Friday, May 29, 2026

உனக்குள் ஒரு உலகம்

உனக்குள் ஒரு உலகம்
உறங்கிக் கொண்டிருக்கிறது
விழித்துக் கொண்டால் இங்கே
விடியல் பிறக்கும் தம்பி

​கண்களின் முன்னே தெரிவது
கற்சுவரல்ல தம்பி கதவுதான்
மனதில் உறுதி கொண்டு நீ
முயற்சி செய்தால் பாதை தெரியும்

​பாதியில் முடியும் பயணமல்ல
பாரினில் உந்தன் வாழ்க்கை தம்பி
பராரியின் வாழ்க்கையை உயர்த்திட
பாதைகள் நீ வகுத்திடனும்

கண்களில் நீரோடு வாழ்வு தேடி
காத்திருக்கும் தங்கைகள் வாழ்வு
காலத்தோடு மலர்ந்திட நீயும்
காரியங்கள் பல ஆற்றிட வேண்டும்

​பொறுத்திடும் காலம் போய்விட்டது
பொங்கிடும் காலம் புகுந்திட்டது
புனிதமான பணிகளை நீயும்
ஓஉரிந்துணர்வுடன் ஆற்றிட வேண்டும்

​சமத்துவம் என்றொரு வார்த்தை
சரித்திரமாகிட வேண்டுமெனில்
சகோதரர் நீவீர் உண்மையுடன்
சமுதாயம் தன்னை உயர்த்திடனும்

நாட்டினை உயர்த்திட உழைத்திட்ட
நேற்றைய முதியவர் வாழ்ந்திட
இன்றைய இளைஞர் திட்டங்களை
நாளைய மனதுடன் தீட்டிடனும்

​அரசியல் என்பது மக்களுக்காக
மக்கள் வாழ்வது அரசியலுக்காக அல்ல
தலைவர்கள் புரிந்திட்டு நடைமுறையில்
த்ரத்தினை உயர்த்திட முயன்றிடனும்

​உனக்குள் உறங்கும் உலகத்தினை
உணர்வெனும் விசையுடன் உருட்டிடு
உதயம் ஆகிடும் புதிய உலகம்
உரைத்திடு இதையே உறவுகளிடம்

உழைப்பின் வியர்வை துளிகள்
உன்னதம் தரும் விதைகள் தம்பி
உறுதியின் நிலத்தில் விதைத்தால்
உயர்வு நிச்சயம் மலரும் தம்பி

தோல்வி என்றொரு சொல்லை நீ
தோளிலே சுமக்காதே தம்பி
தொடர்ந்த முயற்சியின் ஒளியில்
தொலைந்த கனவுகள் தேடும் தம்பி

அச்சம் எனும் இருள் நீங்கிட
அறிவு தீபம் ஏற்றிடு தம்பி
அருமைமிகு வாழ்வின் பாதை
அதிலே தானாக திறக்கும் தம்பி

ஒற்றுமை என்னும் பலமுடன்
உலகத்தை அணைத்திடு தம்பி
ஒவ்வொரு இதயமும் இணைந்தால்
ஒளிமயமான நாள்கள் பிறக்கும் தம்பி

நம்பிக்கை நெஞ்சில் விதையென
நாள்தோறும் வளர்த்திடு தம்பி
நன்மை நிறைந்த செய்கைகளால்
நாளைய உலகை உருவாக்கு தம்பி

சக்தி சக்திதாசன்