Thursday, August 15, 2024

இனித்திடும் வாழ்க்கை

புதிரானதோர் இரவினிலே
புரியாததோர் புதிராக
புரண்ட கணங்களில்
புலர்ந்ததிந்தக் கவிதையே !

எதையிங்கு செய்கிறோம் ?
எவர்க்காகச் செய்கிறோம் ?
எதைக் காக்க இந்த வேடங்கள் ?
எப்போதோ எல்லாம் முடிந்தவை

ஏற்றாலும் இல்லை அதை
ஏற்காவிட்டாலும் அவசரமாய்
உருளும் உலகத்தில் தோன்றும்
நிஜமான நிழல்களே நாம்

கனவோடு ஒரு பாகம் இங்கு
நனவோடு மறுபாகம் வாழ்வில்
விளக்கமுடியா விசித்திரங்கள்
விளயாடும் கோலங்கள் எம்மோடு

வினாக்களின் விடைதேடியே இங்கு
விரயமான பல வீண் பயணங்கள்
வீணான ஜம்பங்களினால் வாழ்வில்
வீணாகிப் போன வாழ்வின் நீளங்கள்

தொடரும் கதையென வாழ்வினில்
தொடக்கி வைக்கும் சொந்தங்கள்
தொலைந்து போகும் காலத்தோடு
தோய்ந்து போகும் உணர்வுகள்

தோற்காத வீரம் எனக் கோஷமிடும்
விதண்டாவத வாதங்கள் ஆயிரம்
விஷப்பரீட்சை வைத்துப் பார்த்தால்
வினாடியில் புலர்ந்திடும் உண்மைகள்

போகும் இடத்தை அறியாமல்
நடக்கும் திசையற்ற பயணங்கள்
போக்கும் வரவும் இல்லாப் பொய்யான
வியாக்கியானங்களின் வித்தியாசங்கள்

முக்கோணத் தோற்றத்தில் காணாத
மூன்றாவது கோணமதன் மாயம்
அதனுள் அடங்கிய வாழ்க்கையின்
அர்த்தமற்ற பல சூத்திரங்கள்

நிலையற்ற வாழ்க்கை இவ்வுலகில்
நிலைகாண வழியிண்டு புவியில்
தன்னுள் தானே பயணிக்கும் 
தன்னிகரற்ற பயணத்தை அறிந்தால்

ஆடுவதும் அடங்குவதும் மாயைகளே
அழியாத உண்மை ஒன்றுண்டு
ஆதிமுதல் அந்தம்வரை எம்முள்
அழியாமல் ஆன்ம சங்கீதமே அது

ஆன்மாவின் இருப்பை உணர்ந்தால்
அதைத்தேடி கண்மூடி பயணித்தால்
ஆனந்தம் வாழ்வினிலே அடைந்திடுவோம்
அனுதினமும் வாழ்க்கை இனித்திடும்

சக்தி சக்திதாசன்