என்னைத் தேடிய என்னுள்
எனக்கே தெரியாத நான்
எப்படி அங்கே ? அதிசயமே !
எல்லாம் எப்பவோ நடந்தது
சிந்தனைப் பறவை மெதுவாய்
சிறகினை விரித்து பறக்க
சிதறிய எண்ணத் துளிகள்
சித்திரம் வரைந்தே காட்டின
விரிந்த வாழ்க்கை வட்டத்தின்
விட்டத்துள் விழுந்த துளிகளாய்
வழிந்து போன நினைவுச்சுளைகள்
பிழிந்துதந்த சாற்றின் சுவையாய்
இனிக்கும் எந்தன் அனுபவங்கள்
இன்னமும் ஏனோ இதயஒலிகள்
இத்தனை காலம் எப்படியிங்கே
இசைத்தது இத்தகை ராகங்கள்
என்னை மறைத்த மௌனத்தில்
எழுந்து நின்ற ஓர் நிழல் நான்
எதிரில் வந்து நின்றபோது
எனக்கே புதிதாய் தோன்றினேன்
மனத்தின் ஆழக் குளங்களில்
மிதந்த பழைய ஓவியங்கள்
மறந்த கதை சொல்லிவிட்டு
மெல்ல சிரித்துப் போனதே
காலத்தின் காற்று தழுவ
காய்ந்த நினைவு இலைகள்
கண்ணில் விழுந்த தருணத்தில்
கனிந்த சுவையாக மாறின
உள்ளம் ஓடும் ஓசையில்
உருவம் கொண்ட ராகங்கள்
உறங்கிக் கிடந்த உணர்வுகளை
உயிர்த்தெழச் செய்ததேன்
இருளின் இடைவெளிகளில்
இளகும் ஒளி துளிகளாய்
இருந்தேன் நான் எனக்குள்
இன்னும் புதிதாய் பிறந்தேன்
சக்தி சக்திதாசன்
