விழிக்கும் ஒவ்வொரு காலையும்
வியப்புமிகு புதிதான உணர்வுகள்
விந்தையிலும் விந்தை இவ்வாழ்வு
விடையில்லா வினாக்களே சுற்றிலும்
நொடிகளின் நடுவே நின்று பார்க்கும் போது
நோக்கமின்றி ஓடும் நாட்களின் நிழல்கள்
நொடித்துளி வாழ்வின் நுண்மம் புரிந்திட
நெஞ்சமெங்கும் நிம்மதியின் நிசப்தம் மலர்கிறது
காற்றின் குரலில் கூட கேள்விகள் உண்டு
காணாத பதில்களைத் தேடும் மனமென்னும் பறவை
காலத்தின் கரையில் அமர்ந்து கொண்டே
காணாத கரைகளைக் கனவாக வரைகிறது
அலைபாயும் எண்ணங்கள் அலைமோதும் கடல்
அதன் அடியில் அமைதியின் ஆழம் மறைந்து
அந்த ஆழத்தைத் தொட்டவர்க்கே தெரியும்
அமைதியும் அலைவும் ஒரே இசை என்பதை
பாதைகள் பல இருந்தும் பயணம் ஒன்று
பயணத்தின் பொருள் மட்டும் மாறிக்கொண்டே
பார்வை மாறும் பொழுதே உலகம் மாறும்
பார்வையே பயணத்தின் உண்மைப் பக்கங்கள்
உணர்வுகள் எல்லாம் உள் உலகின் மொழி
உருவமில்லா உண்மைகளை உரைக்கின்றன
உணர்ந்தவர்க்கே தெரியும் அந்த மொழியின்
உரையாடல் எவ்வளவு ஆழம் கொண்டது என்று
நினைவுகள் நிழலென நம்மைத் தொடரும்
நிழலின் வடிவம் நம்மால் தீர்மானிக்கப்படும்
நேற்றைத் தாங்கி நிற்கும் நிழல் கூட
நாளைய ஒளிக்காகவே உருவாகிறது
வாழ்க்கை ஒரு வினா, பதில் ஒரு பயணம்
பயணமே பதிலென உணர்ந்தவனுக்கு
வினாவோ பதிலோ வேறில்லை
விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விளக்கம்
சக்தி சக்திதாசன்
