞாபகக் கனிகள் பழுத்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
பறித்து இனிய தமிழ்க்
கவிதைகளாய்ச் சுவைத்துக்
கொண்டே நடக்கிறேன்

உள்ளத்தின் மத்தியில்
மெளனமாய் பல இன்பச்
சத்தங்கள் சிணுங்கிக் கொண்டே
உறங்க மறுக்கின்றன
தாலாட்டுப் பாடிக் கொண்டே
தாய்மொழியின் வர்ணம் கொண்டு
கவிதைச் சித்திரங்கள்
வடித்துக்கொண்டு வாழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Sunday, June 15, 2025

தொலைத்து விட்டேன்

தொலைத்து விட்டேன்
ஈரமான இதயப் பகுதியை
ஈனமான இவ்வுலகென்னும்
புதருக்குள் தொலைத்து விட்டேன்
சுயம் எனும் என்னை நான்
நலம் மட்டும் எண்ணியதால்
நானிலத்தின் நடுவினிலே
தொலைத்து விட்டேன்

கனமான உணர்வுகள்
கணிசமான நினைவுகள்
முடிவில்லாத் தொடர்கதையாய்
முடிக்கமுடியா ஒவியங்கள்
முடிச்சவிழ்க்கும் திறனற்ற
மூடர்களின் யாத்திரைகள்
முகமூடியை அகற்றி விட்டால்
முழு வடிவம் நிதர்சனம்

உருளுமிந்த உலகத்தினுள்
உருண்டோடும் காலத்தோடு
ஓடிக்கொண்டே வாழ்ந்திருக்கும்
ஒப்பற்ற மானிட வர்க்கமிதுவோ ?
எண்சாண் உடலைக் காக்க
எண்ணமுடியா கணத்தினிலே
எத்தனையோ உயிரழித்து போரிடுவார்
எதற்கிந்த பேராசைப் பேரழிவு ?

இணையற்ற அறிவுடையோர் என்றே
ஈடில்லாப் புகழை தமக்கிடுவார்
இரக்கமில்லா மனம் கொண்டு
அரக்கத்தனமான உணர்வுகளோடு
இயற்கையை அழித்து தாமிங்கு
இறைவனைத் தேடிடுவார் பாவமிவர்
எதைத்தேடி எங்கு செல்கின்றார்
எப்போதுமிவர் பொய்மையை நம்புவார்

காலமது நிச்சயம் மாறிடும்
கருத்தினில் தெளிவு பிறந்திடும்
நேற்றைய முடிவில்லாப் பயணங்கள்
நாளையந்த ஊர் போய்ச் சேர்ந்திடும்
ஆன்மாவின் ஆடலுக்கு உடலென்னும்
உடையணிந்து வாழ்வெனும் தோட்டத்தில்
அனுபவப் பூக்கள் பறிக்கின்றோம்
மாலையொன்றைத் தொடுத்திடுவோம்
பரம்பொருளில் அணிவிப்பதற்காய்

சக்தி சக்திதாசன்

Monday, April 07, 2025

ஆன்மாவின் ராகமின்று கேட்பதனால்

இதயத்தின் ஓரத்தில்
ஏதோ ஒரு சங்கீதம்
ஏதோவொரு பாட்டு அதற்கு
எவரோ தந்த ராகம்
சொல்லாத சொற்களுக்குள்
சுகமான தத்துவங்கள்
என்மன வெளிச்சத்துக்கு
நானே இட்டுக்கொண்ட திரைகள்
மூடிக் கொண்ட காரணத்தால்
முடியாமல் போன முக்கோணம்

காலம் என்னும் படகினிலே
கரைதேடும்.பயணமொன்றில்
கற்றுக்.கொண்ட பாடங்களில்
சற்றும் குன்றா ஞான விளக்கங்கள்
தொட்டுச் சென்ற கணங்களுக்குள்
தொடமுடியா கனவுகள்
விட்டுப்போன நினைவுகளை
விலக்க முடியா பிணைப்புகள்
விளங்கிக் கொண்ட பொழுதினில்
விந்தையான உணர்வுகள்

நானே எழுதி நானே நடிக்குமொரு
நாடகமே வாழ்க்கையெனும்
நிஜத்தினை புரிந்து கொள்ள
நீளமான பயணமாய் நெடுந்தூரம்
பாய்மரத்தைக் கட்டி விட்டேன்
காற்றடிக்கும் திசையறியாமல்
நடுக்கடலில் நங்கூரமிட்டு 
வழிதேடும் பயணமொன்றின் பரிதாபம்
சுழலுகின்ற பூமியின் நடுவில்
விழலுக்கிறைத்த நீர் இதுவோ ?

காலையொன்றின் விடிதலுக்குள்
கவிதையொன்று முகிழ்க்கிறது
காததுரம் ஓடிவிட்ட காரணத்தால்
கால்கள் கொஞ்சம் வலிக்கிறதோ ?
முதிர்ந்துபோன உள்ளமொன்றுள்
மூடிவிட்ட மேகங்களாய் ஞாபகங்கள்
பொழிகின்ற மழைநீராய் வரிகளைப்
பொழிந்து தள்ளும் உணர்வுச்சுழல்
அடிநாதம் ஒலிக்குதம்மா என்னுள்ள
ஆன்மாவின் ராகமின்று கேட்பதனால்

சக்தி சக்திதாசன்

Monday, March 31, 2025

நதியாய் வாழ்ந்திடுவோம்

மலையிலே பிறந்த ஊற்று
மடை திறந்த வெள்ளமாய்
மணற்படுகை வழியோடி
மகிழ்ந்தோடும் நதியாக
மனம்மகிழ்ந்து துள்ளியாடும்
மீன்கள் அதில் விளையாடும்

கரையோரம் வளர்ந்திருக்கும்
காட்சிநிறை பசுமைதனை
நீரூற்றி செழிப்பாக்கி
நிலமெலாம் ஈரம் விதைத்து
வளைந்தோடும் வழிசமைத்து
விரைந்தோடும் நதிமங்கை

பாறைகளில் பட்டுத் தெளித்து
பன்னீர் புஷ்பங்களாய் மலர்ந்து
தவித்திருக்கும் மக்கள் மகிழ்ந்திட
தாகம் தீர்த்து பயணிக்கும்
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்
அந்தஸ்து பார்க்காத அன்புப் புனல்

இயற்கையன்னை வரமன்றோ
இறையருளின் கொடையன்றோ
யார் கேட்டு யார் கொடுத்தார் ?
ஊர் வாழ்ந்திட ஊற்றாய் உருவாகி
இடையறாத வேகத்துடன் ஓடும்
இன்பமூலம் அந்த நதியென்பேனோ ?

ஓடுகின்ற நதிமகளின் பயணம்
தேடுமொரு ஆழியை ஆறாமல்
வழியல்லாம் பல உயிர்களை
வாழவைத்து அந்நதி தொடரும்
வாழ்வெமக்கு இனிக்க வேண்டுமெனில்
வாழவேண்டும் அந்நதியைப் போல

சக்தி சக்திதாசன்


Wednesday, March 12, 2025

கண்களின் ஓரத்திலே

கண்களின் ஓரத்திலே
கனவினைத் தவழவிட்டு
காலத்தின் சுழற்சியிலே
கலைத்திடும் விதமொன்று

ஞாலத்தின் மையத்தில்
கோலத்தின் மாற்றத்தின்
ஆழத்தின் தாக்கத்தால்
மூலத்தின் தேடலொன்று

நீலத்தைத் தொலைத்து
நிற்குமந்த வானத்தின்
நிலைகுலைந்த தோற்றமாய்
நிதர்சனத்தின் விளக்கங்கள்

நாண்பூட்டிய வில்லொன்றின்
வேகத்தின் ஆற்றலைப்போல்
விவேகத்தின் கூர்மையினால்
விலையாகிய வாதங்கள்

ஒன்றென்றும் இரண்டென்றும்
ஒவ்வொன்றும் தொடர்ந்திடும்
ஒன்றல்ல இரண்டல்லவே
ஓராயிரம் கருத்தாடல்கள்

வந்திங்கு பிறந்ததுவும்
வாசலது மூடிடுமே
வாழ்க்கையில் கடைசிவரை
வருவதெல்லாம் அனுபவமே !

அடைந்தகரை ஓரத்திலே
ஆனந்தநிலை சயனத்திலே
அமைதிசூழ் கணத்தினிலே
ஆன்மாவின் சங்கீதம்

சக்தி சக்திதாசன்



Thursday, March 06, 2025

காணாத பொழுதொன்றில்

காணாத பொழுதொன்றில்
தேடாத காட்சிகளாய்
மூடாத விழிகளுக்குள்
முடியாத தொடரலைகள்

தனக்குள்ளே விதைத்திட்ட
தானறியா வேதங்கள்
தானாகப் புலருகின்ற
தத்துவப் பொழுதிதுவோ ?

விளக்கமில்லா சாத்திரங்கள்
விளங்கிட வேளையில்லை
விவேகத்தின் வேட்கையால்
விலக்கியிங்கு ஓடுகிறோம்

புரியாத காரணத்தால்
புரட்சியெனும் பெயர்சூட்டி
புலம்பியோடிய வாலிபத்தில்
குழம்பிப்போன மெய்ப்பொருள்

சலனமில்லா பொழுதைத்தேடி
சத்தியத்தின் பயணமென்று
சிந்தனையின் சிதறலினால்
சிதைந்துபோன கணங்கள்

முடிந்துபோன நேற்றைகளும்
முளக்கப்போகும் நாளைகளும்
சுமைகளன்றி எதுவுமில்லை
சுவைக்காவிட்டால் இன்றைகளை

சுவரில்பட்டு திரும்பிவரும்
சீறிவரும் பந்துபோல
சுவைக்காத அனுபவங்களுக்காய்
சுழன்றுவரும் ஆன்மாவும்

அடைகின்ற அத்தனையும்
ஆன்மாவின் ஆசைகளே
அனுபவத்தின் உச்சத்தில்
ஆன்மீகக் கொடியுயரும்

சக்தி சக்திதாசன்

Saturday, February 22, 2025

காலங்களின்

காலங்களின் வாசலில்
கவிதைகளின் வாசம்
கண்களின் பார்வைக்குள்
காண்பதென்ன வேஷம் ?

பூசுகின்ற வர்ணங்களாய்
பூக்களின் இதழ்களில்
புதிதான புரிதல்கள்
புகட்டுகின்ற பாடங்கள்

காலையிலே மலர்வதும்
மாலையிலே உதிர்வதும்
மலர்களுக்கு புதிதல்ல
மனிதர்க்கே மயக்கங்கள்

பருத்தியின் வரவினால்
பட்டாடை பகட்டாகும்
உடுக்கின்ற மனிதர்
உணர்வரோ மூலத்தை

அகிலத்தின் பரப்பினிலே
அனைத்துக்கும் பொருளுண்டு
அதையறியா உள்ளங்கள்
அடைந்திடாத ஞானங்கள்

விடைதேடி அலைகின்ற
வினாக்களின் பயணங்கள்
வழியெங்கும் விரயமாகும்
வீணாகும் நேரங்கள்

முடிவில்லாக் கதைகளுக்கு
முடிவுதேடும் மூடர்கள்
முழுச்சோற்றில் பூசணிக்காய்
முயன்றாலும் மறைந்திடுமோ ?

கவிதைகளின் வரிகளுக்குள்
கரைந்திடும் கருத்துகள்
கற்றுக்கொண்ட பாடங்கள்
கடைசிவரை அனுபவங்களாய்

சக்தி சக்திதாசன்

Monday, August 19, 2024

இக்காலைக் கவிதையிது

எழுத்தென்னும் வேள்வியில்
எனக்குள்ளே கேள்விகள்
எனைத்தேடும் வழிகளில்
என்பயணம் மொழியோடு

எதையெதையோ எழுதிடும்
என்னுள்ளத்தின் ஓசைகள்
எப்போதும் இசைத்திடுமோ
என்னுடைய ராகங்கள் ?

மூடியிருக்கும் மொட்டுக்குள்
முகிழ்க்காத மலர்களாய்
மனமுட்டும் கவிதைகள்
மிதந்திடும் மொழியாற்றில்

தமிழ்மண்ணில் விளைந்து
தமிழூறி வளர்ந்தவன்
தமிழன்னைத் தாலாட்டில்
தனையின்று இழந்தவன்

புகழ்தேடிப் போகாமல்
மகிழ்வொன்றைத் தேடி
திகழ்கின்ற வாழ்வினில்
தவழ்கின்ற உள்ளம்

கனவுகளின் மையெடுத்து
நினைவுகளில் வரிதொடுத்து
புனைகின்ற கவிதைகளில்
நனைகின்ற பொழுதுகளிவை

சொல்லோடு பொருளூட்டி
சொல்லுகின்ற வரிகளுக்குள்
சொல்லாத பொழுதுகளும்
சொல்தேடி அலையுமிங்கு

அனுபவத்தின் ஆழத்தில்
ஆழ்ந்தெடுத்த முத்துக்கள்
அங்கொன்று இங்கொன்றாய்
அடிதேடி அலைவதுண்டு

இதுபோதும் இதுபோதும்
இதயமெங்கும் புதுவெள்ளம்
இரைந்தோடும் வரிகளாய்
இக்காலைக் கவிதையிது

சக்தி சக்திதாசன்

Sunday, August 18, 2024

நாமனைவரும் ஒருதாய் மக்களே !

இன்று போகட்டும்
நாளை விடிந்திடும் என்றே
ஆயிரம் கனவுகளோடு
வாழ்வுடன் போராடும்
நலிவுற்ற தோழா !

நீ தேடும் நாளைகள்
நினைக்கும் தூரத்தில் இல்லை
அதைப் பூட்டி  வைத்து
அழகு பார்க்கும், புண்ணியர்கள்
நிறைந்த பூமியடா !

உனது நாளை விடிவதற்கு
உலகம் கொஞ்சம் விழிக்க வேண்டும்
உனது உதிரத்தை
உறிஞ்சி தம்மை வளர்க்கும்
உனது உழைப்பில்
தமது மாளிகைகளை அமைத்து
மகிழும் மாந்தர்.மனதின்
உணர்ச்சிகள் உறுத்தும் வரை
உனது விழிநீர் காயப் போவதில்லை !

உருளும்.இந்தப் பூமிப்பந்து
உனக்கென்றும் எனக்கென்றும்
உருளும் திசையை மாற்றுவதில்லை
உள்ளே உருளும் மானிடர்.மட்டும்
உயர்த்திப்.பிடிக்கும் தன்னலம்
உன்னைத் தாழ்த்தி வைக்கிறது
உனது உள்ளம் விழிப்படையட்டும்
உனது கனவுகளின் மீது
உன் நம்பிக்கைகள்.வலுவடையட்டும்
உன் நாளைகள் நிச்சயம் வெளித்திடும்

கல்வியை உணர்ந்திடு
கற்றிடும் வாழ்வின் அனுபவங்கள்
கற்பிக்கும் நிகரற்ற பாடங்களை
கசடறக் கற்று முன்னேறிடு தோழா !
கடித்துச் சுவைத்து வீசிடும் விதை
கனிவுடன் கூடிய கனிகளை
காலத்தால் ஈயும் விருட்சமாவதில்லையா ?
கைகளில் வலுவும், கால்களில் தெம்பும்
கடைசிவரை கொண்டிட்டால்
காசுனியில் நீ சரித்திரம் ஒன்றைக்
கட்டாயம் படைத்திட முடியும்

விரைந்தே எழுந்திடுவாய் தோழா !
விழிநீரைத் துடைத்திடு காலத்தை
விரயமாக்காமல் புறப்படுவோம்
மாற்றம் நிகழ வேண்டுமானால்
மாற்றமாக நீயே மாறிவிடு என்றார்
சத்தியத்தின் நயகன் காந்தியடிகள்
கைகளைக் கோர்த்துக் கலைந்திடும்
இருளின் காலை வெளிப்பில்
கண்டிடுவோம் ஒரு சுபீட்சமான
எதிர்காலத்தை நம் அனவருக்கும்
ஏன் தெரியுமா என் தோழனே !
நாமனைவரும் ஒருதாய் மக்களே !

சக்தி சக்திதாசன்

Thursday, August 15, 2024

இனித்திடும் வாழ்க்கை

புதிரானதோர் இரவினிலே
புரியாததோர் புதிராக
புரண்ட கணங்களில்
புலர்ந்ததிந்தக் கவிதையே !

எதையிங்கு செய்கிறோம் ?
எவர்க்காகச் செய்கிறோம் ?
எதைக் காக்க இந்த வேடங்கள் ?
எப்போதோ எல்லாம் முடிந்தவை

ஏற்றாலும் இல்லை அதை
ஏற்காவிட்டாலும் அவசரமாய்
உருளும் உலகத்தில் தோன்றும்
நிஜமான நிழல்களே நாம்

கனவோடு ஒரு பாகம் இங்கு
நனவோடு மறுபாகம் வாழ்வில்
விளக்கமுடியா விசித்திரங்கள்
விளயாடும் கோலங்கள் எம்மோடு

வினாக்களின் விடைதேடியே இங்கு
விரயமான பல வீண் பயணங்கள்
வீணான ஜம்பங்களினால் வாழ்வில்
வீணாகிப் போன வாழ்வின் நீளங்கள்

தொடரும் கதையென வாழ்வினில்
தொடக்கி வைக்கும் சொந்தங்கள்
தொலைந்து போகும் காலத்தோடு
தோய்ந்து போகும் உணர்வுகள்

தோற்காத வீரம் எனக் கோஷமிடும்
விதண்டாவத வாதங்கள் ஆயிரம்
விஷப்பரீட்சை வைத்துப் பார்த்தால்
வினாடியில் புலர்ந்திடும் உண்மைகள்

போகும் இடத்தை அறியாமல்
நடக்கும் திசையற்ற பயணங்கள்
போக்கும் வரவும் இல்லாப் பொய்யான
வியாக்கியானங்களின் வித்தியாசங்கள்

முக்கோணத் தோற்றத்தில் காணாத
மூன்றாவது கோணமதன் மாயம்
அதனுள் அடங்கிய வாழ்க்கையின்
அர்த்தமற்ற பல சூத்திரங்கள்

நிலையற்ற வாழ்க்கை இவ்வுலகில்
நிலைகாண வழியிண்டு புவியில்
தன்னுள் தானே பயணிக்கும் 
தன்னிகரற்ற பயணத்தை அறிந்தால்

ஆடுவதும் அடங்குவதும் மாயைகளே
அழியாத உண்மை ஒன்றுண்டு
ஆதிமுதல் அந்தம்வரை எம்முள்
அழியாமல் ஆன்ம சங்கீதமே அது

ஆன்மாவின் இருப்பை உணர்ந்தால்
அதைத்தேடி கண்மூடி பயணித்தால்
ஆனந்தம் வாழ்வினிலே அடைந்திடுவோம்
அனுதினமும் வாழ்க்கை இனித்திடும்

சக்தி சக்திதாசன்

Monday, July 22, 2024

இதயத்தின் துடிப்பும் கவிதையே

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதை தானிது

முளைத்த உணர்ச்சிப் பெருக்கு
முகிழ்த்தே நெஞ்சில் வெடித்து
முழுதாய் மலர்ந்தது என்று
தமிழாய் விரிந்தது இன்று

களைத்த இதயம் கனக்கையில்
கனிந்திடும் தமிழே தாங்குது
கரும்பாய் இனிக்கும் தமிழிது
கன்னித் தமிழின் வனப்பிது

அன்னைத் தமிழின் மடியில்
அன்புத் தமிழாய்த் தவழ்ந்து
இன்பத் தமிழாய் வளர்ந்து
இன்றும் தமிழால் மகிழ்கிறேன்

கதிரவன் கதிராய்ப் படர்ந்து
காலைப் பொழுதாய் விடிந்து
கவிதைப் பொருளாய் மலர்ந்து
கலப்பது எந்தன் தமிழென்பேன்

கருத்தாய்த். திரளும் மேகங்களென
கவிதை மழையாய்ப் பொழிந்திட
காற்றினில் பறந்திடும் சருகென
கணத்தில் மறைவேன் தமிழினுள்

காதலில் பிறந்த கவித்துவம்
கற்றதோ வாழ்வெனும் அனுபவம்
கலந்தே இன்றென்னை இயக்குது
காலையும் மாலையும் இனிக்குது

விழுந்தேன் தமிழன்னை மடியில்
வலர்ந்தேன்  வாலிபத் திமிரினில்
உணர்ந்தேன் வாழ்வெனும் நாடகம்
உண்மையே உலகின் ஆன்மீகம்

காலைகள் புலர்வதும் கவிதையில்
மாலைகள் புதைவதும் கவிதையில்
இடையினில் வாழ்வதும் கவிதையாய்
இதயத்தின் துடிப்பும் கவிதையே


சக்தி சக்திதாசன்

Sunday, July 21, 2024

மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

கனவுகளின் வழி ஒடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி

தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று 

தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே

கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்

சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிட க்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல

என்னுள் தேங்கிய உணர்வுகள் தாக்கும்
என்னை எனக்கே காட்டும் நோக்கம்
எனக்காய் காலம் புகட்டிய பாடங்கள்
என்னை நானாய் செதுக்கிய உளிகள்

கண்கள் கண்டவை ஆயிரம் காட்சிகள்
காதில் விழுந்தவை அதுவொரு கோடி
கருத்தில் பதிந்தவை சிற்சில மட்டுமே
கவிதையாய்ப் பகர்வது எத்தனையோ

சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

சக்தி சக்திதாசன்

Tuesday, July 09, 2024

எதைத் தேடுகிறாய் தோழா?

எதைத் தேடுகிறாய் தோழா?

உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா ?
ஓ ! 
அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா !

கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?

நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை .....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே உணர்வுகளை ........

அதிர்வுகளின் அழங்களை
அறிய முடியாமல் கவ்விக்கொண்ட‌
அறியாமை எனும் போர்வை
அரித்துக் கொண்டே இதயத்தை .....
எத்தனை காலம்தான் தோழா ?

எதைத் தேடுகிறாய் தோழா?

நிழலுக்குள் புதைந்து போன
நிஜங்களின் வரலாறையா ?
உண்மைகளை விற்று விட்டு
பொய்களை வாங்கும்
சமுதாயச் சந்தையின் 
வியாபாரிகளையா சொல் !

எதைத் தேடுகிறாய் தோழா ?

இதோ விடிகிறது ! இதோ விடிகிறது !
என்று இரவுக்குள் பூட்டி வைத்து
அழகு பார்க்கும் வித்தைக்காரரையா ?
இல்லை , பசப்பு வார்த்தைகளை நம்பி
பகலையே காணாமல் புலம்பும்
படித்த முட்டாள்களையா ?

இல்லாத புதையலொன்றின்
வரைபடத்தைக் காட்டிக் காட்டி
இருக்கின்ற செல்வத்தைச் சுருட்டும்
குருட்டுப் புத்திக்காரரின்
வரட்டு ஜம்பத்தையா ?
சொல்லிவிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

இன்றைய உலகம் விரைவில்
விழிக்கவில்லை யெனில்
நாளைய உலகமென்று ஒன்றைக்
கனவில் கூட நினைக்க முடியாது
சூழலை அழித்து தற்காலிக
சுகத்தினை அனுபவிப்போர்
சாதிக்கப் போவதெல்லாம்
சூனியமான எதிர்கால மொன்றே!

தேடலின் தேவையை மாற்றி
இரவின் கருமைக்குள் இருந்து
வெளிச்சத்தை நோக்கி மக்களை
விழிக்கப் பண்ணும் நேர்மறை
வழிகளைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா ?

தலைமுறை தலைமுறையாய்
தம் தலைமுறை வாழ்ந்திட எண்ணி
தரணியின் வளத்தினை அழிக்கும்
தன்னல மனிதரின் மனங்களில்
தம்மைத் தாமே அறிந்திடும் கலையை
புரிந்திட வைக்கும் செயல்களின்
பாதையைத் தேடிடு தோழா !

பிரபஞ்சம் எமக்கு ஈந்தவையெல்லாம்
அனைவரும் வாழ்ந்திட வழிகளே !
இயற்கையும் , சூழலும் செல்வங்களென
இதயத்தில் அனைவரும் கொண்டிட
இகத்தினில் நீ ஆற்ற வேண்டிய
பணிகளின் வகைகளைத் தேடு !

வறுமையில் உழன்றிடும் மக்களின்
வாழ்வினை மாற்றி அனைவரும்
கல்வியைப் பெற்று உணர்ந்திட்டால்
மட்டுமே நாளைய உலகம்
நன்றாய் வாழ்ந்திடும் என்பதை
நானிலம் முழுவதும் முழங்கிடும்
வழியினைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

அன்பெனும் பாதையில் உண்மை
ஆன்மீக வாழ்வின் தேவையை
மதங்களைக் கடந்தவொரு
மனங்களின் அடிப்படையில்
வளர்த்திட்டு உண்மை மெய்ஞானத்தைக்
காட்டிடும் விஞ்ஞானத்தைப் போதிக்க
அஞ்சாத மனத்தினை அடைந்திடும்
மார்க்கத்தைத் தேடிடு தோழா !

இன்னும் .  .  .  .

எதைத் தேடுகிறாய் தோழா ?

 
சக்தி சக்திதாசன்

Sunday, July 07, 2024

ரசிக்கக் கற்றிடுவோம்

பொல்லாத உலகமிது
செல்லாத பாதைகள் பல
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிதம்நிதம் எத்தனையோ !
நெஞ்சத்தின் உணர்வுகளைக்
கொஞ்சமாய்க் கிள்ளிப் பார்க்கும்

வனப்புமிகு வஞ்சங்கள்
வியப்புமிகு வழிகளில்
விதம்விதமாய் விளையாடி
விவேகத்தைச் சோதிக்கும்
விரித்துவைக்கும் வலையினில்
விழுத்திவிட முயற்சிக்கும்

சொந்தத்தின் பந்தங்கள்
சொக்கவைத்துச் சதிராடும்
முந்தைகளின் எச்சங்கள்
முந்தியெம்முள் கொந்தளிக்கும்
சந்தையிந்தச் சமுதாயம்
சத்தமின்றிச் சாய்த்துவிடும்

உண்மைகளைத் தராசிலிட்டு
உருவாக்கும் வியாபாரம்
உரைகல்லில் உரசிப் பார்த்து
உள்ளங்களை ஏலமிடும்
உலகமிதன் மையத்தில்
உள்ளதெல்லாம் பேராசை

இத்தனையும் பார்த்ததினால்
அத்தனைகளின் அனுபவங்களால்
உணர்ச்சிகளை நிறுத்திவைத்து
உள்ளத்தை அலசுகிறேன்
காட்சிகளாய் ரசித்தபடி
சாட்சியாக மாறிவிட்டேன்

சிந்தனைக் குதிரையினை
வேகமாகத் தட்டிவிட்டு
வெளிப்பயணம் நிறுத்தி
உள்முகமாய் பயணிக்கிறேன்
என் மனதின் அழுக்குகளை
ஒவ்வொன்றாய்க் களைகின்றேன்

உலகென்று தனியான
இடமென்று எதுவுமில்லை
உடலுமல்ல உள்ளமுமல்ல
உள்ளதெல்லாம் ஆன்மாவே !
உணர்ந்து கொள்ள ஆரம்பித்தால்
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்

எமைச்சுற்றி எதிர்மறைகள்
ஏனதனை ஊக்குவிக்குறோம்
நேர்மறையாய் சிந்தித்தால்
நெஞ்சத்திலே அமைதி வரும்
நடப்பவைகள் அத்தனையும்
நலமாகவே நடக்கின்றது

எதிர்பார்ப்பைக் குறைத்து
ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை
எமக்குள்ளே வளர்த்திட்டால்
எவ்வழியிலும் எமக்கு நன்மையே
தடைக்கற்கள் ஒவ்வொன்றாய்
படிக்கற்களாய் எம் உயர்த்தும்

உண்மையொன்று புரிகிறது
உள்ளமெல்லாம் விரிகிறது
அனைவருள்ளும் சஞ்சரிக்கும்
ஆன்மா அனைத்தும் ஒன்றுதானே
பிரித்து நிற்கும் பேதங்களை
துரத்தும் வலிமை எமக்குண்டு

எம்மைத் தேடி பயணமொன்றை
எமக்குள் நாமே நிகழ்த்தும் போது
எம்மைச்சுற்றி நடப்பவை அனைத்தின்
சூட்சுமங்கள் புரிந்திடும் எளிதில்
நாம் கேட்டு நாம் பெற்ற வாழ்விதனை
நாம் ரசிக்கக் கற்றிடுவோம்

சக்தி சக்திதாசன்

Tuesday, June 11, 2024

தமிழன்னையைத்துதித்து நானும் போற்றிடுவேன்

நெஞ்சிலே ஒரு ராகம்
நினைவிலே சங்கீதம்
பாடிடும் பொழுதெல்லாம்
பரவசம் பொங்கிடும்

நேற்றைய நிகழ்வுகள்
கற்பித்த அனுபவங்கள்
இன்றைய வரிகளாய்
இனித்திடும் நாளையே

சேற்றிலே முகிழ்த்திடும்
செந்தமைரை வனப்பினை
களிப்புடன் ரசித்திட்டால்
காலமெல்லாம் மகிழ்ச்சியே

விழிகளில் நிறைந்திடும்
விதவிதமான காட்சிகள்
விரித்திடும் சிறகினை
வழிந்திடும் கவிவரிகளாய்

பிறந்திடும் போதென்னை
அறிந்திடவில்லை நன்றாய்
முதிர்ந்ததும் தானென்னை
உணர்ந்ததுவே உண்மை

விடியலும் ஓர்கவிதை - நாள்
முடியலும் ஓர்கவிதை
அழுவதும் ஓர்கவிதை - பின்
சிரிப்பதுமே ஓர்கவிதை

துடித்திடும் பொழுதுகளில் - கவி
வடிப்பது சுகமாகும்
துள்ளிடும் வேளையிலும் - கவி
சொல்லிட மனமேங்கும்

தளும்பும் மகிழ்வதனில் - எந்தன்
தஞ்சம் தமிழென்பேன்
தவிப்பினை தவிர்ப்பதுவும் - தாய்த்
தமிழின் அருளென்பேன்

நீலமந்த வானம் போல்
நிலவு தரும் சுகந்தம் போல்
ஆழம் அந்த ஆழியைப் போல்
ஆதியற்ற அன்னைத் தமிழே !

வணங்கியிந்தக் காலைதனில்
வழங்குகிறேன் கவிதையினை
துலங்குமெந்தன் தமிழன்னையைத்
துதித்து நானும் போற்றிடுவேன்

சக்தி சக்திதாசன்

Wednesday, May 29, 2024

சில்லென்று சிலிர்த்திடும்

சில்லென்று இதயத்தில்
சிலிர்க்கின்ற உணர்வூட்டம்
மெல்லினிய காலையதில்
சொல்லோடு விளையாட்டு

நெஞ்சமதில் பாட்டொன்று
நினைவினில் நீந்திடும்
பொழிகின்ற மழையாக
வழிகின்ற ஞாபகங்கள்

சுரக்கின்ற வரிகளினுள்
சுவைக்கின்ற இனிமை
சுளைகளாய்த் திறக்கும்
சுகமான அனுபவங்கள்

பட்டொளிக்கும் ஒளியாய்
பகலவனின் கதிர்கள்
சுட்டெரிக்கும் போதிலும்
சுகமாகத் தோன்றும்

முட்களிடை சிரிக்கும்
முத்தான ரோஜாவின்
முழுதான அழகிதழ்கள்
முகத்தோடு மோதும்

விட்டகலும் மனதின்
வினையான சுமைகள்
தொட்டுவிடும் தூரமதில்
தொடுவானம் தெரியும்

எட்டிவிட எட்டிவிட
ஏதேதோ தூண்டும்
முட்டிவிடும் போதங்கு
முத்தமிழும் கூடும்

ஆனந்தம் தானிங்கு
ஆரம்பம் ஆகும்
அருவிபோல ஓடும்
ஆழ்மனதின் ஊற்று

கண்திறந்த வேளையில்
கவிசெய்ய ஏங்கும்
கண்மூடும் தாலாட்டாய்
கவிதைதானே பெருகும்

கலைவாணி கட்டளையால்
கருவொன்று முகிழ்க்கும்
கவிமாலை சாத்தியதால்
களிப்படையும் உள்ளம்

வாழ்ந்திடும் காலமெல்லாம்
வரைந்திடுவேன் கவிதைகள்
சாய்ந்திடும் போதுமெந்தன்
சாய்மனையே கவிதைதானே !

சக்தி சக்திதாசன்