Monday, April 22, 2024

ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்

சிந்தனை எனும் தேரேறி
எந்தனில் கொஞ்சம் பயணித்தேன்
முந்தனை யான் வாழ்ந்த முறை
நிந்தனை என்பதை நானறிந்தேன்

அப்பனும், அம்மையும் இணைந்து
அவனியில் என்னை விழுத்தினர்
எப்பயனடைய எவ்வழி செல்வது
அப்பயனறியாமல் தான்  வாழ்ந்தேன்

மெய்ப்பொருள் வாழ்வில் புரியாமல்
பொய்ப்பொருள் தேடி வாழ்ந்த காலம்
சித்தருள் உறைந்த உண்மைகள் காணா
பித்தருள் ஒருவனாய் இருந்தது புரிந்தது

முப்பொருள் தேடியோடி நானும்
முத்தமிழ்ச் சுவையுள் அமிழ்ந்திட்டேன்
எப்பொருள் யார்வாய் கேட்பினும்
மெய்பொருள் காண்பது அறிவென்றுணர்ந்தேன்

என்னுளொளிர்ந்த "நான்" என்னும் விளக்கு
எண்ணெய் இன்றி எரிவது கண்டேன்
எப்படி அதனை அணைப்பது என்று
என்னுள் இன்னும் கேள்விகள் மூளும்

உள்ளத்தில் இருக்கும் உண்மைகளை
உருக்கிக் கவிதையாய் வார்த்திடத் 
உணர்வுகள் என்னை மனிதனாக்கும்
உ றுதிகொண்டேன் மன‌திலின்றே

என்னுள் இருக்கும் என்னை
எரித்திடத் தேவையை உணர்ந்தேன்
என்னைப் பார்த்துச் சிரித்தது
எரிக்கும் எண்ணையாய் தியானமே !

கண்ணை மூடிக் காத்றிலேறி
எண்ணந் துறந்து எல்லாமிழந்து
எனக்குள் ஆழத்தில் தேடுவது
ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்


சக்தி சக்திதாசன்