Thursday, December 18, 2025

நேசிப்போ ? வாசிப்போ ?

வாசிக்கப்படுவதால் நேசிக்கப்டுவேனோ ?
நேசிக்கப்படுவதால் வாசிக்கப்படுகிறேனோ
யோசிக்காமல் எழுதிக்கொண்டே
யாசிக்கிறேன் பிரபஞ்ச சக்தியை

பஞ்சுமலர் தோட்டத்தில்
பிறப்பெடுத்த காரணத்தால்
முட்கள் மீது நடல்கவில்லையெனும்
முட்டாளின் வாதமல்ல 
கடந்துவந்த்ச் பாதைகளில்
நடந்தபோது உணர்ந்த பல
வலிகளும், ஆனந்தமும் தந்த
அனுபவங்களின் சேர்க்கையே

பெரிதாய் எதையும் சாதித்த
அரியதோர் பிறப்பல்ல
சிறிதாய் தோன்றும் உணர்வுகள்
அறிவாய் நெஞ்சில் தோன்றுவதால்
பறித்த அனுபவப் பூக்களினால்
உறுதியாய் கட்டிடும் மாலையிது

உள்ளத்தின் ஏதோவொரு மூலையில்
அள்ள அள்ள குறையாமல் ஊறும்
வெள்ளமெனத் தமிழ் பாய்ந்திட
நல்ல பல உள்ளங்களோடு 
மெல்ல நானும் பகிர்ந்திடும் வேளை
சொல்ல முடியா சொற்கள் கூட்டி
வெல்ல நினைக்கும் இலக்கிய யுத்தம்

மூச்சிருக்கும் வேளை வரை
வீச்சிருக்கும் என் கவிதை வாள்
மிச்சமில்லா வகையினில் வரிகளின்
சொச்சங்களை கூட்டியாக்கும் கவிதை
எச்சங்கள் தானிங்கு எம்பிடுமோ ?
நிச்சயமாய் பாடுமொரு உண்மை

தினந்தோறும் எழுதுகிறேன்
மனந்தோறும் தட்டும் எனும் நினைத்து
நிறைந்தோடும் வாழ்வுப் பயணம்
அறந்தாங்கும் வழியேகி என்றும்
சிறந்தோங்கி வாழ்க என வாழ்த்தி
சுரந்திங்கு வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Tuesday, December 16, 2025

விழிக்கும் ஒவ்வொரு காலையும் ......

விழிக்கும் ஒவ்வொரு காலையும்
வியப்புமிகு புதிதான உணர்வுகள்
விந்தையிலும் விந்தை இவ்வாழ்வு
விடையில்லா வினாக்களே சுற்றிலும்


நொடிகளின் நடுவே நின்று பார்க்கும் போது
நோக்கமின்றி ஓடும் நாட்களின் நிழல்கள்
நொடித்துளி வாழ்வின் நுண்மம் புரிந்திட
நெஞ்சமெங்கும் நிம்மதியின் நிசப்தம் மலர்கிறது

காற்றின் குரலில் கூட கேள்விகள் உண்டு
காணாத பதில்களைத் தேடும் மனமென்னும் பறவை
காலத்தின் கரையில் அமர்ந்து கொண்டே
காணாத கரைகளைக் கனவாக வரைகிறது

அலைபாயும் எண்ணங்கள் அலைமோதும் கடல்
அதன் அடியில் அமைதியின் ஆழம் மறைந்து
அந்த ஆழத்தைத் தொட்டவர்க்கே தெரியும்
அமைதியும் அலைவும் ஒரே இசை என்பதை

பாதைகள் பல இருந்தும் பயணம் ஒன்று
பயணத்தின் பொருள் மட்டும் மாறிக்கொண்டே
பார்வை மாறும் பொழுதே உலகம் மாறும்
பார்வையே பயணத்தின் உண்மைப் பக்கங்கள்

உணர்வுகள் எல்லாம் உள் உலகின் மொழி
உருவமில்லா உண்மைகளை உரைக்கின்றன
உணர்ந்தவர்க்கே தெரியும் அந்த மொழியின்
உரையாடல் எவ்வளவு ஆழம் கொண்டது என்று

நினைவுகள் நிழலென நம்மைத் தொடரும்
நிழலின் வடிவம் நம்மால் தீர்மானிக்கப்படும்
நேற்றைத் தாங்கி நிற்கும் நிழல் கூட
நாளைய ஒளிக்காகவே உருவாகிறது

வாழ்க்கை ஒரு வினா, பதில் ஒரு பயணம்
பயணமே பதிலென உணர்ந்தவனுக்கு
வினாவோ பதிலோ வேறில்லை 
விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விளக்கம்

சக்தி சக்திதாசன்

Sunday, December 14, 2025

தமிழோடும் பாதையிலே.......

தமிழோடும் பாதையிலே தவழ்ந்தோடும் குழந்தை நான் தமிழ்பாடும் தாலாட்டில் தனை மறக்கும் சேய் நான்

கவிதைகளால் தொட்டிலிட்டு கண்மூடி அயர்ந்திருப்பேன் கண்விழித்துப் பார்த்து விட்டால் கண்ணீரில் மிதந்திருப்பேன்

பாடலோசை மெல்லிசையில் பாய்ந்தோடும் புன்னகை நான்
பழமொழியின் பாசத்தில் பசுமை காணும் பிள்ளை நான்

சொற்களாலே சோலைகளை சுருங்கவைக்கும் சிந்தை நான்
சூரியனாய் சுடர்விடும் சுவையுணர்ந்த சிரிப்பு நான்

தமிழரசின் முத்தமெனத் 
தாலாட்டும் தாய் மொழி நான்
தனிமையில் தேனாகித் தழுவும் நெஞ்சக் கவி நான்

இசையோசை ஏந்தியெழும் இளமையின் இசை நான்
இனியவெண் தாமரையின் 
இதழில் விழும் மழை நான்

பாரதியின் கனவுகளால் 
பரவசமாய் பாயும் நான்
பாடல்களில் பரிசளிக்கும் பாசத்தின் பிள்ளை நான்

நேர்மையெனும் நெஞ்சமொடு நேசமெனும் நிழல் நான்
நெஞ்சழுத்தம் தாங்கியெழும் நம்பிக்கையின் நதி நான்

சக்தி சக்திதாசன்

Saturday, December 13, 2025

நினைவாக நிற்பதே நிறைவு...

திசைகள் தெரியாமல்
பறக்கும் இலைகள்
அறிவதில்லை தாம்
சருகாகி புதைவது
எங்கே என்பதை...
விழுந்த இடத்தில்
விதைக்கப்பட்ட களைக்கோ
அன்றி செடிக்கோ
உரமாகிப் போவதே முடிவு .......

எங்கோ பிறக்கிறோம்
எங்கேயோ வளர்கிறோம்
அங்கேதான் வாழ்கிறோமா ?
அங்கேதான் மடிகிறோமா ?
ஆறறிவு கொண்டேமெனும்
பெயரில் காலமெனும் காற்றில்
நாம் கூட காய்ந்த இலைகளாய்
சருகாகிக் சரிவதெங்கென்று
சத்தியமாய்த் தெரிவதில்லை ....

தெரியாத பாதையில்
நடக்கும் நிழல்கள்
தெரிந்திடாது தாம்
எந்தக் கல்லில் நின்று
இடறுவார்கள் என்று...
நடந்த தடங்களில்
நாமே விதைத்த
நம்பிக்கையோ
அல்லது பயமோ
வழிகாட்டும் ஒளியே முடிவு...

காற்றின் இசையில்
தொலைந்த பறவைகள்
கண்டிடாது தாம்
எந்த வானில் தங்கும்
இரவை என்பதை...
பறந்த தூரத்தில்
பதிந்த நினைவுகள்
சுமையோ
அல்லது சிறகோ
பயணத்தை முடிப்பதே விதி...

நீரோட்டத்தின் வேகத்தில்
மிதக்கும் துளிகள்
அறியாது தாம்
எந்தக் கரையில்
சேர்ந்திடுவோம் என்று...
சேர்ந்த தருணங்கள்
சிலவே நம் சொத்து
மீதியெல்லாம் அறியாத
காலத்தின் கையில்
கரைந்துவிடும் உண்மை...

மாறும் பருவத்தில்
காயும் மலர்கள்
கேட்காது தாம்
எந்த மண்ணில்
மறுபிறப்பாய் மலர்வோமென்று 
வாடும் வாசனையில்
வாழ்க்கை எழுதும்
சிறு வரிகளோ
அல்லது சுவடோ
நினைவாக நிற்பதே நிறைவு...

சக்தி சக்திதாசன்