Monday, May 25, 2026

நீலவானப் பாதையில்

நீலவானப் பாதையில்
நிற்காமல் பயணிக்கும்
நிலவுமகள் ஊர்கோலம்
நிட்காமிய நிதர்சனம்

சொற்கோர்வை கொண்டிங்கு
மற்றொரு கவிபாடும்
பொற்தருணம் நிகழ்வோடு
சுற்றிடும் காலச்சக்கரம்

என்னுள்ளத் தோட்டத்தில்
எண்ணற்ற மலர்கள்
என்னென்ன வண்ணங்கள்
எவரிட்ட கோலமிது

சிந்தனை வட்டத்துள்
சிதறுகின்ற துளிகளாய்
சிற்பமொன்றின் பிறப்பில்
சிதறுகின்ற துகள்களாய்

வாழ்வெனும் மைதானத்தில்
வித்தியாச விளையாட்டுகள்
வினாத்தாள்கள் வெவ்வேறு
விடையெப்படி ஒன்றாகும் ?

மாயைமூட்ட நிழல்களில்
மறைந்திடும் உண்மைகள்
மனக்கண்ணின் வெளிச்சத்தில்
மலர்ந்திடும் மெய்ப்புகள்

காலத்தின் கரைகளில்
கரைந்திடும் நினைவுகள்
கண்ணீரின் உவர்ப்பிலும்
காதலின் சுவைகள்

அமைதியின் ஆழத்தில்
அலைபாயும் கேள்விகள்
அறிவொளி தீண்டிடில்
அழிந்திடும் மாயைகள்

பிறவியின் பாதையில்
பின்னோக்கி பார்க்கையில்
பிழைகளின் பாடங்கள்
புதியொரு வழிகாட்டி

உயிர்களின் உறவுகளில்
உருகுகின்ற உணர்வுகள்
உலகமெங்கும் ஒன்றாய்
ஒலிக்கின்ற இதயங்கள்

சக்தி சக்திதாசன்