பொல்லாத உலகமிது
செல்லாத பாதைகள் பல
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிதம்நிதம் எத்தனையோ !
நெஞ்சத்தின் உணர்வுகளைக்
கொஞ்சமாய்க் கிள்ளிப் பார்க்கும்
வனப்புமிகு வஞ்சங்கள்
வியப்புமிகு வழிகளில்
விதம்விதமாய் விளையாடி
விவேகத்தைச் சோதிக்கும்
விரித்துவைக்கும் வலையினில்
விழுத்திவிட முயற்சிக்கும்
சொந்தத்தின் பந்தங்கள்
சொக்கவைத்துச் சதிராடும்
முந்தைகளின் எச்சங்கள்
முந்தியெம்முள் கொந்தளிக்கும்
சந்தையிந்தச் சமுதாயம்
சத்தமின்றிச் சாய்த்துவிடும்
உண்மைகளைத் தராசிலிட்டு
உருவாக்கும் வியாபாரம்
உரைகல்லில் உரசிப் பார்த்து
உள்ளங்களை ஏலமிடும்
உலகமிதன் மையத்தில்
உள்ளதெல்லாம் பேராசை
இத்தனையும் பார்த்ததினால்
அத்தனைகளின் அனுபவங்களால்
உணர்ச்சிகளை நிறுத்திவைத்து
உள்ளத்தை அலசுகிறேன்
காட்சிகளாய் ரசித்தபடி
சாட்சியாக மாறிவிட்டேன்
சிந்தனைக் குதிரையினை
வேகமாகத் தட்டிவிட்டு
வெளிப்பயணம் நிறுத்தி
உள்முகமாய் பயணிக்கிறேன்
என் மனதின் அழுக்குகளை
ஒவ்வொன்றாய்க் களைகின்றேன்
உலகென்று தனியான
இடமென்று எதுவுமில்லை
உடலுமல்ல உள்ளமுமல்ல
உள்ளதெல்லாம் ஆன்மாவே !
உணர்ந்து கொள்ள ஆரம்பித்தால்
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்
எமைச்சுற்றி எதிர்மறைகள்
ஏனதனை ஊக்குவிக்குறோம்
நேர்மறையாய் சிந்தித்தால்
நெஞ்சத்திலே அமைதி வரும்
நடப்பவைகள் அத்தனையும்
நலமாகவே நடக்கின்றது
எதிர்பார்ப்பைக் குறைத்து
ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை
எமக்குள்ளே வளர்த்திட்டால்
எவ்வழியிலும் எமக்கு நன்மையே
தடைக்கற்கள் ஒவ்வொன்றாய்
படிக்கற்களாய் எம் உயர்த்தும்
உண்மையொன்று புரிகிறது
உள்ளமெல்லாம் விரிகிறது
அனைவருள்ளும் சஞ்சரிக்கும்
ஆன்மா அனைத்தும் ஒன்றுதானே
பிரித்து நிற்கும் பேதங்களை
துரத்தும் வலிமை எமக்குண்டு
எம்மைத் தேடி பயணமொன்றை
எமக்குள் நாமே நிகழ்த்தும் போது
எம்மைச்சுற்றி நடப்பவை அனைத்தின்
சூட்சுமங்கள் புரிந்திடும் எளிதில்
நாம் கேட்டு நாம் பெற்ற வாழ்விதனை
நாம் ரசிக்கக் கற்றிடுவோம்
சக்தி சக்திதாசன்
