Friday, May 15, 2026

நினைவெனும் ஆழியில்

நினைவெனும் ஆழியில்
நீந்திக் களைத்துப் பின்
கனவெனும் படகெடுத்து
கரையேறும் நேரமிது

​உறவெனும் சங்கிலியால்
உணர்வுகளைப் பிணைத்து
உதிரத்தின் கொதிப்புகளை
உள்ளத்தினுள் அமுக்கி

​பாசமென்னும் புதைகுழிக்குள்
புதைத்து வைத்த சோகங்கள்
மோசத்தின் விளைநிலமாய்
கோஷமிடும் இந் நேரங்கள்

​சுமக்க முடியாச் சுமைகளை
சுமக்கின்ற இதயங்கள் அவை
சுரக்கின்ற ஞானத்தால் இன்று
சுந்தரத் தமிழ்க் கானங்கள்

​வெடிக்கின்ற வேதனைகள் பல
எழுப்புகின்ற ஓலங்கள் ஏனோ
ஓசையின்றி வடிகின்ற விழி
ஓரத்தின் நீர்க்கோலங்கள்

​வாழ்க்கையெனும் வயலிl
விளைவதெல்லாம் துன்பங்களெனில்
வாழ்ந்து விட்ட கணங்களில்
வாங்கி வந்த அனுபவங்கள்

புரியாத புதிராய் இங்கே
புலருகின்ற காலைகள் எல்லாம்
தெரியாத திசையினை நோக்கி
தேய்ந்துவிடும் மாலைகள் ஆகும்

​பகிர்ந்திடத் துடிக்கும் சொற்கள்
பாதியிலேயே முடங்கிப் போக
உதிர்ந்திடத் துடிக்கும் கண்ணீர்
உள்ளுக்குள்ளே உறைந்து போகும்

​வலிகளையே உரமாய் இட்டு
வாடுகின்ற மனதின் தோட்டம்
சலனமில்லாச் சிரிப்பினை மட்டும்
சகலருக்கும் தந்து பார்க்கும்

​காலமெனும் சக்கரத் தடம்
காயங்களைச் செதுக்கிச் செல்ல
கோலமிடும் நினைவுகள் யாவும்
கவிதைவழி உயிர்ப்பைப் பெறும்

​உன் நட்பின் நிழலில் மட்டும்
உலருகின்ற ஈரத் தழும்புகள்
மறுபடியும் வாழ்வதற்கு இங்கே
மனதுக்குத் தெம்பு தரும்!

சக்தி சக்திதாசன்