Sunday, July 26, 2026

திட்டு திட்டாய் கருமேகங்கள்

திட்டு திட்டாய் கருமேகங்கள்
தீட்டி வைத்தது போல் சித்திரமாய்
பூட்டி வைத்த நினைவுகள் நெஞ்சில்
மூட்டி விட்டதோ கனல் சுவாலைகள்.

மொட்டு மொட்டாய் மலர்ந்த ஆசை
முத்தாய் மின்னிடும் புன்னகையாய்
கட்டு கட்டாய் குவிந்த ஏக்கம்
கண்ணீர் துளியில் கரைந்ததம்மா.

தொட்டு தொட்டாய் தென்றல் வந்து
தோளில் சாய்ந்தது தோழமையாய்
விட்டு விட்டாய் என்ற வலியை
விண்ணும் கேட்கும் மௌனமாய்.

துள்ளித் துள்ளிப் பாயும் நதி
தூரம் சென்றிடும் காவியமாய்
உள்ளம் உள்ளம் தேடும் பாதை
ஒளியை ஏந்திடும் பயணமாய்.

பட்டு பட்டாய் நிலவொளிகள்
பாதை முழுவதும் பரவியதே
சிட்டு சிட்டாய் பாடும் பறவை
சிந்தை முழுவதும் சிறகடித்தே.

வண்ணம் வண்ணம் பூத்த சோலை
வாசம் வீசிய வசந்தமாய்
எண்ணம் எண்ணம் மாறினாலும்
ஏக்கம் மாறாத உறவினிலே.

துளி துளியாய் பெய்த மழைகள்
துயரைத் துடைத்தது தாயன்பாய்
வழி வழியாய் வந்த சோதனை
வாழ்வை செதுக்கிய சிற்பமாய்.

நித்தம் நித்தம் நினைவின் வாசல்
நிழல்கள் தீட்டிடும் ஓவியமாய்
மொத்தம் மொத்தம் வாழ்ந்த காலம்
மூச்சில் வாழ்ந்திடும் காவியமாய்.

சக்தி சக்திதாசன்