இதயத்தின் ஓரத்தில்
ஏதோ ஒரு சங்கீதம்
ஏதோவொரு பாட்டு அதற்கு
எவரோ தந்த ராகம்
சொல்லாத சொற்களுக்குள்
சுகமான தத்துவங்கள்
என்மன வெளிச்சத்துக்கு
நானே இட்டுக்கொண்ட திரைகள்
மூடிக் கொண்ட காரணத்தால்
முடியாமல் போன முக்கோணம்
காலம் என்னும் படகினிலே
கரைதேடும்.பயணமொன்றில்
கற்றுக்.கொண்ட பாடங்களில்
சற்றும் குன்றா ஞான விளக்கங்கள்
தொட்டுச் சென்ற கணங்களுக்குள்
தொடமுடியா கனவுகள்
விட்டுப்போன நினைவுகளை
விலக்க முடியா பிணைப்புகள்
விளங்கிக் கொண்ட பொழுதினில்
விந்தையான உணர்வுகள்
நானே எழுதி நானே நடிக்குமொரு
நாடகமே வாழ்க்கையெனும்
நிஜத்தினை புரிந்து கொள்ள
நீளமான பயணமாய் நெடுந்தூரம்
பாய்மரத்தைக் கட்டி விட்டேன்
காற்றடிக்கும் திசையறியாமல்
நடுக்கடலில் நங்கூரமிட்டு
வழிதேடும் பயணமொன்றின் பரிதாபம்
சுழலுகின்ற பூமியின் நடுவில்
விழலுக்கிறைத்த நீர் இதுவோ ?
காலையொன்றின் விடிதலுக்குள்
கவிதையொன்று முகிழ்க்கிறது
காததுரம் ஓடிவிட்ட காரணத்தால்
கால்கள் கொஞ்சம் வலிக்கிறதோ ?
முதிர்ந்துபோன உள்ளமொன்றுள்
மூடிவிட்ட மேகங்களாய் ஞாபகங்கள்
பொழிகின்ற மழைநீராய் வரிகளைப்
பொழிந்து தள்ளும் உணர்வுச்சுழல்
அடிநாதம் ஒலிக்குதம்மா என்னுள்ள
ஆன்மாவின் ராகமின்று கேட்பதனால்
சக்தி சக்திதாசன்
