Friday, July 10, 2026

நான் எழுதுவது கவிதை அல்ல

எதைத் தேடுகிறாய் தோழா?
​உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா?

ஓ! அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா!

​கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?

​நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை.....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே...

உண்மையின் வெப்பத்தை
உள்ளத்தில் தாங்கிக் கொண்டே
இன்னும் எத்தனை காலம்
எவ்வளவு தூரம் ?

ரயில் பயணத்திலே
இறங்கும் இடத்தை அறிவோம்...
வாழ்க்கை பயணத்தில் ......

நாம் எனும் இந்த
சுயகெளரவச் சுமையை
சுமந்து கொண்டே 
நடக்கிறோமே ......
எம்மை நாமே சுயமாக
பரிசோதிக்கும் பக்குவத்தை
அடைந்திருக்கிறோமா ?

எதைத் தேடுகிறாய் தோழா?
​உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா?

எந்த முகமோ உனக்கென
நீ அணிந்திருக்கும்
மூடுபனித் தோற்றங்கள் எல்லாம்
ஒருநாள் கரைந்துவிடுமே தோழா...

கண்ணாடி முன் நின்றபோது கூட
கண்களைத் தவிர்க்கும் அந்த
சிறு நடுக்கம் உனக்குத் தெரியாதோ?
அது தான் உன் உள்ளத்தின்
மௌனக் குரல் அல்லவா?

மறைத்த காயங்கள் எல்லாம்
மருந்து கேட்காமல்
மனதை மெல்லக் கடிக்கையில்...
மௌனமாகத் தாங்குவது தான்
துணிச்சலா தோழா?

வெளிச்சத்தைத் தேடும் கண்கள்
உள்ளிருள் பார்க்கத் தயங்கினால்
எந்த ஒளி உன்னை மீட்கும்?

நிழல்களோடு நட்பு வைத்து
நிஜங்களைத் தள்ளி வைத்தால்
நீ தேடும் அமைதி
எந்த வழியில் வரும் தோழா?

ஒரு நாள்
அனைத்து சத்தங்களும் நின்றபோது
உன் உள்ளத்தின் சத்தியம் மட்டும்
உன்னை எதிர்கொள்ளும்...

அந்நேரத்தில்
தப்பிக்க இடமில்லை தோழா—
தன்னை ஏற்கும் தைரியம் மட்டும் தான்
உனக்கான விடுதலை...

சக்தி சக்திதாசன்