Wednesday, May 20, 2026

தமிழே ! தமிழே !

சின்னச் சின்ன ஆசைகளைத் தேக்கி
சிற்பமொன்று வடித்து வைத்தேன்
சித்திரைப் பூச்சோலை ஒன்றில் தமிழ்
சிந்து ஒன்றைக் கோர்த்து வைத்தேன்

வண்ண மலர்த் தோட்டமொன்றில் முல்லை
வாசம் வீசும் மாலை தொடுப்பது போல்
என்னை வாழவைக்கும் தமிழ்ப் பூவெடுத்து
எழில் கொழிக்கும் மாலை சாத்துகிறேன்

விண்ணை நோக்கி மனம் தாவும் வேளையதில்
விளையாடும் களமொன்றில் தமிழாடும் பொழுது
உணர்வோடு உரசியெங்கும் மகிழ்வூட்டும் போது
உளமெங்கும் சதிராடும் ஆனந்தக் கூத்தென்பேன்

மண்ணில் என்னை தமிழ் மண்ணில் என்னை
மகவாக உதிர்த்த எந்தன் உயர்ந்த அன்னையவள்
முலையூடு பாலூட்டும் போது தமிழ் ஊட்டிய
முன்னைப் பொழுதின் பயன் பின்னே விளையுதோ ?

கண்ணில் காணும் காட்சிகளில் எல்லாம் நான்
காண்பதெல்லாம் தமிழாய் என் வரிகளில் வாழ்வது
தொன்மை வாய்ந்த எந்தன் மொழியின் சிறப்பது
தொடர வேண்டும் உலகில் வாழ்வு முடியும்வரை

சொல்லின் இனிமை சுவைத்திடும் நேரங்களில்
சொர்க்கம் தருவதே தமிழின் ஓசைதான்
உள்ளம் உருகி வழிந்திடும் பாவங்களில்
உயிர்க்கும் உயிராய் திகழ்வது தமிழே தான்

பல்லாண்டு காலம் பசுமையாய் நிற்கும்
பாரம்பரியத்தின் பேரொளி நீயே
என் நெஞ்சின் தாளம் தட்டிடும் ஒவ்வோரு கணமும்
என்றும் ஒலிக்கின்ற தேனிசை நீயே

சக்தி சக்திதாசன்