Sunday, May 24, 2026

கண்ணோடு கண் பேசும் தருணம்



கண்ணோடு கண் பேசும் தருணம்
நெஞ்சோடு புது ராகம் இசைக்கும்
நினைவோடு படகேறி ஒரு பயணம்
நிழலாகிப் போனால் துயரம்

விரைந்தோடும் உள்ளத்தில் ஆசை மேகம்
விளையாடும் உணர்வுகள் ஆடுமொரு நடனம்
வரைகின்ற கோலங்கள் அனைத்தும் ஏனோ
விழுகின்ற மழையில் மறையும்

கலைந்தோடும் மேகங்கள் யாவும் மீண்டும்
களைத்தோய்ந்து ஓரிடத்தில் வந்து சேரும்
சிறகொடிந்த பறவை எப்போதும் மீண்டும்
சிறகடித்து பறப்பது உண்டோ ?

மூடி நிற்கும் மேகக்கதவு திறந்தங்கே
மேகக்கூடம் பொழியுமொரு கண்ணீர் வெள்ளம்
கீறி நிற்கும் வானவில்லின் வர்ணஜாலம்
மாறிப்போகும் ஒரே கணத்தில்

சேற்றிலொரு செந்தாமரை மலர்வது போல
நேற்றிலொரு வானத்தில் பொழிந்ததந்த பால்நிலா 
பூத்தவிழி காத்திருக்க இன்றும் தேடுகின்றேன்
போனவிடம் தெரியவில்லை போகட்டும்

மௌனத்தில் மெல்ல விழிக்கும் வார்த்தை
மனதோடு மறைமுகம் பேசும் பாதை
மறைந்தோடும் நொடிகளில் தேடும் நிழல்
மாறாதே நின்றது ஏன் நினைவு

அலைமோதும் இதழ்களில் சிரிப்பு துளி
அறியாமை நெஞ்சத்தில் எழும் ஒரு குழி
அழிந்தோடும் கனவுகள் எங்கோ சென்று
அழகான ஓர் வலியாய் நிற்கும்

தொலைந்தோடும் ஒளியில் தேடும் விழிகள்
தொட்டாலே உடையும் கனவுக் கண்ணாடிகள்
துடித்தோடும் இதயத்தின் ஒலி எல்லாம்
தூரத்தில் ஒலிக்கிறதே ஏன்

காற்றோடும் கலந்துவிடும் மூச்சின் நிழல்
காலத்தின் தடங்களில் மாறும் வழி
காணாத ஓர் உணர்வைத் தழுவ நினைத்தால்
கைகூடாதே நின்றது வாழ்க்கை

பூமியில் விழுந்தாலும் மீண்டும் எழும் மழை
போனதெல்லாம் திரும்பாத ஓர் கதை
புதிதாக பிறக்கின்ற ஒவ்வொரு நொடியும்
புரியாத ஓர் பாடலாய் ஓடும்
ம்

சக்தி சக்திதாசன்