Friday, August 29, 2025

உண்மையைத் தேடி

உண்மையத் தேடியோர்
உண்மைகளின் பயணம்
உயரத்தின் விளிம்பில்
உண்மையின் தூக்கம்

விரும்பியோர் வழியில்
விரும்பாத காட்சிகள்
விருப்பத்தின் வடிவங்கள்
விதம்விதமாய் விழைந்திடும்

முடித்திடும் அவசரமும்
முடிந்திடாத ஆசைகளும்
முழுமையின் புரிதல்கள்
முழுவதுமே புதைந்திடும்

விளைட்டுத் திடலிலே
வகைவகையாய் விளையாட்டு
வருவதும் போவதுமாய்
வாசல்களில் வரிசையில்

முன்னொரு காலத்தின்
பின்னொரு விளைவுகள்
தன்னிரு கண்களுக்குள்
பிணைந்திடும் காட்சிகள்

வாழ்வெனும் திரையினில்
வண்ணத் திரைப்படமாய்
வாழ்ந்திடும் காலங்கள்
வரைந்திடும் காட்சிகள்

விடிந்திடும் பொழுதினில்
மறைந்திடும் நட்சத்திரங்கள்
புரிந்திடும் வேளையில்
உறைந்திடும் உண்மைகள்

சக்தி சக்திதாசன்

விடியலின் வனப்பு

மலர்கின்ற சூரியன் மெல்ல எழுந்தது,  
மழைக்கனிந்த மேகம் வானில் சிரித்தது,  
கிளிகள் கூவும் குரல் இசை போலே,  
காலை நேரம் கனிந்த கவிதைதான் இது.

பசுமை நிலம் புன்னகை பூத்தது,  
பனித்துளி இலைகளில் முத்தமிட்டது,  
காற்றின் இசை காதில் கசிந்தது,  
விடியலின் வண்ணம் மனதில் விழுந்தது.

தென்றல் தழுவும் நெஞ்சம் நிமிர்ந்தது,  
தெற்கில் சூரியன் தீபம் ஏற்றது,  
பறவைகள் பறந்தன பாட்டோடு,  
புதிதாய் பிறந்தது நாளின் தொடக்கம்.

வானம் வெண்மையாக விரிந்தது,  
விடியலின் ஒளி விழியில் நுழைந்தது,  
மனதின் மழை வாடை மறைந்தது,  
மலர்ந்தது வாழ்வின் புதிய பக்கம்.

காலையின் நறுமணம் காற்றில் கலந்தது,  
கனிந்த ஒளியில் கனவு விழித்தது,  
விடியலின் சிரிப்பு உலகை நனைத்தது,  
வாழ்க்கை ஒரு கவிதை என உணர்ந்தது.

சக்தி சக்திதாசன்

Friday, August 22, 2025

அதிசய உலகம் . . . ஏக்கத்தின் அதிர்ச்சி . ..

சின்னச்சிற்பி
சிதறித் தெறிக்கும்
மழைத்துளி
கண்ணப் பறிக்கும்
முத்தாக .. . .

அதிசயித்தேன் . . . .

வர்ணங்கள் பல
வண்ணச் சிறகுகள்
மெல்லப் பறக்கும்
வண்ணத்திப் பூச்சி . . .

அதிசயித்தேன்

சேற்றினில்
செந்தமாரையாய் முகிழ்த்திடும்
கதிரவனின் காதலியாய்
மலரும் 
மலர் கண்டேன்

அதிசயித்தேன்

அம்மா என்றே
அன்பொழுக
அழைத்து ஓடிடும்
பசுக் கன்றினைப்
பார்த்து வியப்பில் . . .

அதிசயித்தேன் . . 

வானமகள்
அந்திமாலையிலே
பொன்னிற ஆடை போர்த்தும்
அழகினைக் கண்டேன்

அதிசயித்தேன். . . .

மலையோடு
உறவாடியந்த முகில்
கொண்ட காதலினால்
பிறந்த ஊற்று
நதியாகி ஓடக் கண்டேன்

அதிசயித்தேன். . ..

பலகோடிச் செலவில்
பகட்டான மாளிகை
பல களிப்பாட்டங்கள்
மிதமிஞ்சி ஊசிப்போய்
வீசும் உணவுக் குவியல் . . .

அதிசயித்தேன் . . .

ஓலைக் குடிசைகள்
ஓவென்று கதறும்
பச்சிளங் குழந்தைகள்
பசியோடு வாடும்
பலநூறு பேர்கள்

ஐய்யய்யோ . . . .

அதிர்ந்தே போனேன். . . .


சக்தி சக்திதாசன்