என்னைப் பார்த்து
மெல்லச் சிரித்தது
என்வீட்டு தோட்டத்தில்
ஒற்றை ரோஜா ஒன்று
இயற்கை அன்னை
இரைந்த வனப்புகள்
என்னைச் சுற்றியிங்கு
எததனை கவிதைகள்
மெல்லிய இதழ்களின்
சிகப்பு வர்ணத்தில்
தம்மை மறந்து பாடியபடி
தேனருந்த வரும் தேனீக்கள்
பெருமையுடன் நிமிர்ந்து
தென்றலின் தாலாட்டில்
சுயத்தை ரசித்தபடி
துவண்டிடாத ரோஜா
ஓரிரு தினங்களில்
ஒவ்வொன்றாய் இதழ்கள்
உதிர்ந்திடும் வாழ்க்கையின்
உண்மையை அறிந்தபடி
ஆறறிவு கொண்டவரெனும்
ஆணவம் கொண்டழையும்
மாந்தரெமக்கு செப்பிடும்
மகத்தான கருத்தென்ன ,?
வாழ்ந்து கொண்டே கடக்கும்
வாழும்.கணங்களின் உயிர்ப்பினை
அருந்தி மகிழ முடியாதோர்
அடையமாட்டார் ஆனந்த வாழ்வினை
மாலை வெளிச்சத்தில்
மெதுவாய் மங்கியபடி
நிழலுடன் பேசிக்கொண்டே
நின்றது அந்த ரோஜா
காலையின் பனித்துளியில்
காதலை கற்றதுபோல்
சிறு நடுக்கம் கொண்டே
சிரித்தது அதன் இதழ்கள்
பார்வையால் மட்டுமே
பாடம் புகட்டும் பூவை
பார்க்காத மனிதர்கள்
பாரமாய் வாழ்கின்றார்
உதிர்வும் ஒரு இசைதான்
உயிரின் இறுதி ராகம்
அதை உணர்ந்த மனமே
அமரத்துவம் தொடும்
