Saturday, June 13, 2026

சொல்லத் தெரியாமல்

சொல்லத் தெரியாமல்
சொல்ல முடியாமல்
மெல்ல முடியாதவைகளை
மெல்ல மொழிவதுதான்
வெல்லமென இனிக்கும்
நல்ல கவிதைகளோ ?

மௌனத்தின் இடுக்குகளில்
மறைந்திருக்கும் இசைகளை
மனதில் மட்டும் கேட்டு
மெல்லிசை போல நெகிழ்த்து
உள்ளம் உருகச் சொல்லுவது
உண்மைக் கவிதையோ?

காணாத கண்ணீரை
கனவுகளில் தழுவி
கண்கள் சொல்லாததை
கருவியில் தாங்கி
ஒரு சொல் துளியால்
உலகம் நனைப்பதோ?

துடிக்கும் நெஞ்சத்தின்
துணுக்குகளை சேர்த்து
தெரியாத பாதையில்
தென்றலாய் விடுத்து
படர்ந்த உணர்வுகளை
பாடலாய் பிணைப்பதோ?

வார்த்தைகள் வராமல்
வாசல்கள் மூடினாலும்
உள்ளத்தின் ஒலிகள்
உறங்காமல் எழுந்து
அமைதியின் அர்த்தத்தை
அழகாய் உரைப்பதோ?

மழைதுளி போலவே
மனதைத் தொட்டு செல்லும்
சிறு நினைவுகளும்
சிறகுகள் விரித்தால்
பெரு கவிதையாய்
பிறப்பதென்பதோ?

அறியாத வலிகளை
அழகாக வடித்து
அன்பின் வடிவத்தில்
அமைதியை அணிந்து
உள்ளம் பேசுவது
உயிரின் மொழியோ?

சொல்லாத சுகங்களை
சொற்களில் தேடாமல்
சொந்தமாய் உணர்ந்து
சும்மா நின்றாலும்
அந்த அமைதியே
அழகிய கவிதையோ?

சக்தி சக்திதாசன்