Monday, August 19, 2024

இக்காலைக் கவிதையிது

எழுத்தென்னும் வேள்வியில்
எனக்குள்ளே கேள்விகள்
எனைத்தேடும் வழிகளில்
என்பயணம் மொழியோடு

எதையெதையோ எழுதிடும்
என்னுள்ளத்தின் ஓசைகள்
எப்போதும் இசைத்திடுமோ
என்னுடைய ராகங்கள் ?

மூடியிருக்கும் மொட்டுக்குள்
முகிழ்க்காத மலர்களாய்
மனமுட்டும் கவிதைகள்
மிதந்திடும் மொழியாற்றில்

தமிழ்மண்ணில் விளைந்து
தமிழூறி வளர்ந்தவன்
தமிழன்னைத் தாலாட்டில்
தனையின்று இழந்தவன்

புகழ்தேடிப் போகாமல்
மகிழ்வொன்றைத் தேடி
திகழ்கின்ற வாழ்வினில்
தவழ்கின்ற உள்ளம்

கனவுகளின் மையெடுத்து
நினைவுகளில் வரிதொடுத்து
புனைகின்ற கவிதைகளில்
நனைகின்ற பொழுதுகளிவை

சொல்லோடு பொருளூட்டி
சொல்லுகின்ற வரிகளுக்குள்
சொல்லாத பொழுதுகளும்
சொல்தேடி அலையுமிங்கு

அனுபவத்தின் ஆழத்தில்
ஆழ்ந்தெடுத்த முத்துக்கள்
அங்கொன்று இங்கொன்றாய்
அடிதேடி அலைவதுண்டு

இதுபோதும் இதுபோதும்
இதயமெங்கும் புதுவெள்ளம்
இரைந்தோடும் வரிகளாய்
இக்காலைக் கவிதையிது

சக்தி சக்திதாசன்

Sunday, August 18, 2024

நாமனைவரும் ஒருதாய் மக்களே !

இன்று போகட்டும்
நாளை விடிந்திடும் என்றே
ஆயிரம் கனவுகளோடு
வாழ்வுடன் போராடும்
நலிவுற்ற தோழா !

நீ தேடும் நாளைகள்
நினைக்கும் தூரத்தில் இல்லை
அதைப் பூட்டி  வைத்து
அழகு பார்க்கும், புண்ணியர்கள்
நிறைந்த பூமியடா !

உனது நாளை விடிவதற்கு
உலகம் கொஞ்சம் விழிக்க வேண்டும்
உனது உதிரத்தை
உறிஞ்சி தம்மை வளர்க்கும்
உனது உழைப்பில்
தமது மாளிகைகளை அமைத்து
மகிழும் மாந்தர்.மனதின்
உணர்ச்சிகள் உறுத்தும் வரை
உனது விழிநீர் காயப் போவதில்லை !

உருளும்.இந்தப் பூமிப்பந்து
உனக்கென்றும் எனக்கென்றும்
உருளும் திசையை மாற்றுவதில்லை
உள்ளே உருளும் மானிடர்.மட்டும்
உயர்த்திப்.பிடிக்கும் தன்னலம்
உன்னைத் தாழ்த்தி வைக்கிறது
உனது உள்ளம் விழிப்படையட்டும்
உனது கனவுகளின் மீது
உன் நம்பிக்கைகள்.வலுவடையட்டும்
உன் நாளைகள் நிச்சயம் வெளித்திடும்

கல்வியை உணர்ந்திடு
கற்றிடும் வாழ்வின் அனுபவங்கள்
கற்பிக்கும் நிகரற்ற பாடங்களை
கசடறக் கற்று முன்னேறிடு தோழா !
கடித்துச் சுவைத்து வீசிடும் விதை
கனிவுடன் கூடிய கனிகளை
காலத்தால் ஈயும் விருட்சமாவதில்லையா ?
கைகளில் வலுவும், கால்களில் தெம்பும்
கடைசிவரை கொண்டிட்டால்
காசுனியில் நீ சரித்திரம் ஒன்றைக்
கட்டாயம் படைத்திட முடியும்

விரைந்தே எழுந்திடுவாய் தோழா !
விழிநீரைத் துடைத்திடு காலத்தை
விரயமாக்காமல் புறப்படுவோம்
மாற்றம் நிகழ வேண்டுமானால்
மாற்றமாக நீயே மாறிவிடு என்றார்
சத்தியத்தின் நயகன் காந்தியடிகள்
கைகளைக் கோர்த்துக் கலைந்திடும்
இருளின் காலை வெளிப்பில்
கண்டிடுவோம் ஒரு சுபீட்சமான
எதிர்காலத்தை நம் அனவருக்கும்
ஏன் தெரியுமா என் தோழனே !
நாமனைவரும் ஒருதாய் மக்களே !

சக்தி சக்திதாசன்

Thursday, August 15, 2024

இனித்திடும் வாழ்க்கை

புதிரானதோர் இரவினிலே
புரியாததோர் புதிராக
புரண்ட கணங்களில்
புலர்ந்ததிந்தக் கவிதையே !

எதையிங்கு செய்கிறோம் ?
எவர்க்காகச் செய்கிறோம் ?
எதைக் காக்க இந்த வேடங்கள் ?
எப்போதோ எல்லாம் முடிந்தவை

ஏற்றாலும் இல்லை அதை
ஏற்காவிட்டாலும் அவசரமாய்
உருளும் உலகத்தில் தோன்றும்
நிஜமான நிழல்களே நாம்

கனவோடு ஒரு பாகம் இங்கு
நனவோடு மறுபாகம் வாழ்வில்
விளக்கமுடியா விசித்திரங்கள்
விளயாடும் கோலங்கள் எம்மோடு

வினாக்களின் விடைதேடியே இங்கு
விரயமான பல வீண் பயணங்கள்
வீணான ஜம்பங்களினால் வாழ்வில்
வீணாகிப் போன வாழ்வின் நீளங்கள்

தொடரும் கதையென வாழ்வினில்
தொடக்கி வைக்கும் சொந்தங்கள்
தொலைந்து போகும் காலத்தோடு
தோய்ந்து போகும் உணர்வுகள்

தோற்காத வீரம் எனக் கோஷமிடும்
விதண்டாவத வாதங்கள் ஆயிரம்
விஷப்பரீட்சை வைத்துப் பார்த்தால்
வினாடியில் புலர்ந்திடும் உண்மைகள்

போகும் இடத்தை அறியாமல்
நடக்கும் திசையற்ற பயணங்கள்
போக்கும் வரவும் இல்லாப் பொய்யான
வியாக்கியானங்களின் வித்தியாசங்கள்

முக்கோணத் தோற்றத்தில் காணாத
மூன்றாவது கோணமதன் மாயம்
அதனுள் அடங்கிய வாழ்க்கையின்
அர்த்தமற்ற பல சூத்திரங்கள்

நிலையற்ற வாழ்க்கை இவ்வுலகில்
நிலைகாண வழியிண்டு புவியில்
தன்னுள் தானே பயணிக்கும் 
தன்னிகரற்ற பயணத்தை அறிந்தால்

ஆடுவதும் அடங்குவதும் மாயைகளே
அழியாத உண்மை ஒன்றுண்டு
ஆதிமுதல் அந்தம்வரை எம்முள்
அழியாமல் ஆன்ம சங்கீதமே அது

ஆன்மாவின் இருப்பை உணர்ந்தால்
அதைத்தேடி கண்மூடி பயணித்தால்
ஆனந்தம் வாழ்வினிலே அடைந்திடுவோம்
அனுதினமும் வாழ்க்கை இனித்திடும்

சக்தி சக்திதாசன்