விடிந்து விட்டதே !
விழிக்கவில்லையே நீ இன்னும்
முடிக்க உனக்கு இருக்கும்
முற்றுப்பெறா பணிகள் ஆயிரம்
மூடியிருக்க இமைகளை கொஞ்சம்
திறந்து பார் உணர்ந்திடுவாய்
பொறுப்புகளை மூட்டை கட்டி
பரணிலே போட்டு விட்டு
அடுத்தவரின் முயற்சியிலே
இருள் கலைந்திடும் என்றே
இத்தனை காலம் இருந்திட்டாய்
இன்னுமா புரியவில்லை
தானாய் எல்லாம் மாறிவிடும்
தீராத கனவுலகில் வாழ்ந்திட்டாய்
சாவியைத் தொலைத்து விட்டு
உன் வீட்டு கதவுகளை
தட்டித் திறக்க பார்கின்றாய்
தவறு உனக்குத் தெரிகிறதா?
வழியிலே விழி வைத்தும்
விடியல் கண்டு கொள்ளாமல்
வாழ்வின் கதவை மூடிக்கொண்டு
வாசல் தேடி அலைந்திடவே
வந்த வாய்ப்பும் கரைந்திடுமே
உணர்வாய் இதுவே உண்மை
நாளையும் நாளை என்றும்
நம்பிக்கையில் தள்ளி வைத்து
நீட்டிப் போடும் நிமிடங்களால்
நிறைந்திடுமோ நிறைவென்று
நினைத்ததெல்லாம் நிழலாகி
நெஞ்சை ஏமாற்றிடுமே
பேசிப் பேசி முடிவதில்லை
போதியதாய் இருந்ததில்லை
செயலின் பாதை காட்டினாலும்
சொல்லில் மட்டும் வாழ்ந்திட்டாய்
காலம் கேட்ட கணக்குக்கு
பதில் எங்கே சொல்வாயோ
தூக்கி வைத்த கனவுகளும்
தூசு படிந்த திட்டங்களும்
திடீரென வந்து நிறைவேறும்
என எண்ணி ஏமாறாதே
தூரம் நீயே பெருக்கியதால்
தொடக்கம் கூட தடைபடும்
இன்று தொடங்கு இம்முறையே
இமைக்கும் முன் எழுந்திடு நீ
இருளை நம்பி நின்றிடாமல்
இலக்கை நோக்கி நடந்திடு
நாளை என்று காத்திருந்தால்
நடப்பதெல்லாம் கரைந்து போகும்
