Monday, July 22, 2024

இதயத்தின் துடிப்பும் கவிதையே

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதை தானிது

முளைத்த உணர்ச்சிப் பெருக்கு
முகிழ்த்தே நெஞ்சில் வெடித்து
முழுதாய் மலர்ந்தது என்று
தமிழாய் விரிந்தது இன்று

களைத்த இதயம் கனக்கையில்
கனிந்திடும் தமிழே தாங்குது
கரும்பாய் இனிக்கும் தமிழிது
கன்னித் தமிழின் வனப்பிது

அன்னைத் தமிழின் மடியில்
அன்புத் தமிழாய்த் தவழ்ந்து
இன்பத் தமிழாய் வளர்ந்து
இன்றும் தமிழால் மகிழ்கிறேன்

கதிரவன் கதிராய்ப் படர்ந்து
காலைப் பொழுதாய் விடிந்து
கவிதைப் பொருளாய் மலர்ந்து
கலப்பது எந்தன் தமிழென்பேன்

கருத்தாய்த். திரளும் மேகங்களென
கவிதை மழையாய்ப் பொழிந்திட
காற்றினில் பறந்திடும் சருகென
கணத்தில் மறைவேன் தமிழினுள்

காதலில் பிறந்த கவித்துவம்
கற்றதோ வாழ்வெனும் அனுபவம்
கலந்தே இன்றென்னை இயக்குது
காலையும் மாலையும் இனிக்குது

விழுந்தேன் தமிழன்னை மடியில்
வலர்ந்தேன்  வாலிபத் திமிரினில்
உணர்ந்தேன் வாழ்வெனும் நாடகம்
உண்மையே உலகின் ஆன்மீகம்

காலைகள் புலர்வதும் கவிதையில்
மாலைகள் புதைவதும் கவிதையில்
இடையினில் வாழ்வதும் கவிதையாய்
இதயத்தின் துடிப்பும் கவிதையே


சக்தி சக்திதாசன்

Sunday, July 21, 2024

மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

கனவுகளின் வழி ஒடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி

தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று 

தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே

கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்

சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிட க்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல

என்னுள் தேங்கிய உணர்வுகள் தாக்கும்
என்னை எனக்கே காட்டும் நோக்கம்
எனக்காய் காலம் புகட்டிய பாடங்கள்
என்னை நானாய் செதுக்கிய உளிகள்

கண்கள் கண்டவை ஆயிரம் காட்சிகள்
காதில் விழுந்தவை அதுவொரு கோடி
கருத்தில் பதிந்தவை சிற்சில மட்டுமே
கவிதையாய்ப் பகர்வது எத்தனையோ

சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

சக்தி சக்திதாசன்

Tuesday, July 09, 2024

எதைத் தேடுகிறாய் தோழா?

எதைத் தேடுகிறாய் தோழா?

உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா ?
ஓ ! 
அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா !

கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?

நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை .....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே உணர்வுகளை ........

அதிர்வுகளின் அழங்களை
அறிய முடியாமல் கவ்விக்கொண்ட‌
அறியாமை எனும் போர்வை
அரித்துக் கொண்டே இதயத்தை .....
எத்தனை காலம்தான் தோழா ?

எதைத் தேடுகிறாய் தோழா?

நிழலுக்குள் புதைந்து போன
நிஜங்களின் வரலாறையா ?
உண்மைகளை விற்று விட்டு
பொய்களை வாங்கும்
சமுதாயச் சந்தையின் 
வியாபாரிகளையா சொல் !

எதைத் தேடுகிறாய் தோழா ?

இதோ விடிகிறது ! இதோ விடிகிறது !
என்று இரவுக்குள் பூட்டி வைத்து
அழகு பார்க்கும் வித்தைக்காரரையா ?
இல்லை , பசப்பு வார்த்தைகளை நம்பி
பகலையே காணாமல் புலம்பும்
படித்த முட்டாள்களையா ?

இல்லாத புதையலொன்றின்
வரைபடத்தைக் காட்டிக் காட்டி
இருக்கின்ற செல்வத்தைச் சுருட்டும்
குருட்டுப் புத்திக்காரரின்
வரட்டு ஜம்பத்தையா ?
சொல்லிவிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

இன்றைய உலகம் விரைவில்
விழிக்கவில்லை யெனில்
நாளைய உலகமென்று ஒன்றைக்
கனவில் கூட நினைக்க முடியாது
சூழலை அழித்து தற்காலிக
சுகத்தினை அனுபவிப்போர்
சாதிக்கப் போவதெல்லாம்
சூனியமான எதிர்கால மொன்றே!

தேடலின் தேவையை மாற்றி
இரவின் கருமைக்குள் இருந்து
வெளிச்சத்தை நோக்கி மக்களை
விழிக்கப் பண்ணும் நேர்மறை
வழிகளைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா ?

தலைமுறை தலைமுறையாய்
தம் தலைமுறை வாழ்ந்திட எண்ணி
தரணியின் வளத்தினை அழிக்கும்
தன்னல மனிதரின் மனங்களில்
தம்மைத் தாமே அறிந்திடும் கலையை
புரிந்திட வைக்கும் செயல்களின்
பாதையைத் தேடிடு தோழா !

பிரபஞ்சம் எமக்கு ஈந்தவையெல்லாம்
அனைவரும் வாழ்ந்திட வழிகளே !
இயற்கையும் , சூழலும் செல்வங்களென
இதயத்தில் அனைவரும் கொண்டிட
இகத்தினில் நீ ஆற்ற வேண்டிய
பணிகளின் வகைகளைத் தேடு !

வறுமையில் உழன்றிடும் மக்களின்
வாழ்வினை மாற்றி அனைவரும்
கல்வியைப் பெற்று உணர்ந்திட்டால்
மட்டுமே நாளைய உலகம்
நன்றாய் வாழ்ந்திடும் என்பதை
நானிலம் முழுவதும் முழங்கிடும்
வழியினைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

அன்பெனும் பாதையில் உண்மை
ஆன்மீக வாழ்வின் தேவையை
மதங்களைக் கடந்தவொரு
மனங்களின் அடிப்படையில்
வளர்த்திட்டு உண்மை மெய்ஞானத்தைக்
காட்டிடும் விஞ்ஞானத்தைப் போதிக்க
அஞ்சாத மனத்தினை அடைந்திடும்
மார்க்கத்தைத் தேடிடு தோழா !

இன்னும் .  .  .  .

எதைத் தேடுகிறாய் தோழா ?

 
சக்தி சக்திதாசன்

Sunday, July 07, 2024

ரசிக்கக் கற்றிடுவோம்

பொல்லாத உலகமிது
செல்லாத பாதைகள் பல
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிதம்நிதம் எத்தனையோ !
நெஞ்சத்தின் உணர்வுகளைக்
கொஞ்சமாய்க் கிள்ளிப் பார்க்கும்

வனப்புமிகு வஞ்சங்கள்
வியப்புமிகு வழிகளில்
விதம்விதமாய் விளையாடி
விவேகத்தைச் சோதிக்கும்
விரித்துவைக்கும் வலையினில்
விழுத்திவிட முயற்சிக்கும்

சொந்தத்தின் பந்தங்கள்
சொக்கவைத்துச் சதிராடும்
முந்தைகளின் எச்சங்கள்
முந்தியெம்முள் கொந்தளிக்கும்
சந்தையிந்தச் சமுதாயம்
சத்தமின்றிச் சாய்த்துவிடும்

உண்மைகளைத் தராசிலிட்டு
உருவாக்கும் வியாபாரம்
உரைகல்லில் உரசிப் பார்த்து
உள்ளங்களை ஏலமிடும்
உலகமிதன் மையத்தில்
உள்ளதெல்லாம் பேராசை

இத்தனையும் பார்த்ததினால்
அத்தனைகளின் அனுபவங்களால்
உணர்ச்சிகளை நிறுத்திவைத்து
உள்ளத்தை அலசுகிறேன்
காட்சிகளாய் ரசித்தபடி
சாட்சியாக மாறிவிட்டேன்

சிந்தனைக் குதிரையினை
வேகமாகத் தட்டிவிட்டு
வெளிப்பயணம் நிறுத்தி
உள்முகமாய் பயணிக்கிறேன்
என் மனதின் அழுக்குகளை
ஒவ்வொன்றாய்க் களைகின்றேன்

உலகென்று தனியான
இடமென்று எதுவுமில்லை
உடலுமல்ல உள்ளமுமல்ல
உள்ளதெல்லாம் ஆன்மாவே !
உணர்ந்து கொள்ள ஆரம்பித்தால்
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்

எமைச்சுற்றி எதிர்மறைகள்
ஏனதனை ஊக்குவிக்குறோம்
நேர்மறையாய் சிந்தித்தால்
நெஞ்சத்திலே அமைதி வரும்
நடப்பவைகள் அத்தனையும்
நலமாகவே நடக்கின்றது

எதிர்பார்ப்பைக் குறைத்து
ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை
எமக்குள்ளே வளர்த்திட்டால்
எவ்வழியிலும் எமக்கு நன்மையே
தடைக்கற்கள் ஒவ்வொன்றாய்
படிக்கற்களாய் எம் உயர்த்தும்

உண்மையொன்று புரிகிறது
உள்ளமெல்லாம் விரிகிறது
அனைவருள்ளும் சஞ்சரிக்கும்
ஆன்மா அனைத்தும் ஒன்றுதானே
பிரித்து நிற்கும் பேதங்களை
துரத்தும் வலிமை எமக்குண்டு

எம்மைத் தேடி பயணமொன்றை
எமக்குள் நாமே நிகழ்த்தும் போது
எம்மைச்சுற்றி நடப்பவை அனைத்தின்
சூட்சுமங்கள் புரிந்திடும் எளிதில்
நாம் கேட்டு நாம் பெற்ற வாழ்விதனை
நாம் ரசிக்கக் கற்றிடுவோம்

சக்தி சக்திதாசன்