கண்ணோடு கண்மோதி
தெறிக்கும் பொறியின் கனலாகி
நெஞ்சோடு நெஞ்சிணைந்து உணர்வுகள்
பாய்ந்தோடும் நதியாகி
காற்றோடு கரைந்தோடும் மேகங்களாய்க்
கலைவதே காதலென்றாகுமோ ?
விரலோடு விரல்கோர்த்து
மகிழும் கணங்கள் மலராகி
மனதோடு மனதிணைந்து நினைவுகள்
மணமூட்டும் காற்றாகி
மண்ணோடு வீழ்ந்தேகும் இதழ்களாய்த்
தவிப்பதே காதலென்றாகுமோ ?
கரையோடு அலையாடி
உருகும் கணங்கள் அமுதமாகி
உயிரோடு உயிரிணைந்து ஆசைகள்
ஆர்ப்பரிக்கும் கடலாகி
கடலோடு கரையும் நுரைகளாய்த்
தொலைவதே காதலென்றாகுமோ ?
வானோடு முகில்கூடி
பொழியும் துளிகள் மழையாகி
மண்ணோடு மண்ணிணைந்து தளிர்விடும்
பசும்புல்லின் உயிராகி
வெயிலோடு காயும் பனித்துளியாய்க்
காய்வதே காதலென்றாகுமோ ?
சுருதியோடு லயம்கூடி
எழும்பும் நாதம் இசையாகி
நெஞ்சோடு நெஞ்சிணைந்து ராகங்கள்
தாலாட்டும் கீதமாகி
காற்றோடு கரையும் ஒலியலைகளாய்த்
தேய்வதே காதலென்றாகுமோ ?
விழியோடு ஒளிகூடி
எரியும் சுடரின் ஒளியாகி
உடலோடு உடலிணைந்து மோகங்கள்
உருகிடும் மெழுகாகி
இருளோடு மறையும் நிழல்களாய்த்
தொலைவதே காதலென்றாகுமோ ?
இரவோடு துணையாகி
வழியும் இரகசியம் கனவாகி
நினைவோடு நினைவிணைந்து காலங்கள்
உறைந்துபோகும் நிஜமாகி
விடியலோடு கரையும் விண்மீன்களாய்க்
கலைவதே காதலென்றாகுமோ ?
சக்தி சக்திதாசன்
