நெஞ்சிலே ஒரு ராகம்
நினைவிலே சங்கீதம்
பாடிடும் பொழுதெல்லாம்
பரவசம் பொங்கிடும்
நேற்றைய நிகழ்வுகள்
கற்பித்த அனுபவங்கள்
இன்றைய வரிகளாய்
இனித்திடும் நாளையே
சேற்றிலே முகிழ்த்திடும்
செந்தமைரை வனப்பினை
களிப்புடன் ரசித்திட்டால்
காலமெல்லாம் மகிழ்ச்சியே
விழிகளில் நிறைந்திடும்
விதவிதமான காட்சிகள்
விரித்திடும் சிறகினை
வழிந்திடும் கவிவரிகளாய்
பிறந்திடும் போதென்னை
அறிந்திடவில்லை நன்றாய்
முதிர்ந்ததும் தானென்னை
உணர்ந்ததுவே உண்மை
விடியலும் ஓர்கவிதை - நாள்
முடியலும் ஓர்கவிதை
அழுவதும் ஓர்கவிதை - பின்
சிரிப்பதுமே ஓர்கவிதை
துடித்திடும் பொழுதுகளில் - கவி
வடிப்பது சுகமாகும்
துள்ளிடும் வேளையிலும் - கவி
சொல்லிட மனமேங்கும்
தளும்பும் மகிழ்வதனில் - எந்தன்
தஞ்சம் தமிழென்பேன்
தவிப்பினை தவிர்ப்பதுவும் - தாய்த்
தமிழின் அருளென்பேன்
நீலமந்த வானம் போல்
நிலவு தரும் சுகந்தம் போல்
ஆழம் அந்த ஆழியைப் போல்
ஆதியற்ற அன்னைத் தமிழே !
வணங்கியிந்தக் காலைதனில்
வழங்குகிறேன் கவிதையினை
துலங்குமெந்தன் தமிழன்னையைத்
துதித்து நானும் போற்றிடுவேன்
சக்தி சக்திதாசன்
