Sunday, May 12, 2024

தமிழாகப் புகைந்திருப்பேன்

எத்தனையோ எழுதுகிறேன்
ஏதேதோ மொழிகின்றேன்
அத்தனையும் எதற்காக
மொத்தமாக எனக்காக

சித்தமெல்லாம் தமிழாக
சத்தமில்லா வரைஞனாக
புதுமையான பித்தனாக
புதுக்கவிதை புனைகின்றேன்

எழுத்தென்னும் வனத்தினிலே
எப்போதும் தொலைவதுண்டு
எனைக்காக்கும் கவசமாக
எழுத்துக்களே திகழ்வதுண்டு

எழுதாத பொழுதுகளெல்லாம்
விடியாத இரவுகளெனக்கு
முடியாத கவிதைகளென்றும்
வடியாத துயரக்கணங்கள்

உள்ளத்திலே பொங்குகின்ற
வெள்ளமாய்த் தமிழேகும்
கனமான மழைபோல
கரைந்தோடும் தமிழாக

பள்ளியிலே கற்றதல்ல
பட்டமேதும் பெற்றதல்ல
கலைவாணி ஆணையிட
கரைபுரளும் கவிதைகளாய்

பெற்றோர்கள் முன்னிலையில்
பெறவில்லை இப்பேறு
அற்றைநாள் அனுபவங்கள்
ஆறாகப் பெருகுதிப்போ

தமிழாகிப் புனைகின்றேன்
தமிழோடு நனைகின்றேன்
தணலாகிப் போகையிலே
தமிழாகப் புகைந்திருப்பேன்

சக்தி சக்திதாசன்