Wednesday, May 29, 2024

சில்லென்று சிலிர்த்திடும்

சில்லென்று இதயத்தில்
சிலிர்க்கின்ற உணர்வூட்டம்
மெல்லினிய காலையதில்
சொல்லோடு விளையாட்டு

நெஞ்சமதில் பாட்டொன்று
நினைவினில் நீந்திடும்
பொழிகின்ற மழையாக
வழிகின்ற ஞாபகங்கள்

சுரக்கின்ற வரிகளினுள்
சுவைக்கின்ற இனிமை
சுளைகளாய்த் திறக்கும்
சுகமான அனுபவங்கள்

பட்டொளிக்கும் ஒளியாய்
பகலவனின் கதிர்கள்
சுட்டெரிக்கும் போதிலும்
சுகமாகத் தோன்றும்

முட்களிடை சிரிக்கும்
முத்தான ரோஜாவின்
முழுதான அழகிதழ்கள்
முகத்தோடு மோதும்

விட்டகலும் மனதின்
வினையான சுமைகள்
தொட்டுவிடும் தூரமதில்
தொடுவானம் தெரியும்

எட்டிவிட எட்டிவிட
ஏதேதோ தூண்டும்
முட்டிவிடும் போதங்கு
முத்தமிழும் கூடும்

ஆனந்தம் தானிங்கு
ஆரம்பம் ஆகும்
அருவிபோல ஓடும்
ஆழ்மனதின் ஊற்று

கண்திறந்த வேளையில்
கவிசெய்ய ஏங்கும்
கண்மூடும் தாலாட்டாய்
கவிதைதானே பெருகும்

கலைவாணி கட்டளையால்
கருவொன்று முகிழ்க்கும்
கவிமாலை சாத்தியதால்
களிப்படையும் உள்ளம்

வாழ்ந்திடும் காலமெல்லாம்
வரைந்திடுவேன் கவிதைகள்
சாய்ந்திடும் போதுமெந்தன்
சாய்மனையே கவிதைதானே !

சக்தி சக்திதாசன்