Sunday, December 14, 2025

தமிழோடும் பாதையிலே.......

தமிழோடும் பாதையிலே தவழ்ந்தோடும் குழந்தை நான் தமிழ்பாடும் தாலாட்டில் தனை மறக்கும் சேய் நான்

கவிதைகளால் தொட்டிலிட்டு கண்மூடி அயர்ந்திருப்பேன் கண்விழித்துப் பார்த்து விட்டால் கண்ணீரில் மிதந்திருப்பேன்

பாடலோசை மெல்லிசையில் பாய்ந்தோடும் புன்னகை நான்
பழமொழியின் பாசத்தில் பசுமை காணும் பிள்ளை நான்

சொற்களாலே சோலைகளை சுருங்கவைக்கும் சிந்தை நான்
சூரியனாய் சுடர்விடும் சுவையுணர்ந்த சிரிப்பு நான்

தமிழரசின் முத்தமெனத் 
தாலாட்டும் தாய் மொழி நான்
தனிமையில் தேனாகித் தழுவும் நெஞ்சக் கவி நான்

இசையோசை ஏந்தியெழும் இளமையின் இசை நான்
இனியவெண் தாமரையின் 
இதழில் விழும் மழை நான்

பாரதியின் கனவுகளால் 
பரவசமாய் பாயும் நான்
பாடல்களில் பரிசளிக்கும் பாசத்தின் பிள்ளை நான்

நேர்மையெனும் நெஞ்சமொடு நேசமெனும் நிழல் நான்
நெஞ்சழுத்தம் தாங்கியெழும் நம்பிக்கையின் நதி நான்

சக்தி சக்திதாசன்