Sunday, July 26, 2026

திட்டு திட்டாய் கருமேகங்கள்

திட்டு திட்டாய் கருமேகங்கள்
தீட்டி வைத்தது போல் சித்திரமாய்
பூட்டி வைத்த நினைவுகள் நெஞ்சில்
மூட்டி விட்டதோ கனல் சுவாலைகள்.

மொட்டு மொட்டாய் மலர்ந்த ஆசை
முத்தாய் மின்னிடும் புன்னகையாய்
கட்டு கட்டாய் குவிந்த ஏக்கம்
கண்ணீர் துளியில் கரைந்ததம்மா.

தொட்டு தொட்டாய் தென்றல் வந்து
தோளில் சாய்ந்தது தோழமையாய்
விட்டு விட்டாய் என்ற வலியை
விண்ணும் கேட்கும் மௌனமாய்.

துள்ளித் துள்ளிப் பாயும் நதி
தூரம் சென்றிடும் காவியமாய்
உள்ளம் உள்ளம் தேடும் பாதை
ஒளியை ஏந்திடும் பயணமாய்.

பட்டு பட்டாய் நிலவொளிகள்
பாதை முழுவதும் பரவியதே
சிட்டு சிட்டாய் பாடும் பறவை
சிந்தை முழுவதும் சிறகடித்தே.

வண்ணம் வண்ணம் பூத்த சோலை
வாசம் வீசிய வசந்தமாய்
எண்ணம் எண்ணம் மாறினாலும்
ஏக்கம் மாறாத உறவினிலே.

துளி துளியாய் பெய்த மழைகள்
துயரைத் துடைத்தது தாயன்பாய்
வழி வழியாய் வந்த சோதனை
வாழ்வை செதுக்கிய சிற்பமாய்.

நித்தம் நித்தம் நினைவின் வாசல்
நிழல்கள் தீட்டிடும் ஓவியமாய்
மொத்தம் மொத்தம் வாழ்ந்த காலம்
மூச்சில் வாழ்ந்திடும் காவியமாய்.

சக்தி சக்திதாசன்

Wednesday, July 22, 2026

கனவுகளின் வழி ஓடி

கனவுகளின் வழி ஓடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி

தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று?

தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே

கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்

சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிடக்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல

சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

தேடி அலையும் மனத்தின் உள்ளே
தேங்கிக் கிடக்கும் மௌன மொழிகள்
கூடி மலரும் சிந்தை தோறும்
கோடி விளக்கும் உண்மை ஒளிகள்

வீழ்ந்து எழுவது வாழ்வின் நெறியே
விரைந்து செல்வது காலத்தின் இயல்பே
தாழ்ந்து நிற்பவர் உயர்ந்து விளங்கும்
தாங்கும் பண்பே மனிதன் செல்வம்

விதைத்த எண்ணம் வேராய் மாறி
விழித்த உணர்வு மரமாய் ஓங்கி
கனிந்த செயலின் கனிகள் தந்து
காலம் எழுதும் வாழ்க்கைக் காவியம்

புயல்கள் வந்தும் முறியாத கிளைகள்
பொறுமை கொண்ட மரத்தின் வலிமை
துயர்கள் வந்தும் சிதையாத உள்ளம்
தூய நம்பிக்கையின் மறுபிறப்பே

இறைவன் தந்த இவ்வாழ்வெனும்
இனிய வாய்ப்பின் அருமை உணர்ந்து
பிறர்க்கும் ஒளியாய் தன்னை எரித்து
பிறந்து வாழ்வதே பிறவிப் பயனே.

சக்தி சக்திதாசன்

Friday, July 10, 2026

நான் எழுதுவது கவிதை அல்ல

எதைத் தேடுகிறாய் தோழா?
​உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா?

ஓ! அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா!

​கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?

​நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை.....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே...

உண்மையின் வெப்பத்தை
உள்ளத்தில் தாங்கிக் கொண்டே
இன்னும் எத்தனை காலம்
எவ்வளவு தூரம் ?

ரயில் பயணத்திலே
இறங்கும் இடத்தை அறிவோம்...
வாழ்க்கை பயணத்தில் ......

நாம் எனும் இந்த
சுயகெளரவச் சுமையை
சுமந்து கொண்டே 
நடக்கிறோமே ......
எம்மை நாமே சுயமாக
பரிசோதிக்கும் பக்குவத்தை
அடைந்திருக்கிறோமா ?

எதைத் தேடுகிறாய் தோழா?
​உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா?

எந்த முகமோ உனக்கென
நீ அணிந்திருக்கும்
மூடுபனித் தோற்றங்கள் எல்லாம்
ஒருநாள் கரைந்துவிடுமே தோழா...

கண்ணாடி முன் நின்றபோது கூட
கண்களைத் தவிர்க்கும் அந்த
சிறு நடுக்கம் உனக்குத் தெரியாதோ?
அது தான் உன் உள்ளத்தின்
மௌனக் குரல் அல்லவா?

மறைத்த காயங்கள் எல்லாம்
மருந்து கேட்காமல்
மனதை மெல்லக் கடிக்கையில்...
மௌனமாகத் தாங்குவது தான்
துணிச்சலா தோழா?

வெளிச்சத்தைத் தேடும் கண்கள்
உள்ளிருள் பார்க்கத் தயங்கினால்
எந்த ஒளி உன்னை மீட்கும்?

நிழல்களோடு நட்பு வைத்து
நிஜங்களைத் தள்ளி வைத்தால்
நீ தேடும் அமைதி
எந்த வழியில் வரும் தோழா?

ஒரு நாள்
அனைத்து சத்தங்களும் நின்றபோது
உன் உள்ளத்தின் சத்தியம் மட்டும்
உன்னை எதிர்கொள்ளும்...

அந்நேரத்தில்
தப்பிக்க இடமில்லை தோழா—
தன்னை ஏற்கும் தைரியம் மட்டும் தான்
உனக்கான விடுதலை...

சக்தி சக்திதாசன்

Wednesday, July 08, 2026

நான் எழுதுவது கவிதை அல்ல எண்ணம்

காலம் எனும் தோணியில்
காற்றோடு ஒரு பயணம்
நேற்றோடு போனதெல்லாம்
நெஞ்சிலாடும் நினைவலைகள்

ஞாலம் எனும் தொட்டிலில்
நானயர்ந்த பொழுதுகள்
ஞாபகங்கள் கவியாகியெனைத்
தாலாட்டும் மகிழ்பொழுதுகள்

நீலம் அந்த அழியின் அலைகள்
கரைமோதிச் சிதறுவது போல
கலைந்தோடிய கனவுகள் மனதின்
கரையெங்கும் சிறு துளிகளாய்

மௌனம் எனும் மொழியில்
மனமொரு பாடல் பாடும்
மறைந்துபோன சிரிப்புகள்
மழைத்துளியாக மீள்கின்றன

நிழல்கள் போல நடந்த பாதை
நெஞ்சில் இன்னும் பதிந்ததே
நேரம் தந்த வலிகளெல்லாம்
நிலவொளியில் கரைந்ததே

பறந்துசென்ற நாட்களின் வாசம்
பதிந்திருக்கிறது உள்ளத்தில்
பார்வை தொட்ட ஒவ்வோர் நொடியும்
பாடலாகும் நினைவகத்தில்

அலைபோல வந்த உணர்வுகள்
அழகாய் மீண்டும் எழுகின்றன
அழிந்துவிட்டேன் என்ற போதும்
அவைகள் என்னை உருவாக்கின்றன

வானம் போல விரிந்த நினைவில்
வார்த்தைகள் மலர்கின்றன
வாழ்க்கை என்ற ஓவியத்தில்
வண்ணங்களாய் கலக்கின்றன

சக்தி சக்திதாசன்