Monday, August 19, 2024

இக்காலைக் கவிதையிது

எழுத்தென்னும் வேள்வியில்
எனக்குள்ளே கேள்விகள்
எனைத்தேடும் வழிகளில்
என்பயணம் மொழியோடு

எதையெதையோ எழுதிடும்
என்னுள்ளத்தின் ஓசைகள்
எப்போதும் இசைத்திடுமோ
என்னுடைய ராகங்கள் ?

மூடியிருக்கும் மொட்டுக்குள்
முகிழ்க்காத மலர்களாய்
மனமுட்டும் கவிதைகள்
மிதந்திடும் மொழியாற்றில்

தமிழ்மண்ணில் விளைந்து
தமிழூறி வளர்ந்தவன்
தமிழன்னைத் தாலாட்டில்
தனையின்று இழந்தவன்

புகழ்தேடிப் போகாமல்
மகிழ்வொன்றைத் தேடி
திகழ்கின்ற வாழ்வினில்
தவழ்கின்ற உள்ளம்

கனவுகளின் மையெடுத்து
நினைவுகளில் வரிதொடுத்து
புனைகின்ற கவிதைகளில்
நனைகின்ற பொழுதுகளிவை

சொல்லோடு பொருளூட்டி
சொல்லுகின்ற வரிகளுக்குள்
சொல்லாத பொழுதுகளும்
சொல்தேடி அலையுமிங்கு

அனுபவத்தின் ஆழத்தில்
ஆழ்ந்தெடுத்த முத்துக்கள்
அங்கொன்று இங்கொன்றாய்
அடிதேடி அலைவதுண்டு

இதுபோதும் இதுபோதும்
இதயமெங்கும் புதுவெள்ளம்
இரைந்தோடும் வரிகளாய்
இக்காலைக் கவிதையிது

சக்தி சக்திதாசன்