Tuesday, May 19, 2026

மௌனத்தில் பிறக்கும்மொழியற்ற சொற்களெல்லாம்

நேற்றைய நினைவுகள்
காற்றாக மறையவில்லை
மாறாக
நீறு பூத்த நெருப்பாக
நெஞ்சினிலே மறைந்திருந்து
தகிக்குதன்றோ

​காலமகள் அன்றெமக்கு
கணக்காக பூட்டிய
நட்பெனும் விலங்கு
அடைத்தது சிறையல்ல
அன்பெனும் பாசவலை

​நீலமகள் ஆழியிலே
நிற்காது அலைகளவை
நெஞ்சமதில் அதுபோல
நீங்காது எம்மினிய உரவு

​வருடங்களின் தூரிகையினால்
வரைந்தது நரைமுடிகளல்ல
விலையில்லா நட்பதனால்
விளைந்த அனுபவச் செழிப்புதுவே

வாலிபக் கனவுகளை நாம்
பகிர்ந்து வாழ்ந்த விவேகமது
​எழுத மறந்த குறிப்புகளாய்
ஏதேதோ ஞாபகங்கள்

திரும்ப அங்கு சென்று சொல்ல
விரும்பும் கதைகள் ஆயிரம்
நிரம்பி வழியும் உணர்வலைகள்
நெஞ்சில் பாடும் ராகங்கள்

​ஏனின்று இந்தக் கவிதை?
எனக்குள்ளே எழும்பும் வினா
இரவென்றும் பகலென்றும்
ஏனிரண்டு பொழுதுகளென்றும்
என்பம் என்றும் துன்பம் என்றும்
ஏனிரண்டு உணர்வுகள்
விடையதற்கு இல்லையென்றால்
விடையில்லை என் வினாவிற்கும்

​எம் நெஞ்சில் பூத்த
புனிதமான உறவதற்கு
சாத்துகின்ற கிரீடமென்றே
ஏற்றுக் கொள்வாய் இக்கவிதையை

நினைவுகள் சில நேரம்
நிழலென வந்து செல்லும்
நெஞ்சமோ அவற்றை
நித்தம் தழுவிக் கொள்கிறது
பருவங்கள் மாறினாலும்
பாசம் மாறாததே

பார்வையில் பேசாமல்
பிணைந்த அந்த நெருக்கமே
தொலைவில் இருந்தாலும்
தொடர்கின்ற உணர்வுகள்
தோன்றாத கயிறென
தொட்டுணர்த்தும் உறவுகள்

மௌனத்தில் பிறக்கும்
மொழியற்ற சொற்களெல்லாம்
மூச்சோடு கலந்துபோய்
மூலமாய் நிற்கின்றதே

நாளைகள் எத்தனை வந்தாலும்
நம்மிடம் ஒன்று மாறாது
நட்பெனும் அந்த ஒளி
நிழலின்றி நீள்கின்றதே

சக்தி சக்திதாசன்