Thursday, June 18, 2026

இளமைக்காலஇனிய நினைவுகள் . . . .

மனதில்
வட்டங்களாய்ச் 
சுழலும்
நினைவுச் சுழல்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
இளமைக்கால
இனிய நினைவுகள் . . . . 

ஆலய வீதியில்
அந்திப் பொழுதினில்
அடித்த அரட்டைகள்
இன்றும் பாடும்
இனிய கீதங்கள்
என்றும் அழியா
சுகந்தப் பொழுதுகள்

வரவின்
வாசலை அறியாமல்
செலவின்
அர்த்தமும் புரியாமல்
நட்பெனும் 
வட்டத்தினுள் வாடாமல்
விளையாடிய பொழுதுகள்

காலச்
சுழற்சியில் மாறிய கோலங்கள்
நீளப் பயணத்தின்
வளைந்த பாதைகள்
போதித்த உண்மைகள்
சாதித்த பாடங்கள்

மழலைச்
சிரிப்புகள் சேர்த்த
மரபுக் குரல்கள்
மறைந்தாலும் மீண்டும்
மனதின் ஓரத்தில்
முழங்கும் நினைவுகள்

படித்த தெருக்களில்
பதிந்த பாதங்கள்
பழைய கதைகளாய்
பசுமை ததும்பும்
பருவம் திரும்பாத
பரிசுகள் போல

காலையில்
கூடிய கனவுகள்
காற்றோடு பறந்த
காகிதப் பறவைகள்
கையில் இருந்தாலும்
காணாமல் போனவை

அன்பின்
அளவில்லா மொழிகள்
அழகாய் பிறந்த
அந்த நட்புகள்
அருகில் இல்லையென்றாலும்
அழியாத ஓவியங்கள்

சின்னச்
சின்ன சண்டைகள்
சிரிப்பில் கரைந்த
சிலிர்க்கும் தருணங்கள்
சேர்த்துக் கொண்ட
செல்வம் போல்

இன்றும்
இதயத்தின் உள்ளே
இரகசியம் போல
இருக்கும் அந்த நாட்கள்
இழந்தாலும் என்றும்
இனிமை தரும் நினைவுகள்

சக்தி சக்திதாசன்