Friday, May 29, 2026

எனதன்னை சிரிக்கின்றாள் ;

எனதன்னை சிரிக்கின்றாள் ;
என்னோடு இருக்கின்றாள்
​என் எண்ண ஊற்றுக்களில்
தமிழகப் பொழிகின்றாள்

​நான் நடக்கும் பாதையெல்லாம்
நிழலாகத் தொடர்கின்றாள்
​என் மனதிலூறும் கவிதைகளில்
கருத்தாகக் கலக்கின்றாள்

​மடிமீது தவழ்ந்த என்னைத் தமிழ்
மண்மீது போட்டு
​மண்வாசம் ஊட்டியெந்தன்
தமிழ்நேசம் வளர்த்தெடுத்தாள்

​சொல்லூறும் வேளைகளில் தமிழ்த்
தேனாக்கித் தந்து
​சோறில்லாப் பொழுதுகளில்
சோராத வகை செய்தாள்

என் விழியின் ஒளியிலெல்லாம்
வண்ணமாய் விரிகின்றாள்
என் விழித்திரை கனவுகளிலும்
வாசகமாய் நிறைகின்றாள்

என் உயிரின் இசையிலெல்லாம்
இனிமையாய் ஒலிக்கின்றாள்
என் உள்ளத்தின் ஆழமெல்லாம்
உறவாக நின்றிருக்கின்றாள்

என் கண்ணீரின் துளியிலெல்லாம்
கருணையாய் மலர்கின்றாள்
என் கவலையின் இருளிலெல்லாம்
கதிரவனாய் உதிக்கின்றாள்

என் மொழியின் மூச்சிலெல்லாம்
முத்தாகப் பொலிவுறுகின்றாள்
என் மனதின் திசையிலெல்லாம்
முத்தமிழாய் விளங்குகின்றாள்

என் வாழ்வின் வழியிலெல்லாம்
விளக்காக ஏந்துகின்றாள்
என் வரிகளின் உயிரிலெல்லாம்
வேராகப் பதிந்திருக்கின்றாள்

சக்தி சக்திதாசன்