Wednesday, July 22, 2026

கனவுகளின் வழி ஓடி

கனவுகளின் வழி ஓடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி

தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று?

தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே

கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்

சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிடக்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல

சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

தேடி அலையும் மனத்தின் உள்ளே
தேங்கிக் கிடக்கும் மௌன மொழிகள்
கூடி மலரும் சிந்தை தோறும்
கோடி விளக்கும் உண்மை ஒளிகள்

வீழ்ந்து எழுவது வாழ்வின் நெறியே
விரைந்து செல்வது காலத்தின் இயல்பே
தாழ்ந்து நிற்பவர் உயர்ந்து விளங்கும்
தாங்கும் பண்பே மனிதன் செல்வம்

விதைத்த எண்ணம் வேராய் மாறி
விழித்த உணர்வு மரமாய் ஓங்கி
கனிந்த செயலின் கனிகள் தந்து
காலம் எழுதும் வாழ்க்கைக் காவியம்

புயல்கள் வந்தும் முறியாத கிளைகள்
பொறுமை கொண்ட மரத்தின் வலிமை
துயர்கள் வந்தும் சிதையாத உள்ளம்
தூய நம்பிக்கையின் மறுபிறப்பே

இறைவன் தந்த இவ்வாழ்வெனும்
இனிய வாய்ப்பின் அருமை உணர்ந்து
பிறர்க்கும் ஒளியாய் தன்னை எரித்து
பிறந்து வாழ்வதே பிறவிப் பயனே.

சக்தி சக்திதாசன்