Monday, August 14, 2006

உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்

உறவுகள் !
விசித்திரமாகப் பிணைக்கும்
வித்தியாசமான
விலங்கு....

இல்லாமல் வாழமுடியாமல்
இருப்பவன் தவிப்பதும்
இதயத்தின் ஆழத்தில்
சொந்தங்களைப் புதைப்பதும்
உறவுகள் கொடுக்கும்
உன்னதத்தின் விளைவுகளே !

திருமணம் எனும் பந்ததத்தில்
திருப்தியான உறவுகள்
திருப்பங்களில் ஒடிவதும்
இதயங்கள் உடைவதும்....

அன்னை தந்தை
அன்பினால் கட்டுண்ட
வேளைகள் ,
வேலியாக உறவுகள்
தாண்டியதும்
வெளியாக புரியாத பொழுதுகள்
புறக்கணித்த உறவுகள் ...

ஒன்றாகப் பிறந்தவர்
ஒருதாயின் உதிரங்கள்
உறவறுக்கும் கத்தியாய்
உதவாத சொத்துக்கள்
பொருளுக்கு முன்னாலே
பொசுங்குமந்த உறவுகள்
பொல்லாத வேளைகள்
பொருந்தாத சொந்தங்கள் ....

கண்களினால் கண்டதும்
காதல் வயப்பட்டதும்
கற்றதந்த உறவுதான்
கட்டிவிடும் உயிர்களை !

கணநேரக் கலத்தலால்
கருத்தரித்த காதலது
கண்ணிமைக்கும் நேரத்துள்
கனவாகக் கலைந்திடும்
அதுகூட உறவுதான்
அதுவும் ஒரு பிணைப்புத்தான் ...

கட்டையிலே உடல்
கனலோடு கலக்குமட்டும்
கலந்திருக்கும் உறவொன்று
கருத்துரைப்பேன் கேளீரே..

நம்மை
நாமறிந்து
நானென்ற
நினைவகற்றி
உண்மைப் பொழுதொன்றில்
உணர்வுகளோடு ஒன்றிவாழுகின்ற
பொழுதொன்றேசாம்பலாக
மாறுமட்டும் கூடவரும்
உறவென்பேன்

1 comment:

N Suresh said...

அன்பிற்கினிய அண்ணா

மிக நல்ல கவிதை. உங்களின் கவிதைக்கு பரிசு கிடைக்க
தாழ்மையாய் வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்

பாசமுடன்
தம்பி
என் சுரேஷ் சென்னை